இராணுவத்தினருக்கான நலன்புரி செயற்திட்டங்களை கையளிக்கும் 'சத்விரு அபிமன்' இராணுவ நலன்புரி விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம்பெற்றது.
இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மைத்திரிபால சிறிசேனா இராணுத்தினருக்கு மேற்கொண்டுவரும் மேலதிக சலுகைகள் தொடர்பில் விபரிக்கப்பட்டுள்ளது.
முப்படையினர், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் இராணுவத்தினருக்காக முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 800 வீடுகளை பூரணமாக்கி வழங்கும் நடவடிக்கை இதன்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இராணுவத்தினரின் பிள்ளைகளுக்காக 279 'விரு சிசு பிரதீப' புலமைப்பரிசில்கள், குடியிருப்பதற்கு காணிகள் இல்லாத இராணுவத்தினருக்கு 84 பகுதியளவு காணித் துண்டுகளை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.
உயிர்நீத்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு வழங்கப்படும் 100 வீடுகளை நிர்மாணிக்க 'நமக்காக நாம்' நிதியத்தின் நிதியுதவியின் கீழ் 15 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் தொழிற் பங்களிப்பு மற்றும் உபகரணங்கள் உள்ளடங்களாக இந்த செயற்திட்டத்தின் மொத்த பெறுமதி 30 கோடி ரூபாய்க்கும் அதிகமானதாகும்.
சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற 500 இராணுவத்தினருக்கு அவர்களது வீட்டு நிர்மாணப் பணிகளை நிறைவடையச் செய்வதற்கு 'நமக்காக நாம்' நிதியத்தின் ஊடாக 35 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
உயிர்நீத்த மற்றும் அங்கவீனமுற்ற 300 இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை நிறைவு செய்ய தேசிய பாதுகாப்பு நிதியினூடாக 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 279 இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் 'விரு சிசு பிரதீப' புலமைப்பரிசில்களுக்காக தேசிய பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக 69 இலட்சத்திற்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளது.
அரச காணிகள் வழங்கும் செயற்திட்டத்தினூடாக கல்னேவ, ரஸ்நாயக்கபுர மற்றும் கொட்டவெஹெர பிரதேச செயலகங்களில் குடியிருப்பு வசதிகளற்ற இராணுவத்தினருக்காக 84 காணித் துண்டுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment