எழுத்தாளரை கொலை செய்ததன்மூலம், சர்வதேச நெருக்கடியில் அரேபியாவின் அரச குடும்பம். பாகம் 1 + 2
சவூதி அரேபிய நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் கொல்லப்பட்ட அல்லது காணாமல்போன விவகாரமே இன்று சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் சவூதி அரேபியாவின் முகமூடி கிழிந்ததனால் பாரிய தலைகுணிவை அது சந்தித்துள்ளது.
எழுத்தாளர் ஜமால் கசோக்கி அவர்கள் உலகத்தில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை நன்கு அறிந்தவர். அத்துடன் இவர் அல்குவைதா இயக்க தலைவராக இருந்த ஒசாமா பின் லேடனினால் அதிகம் விரும்பப்பட்ட ஓர் எழுத்தாளராவார்.
பல தடவைகள் ஒசாமா பின் லாடன் இவரை அழைத்து பேட்டி வழங்கியிருக்கின்றார். அதனால் உலகில் இவர் அதிகம் அறியப்பட்ட ஓர் எழுத்தாளராவார்.
கொல்லப்பட்ட எழுத்தாளர் சவூதி அரேபிய அரச குடும்பத்துக்கெதிராக குறிப்பாக மன்னர் சல்மானுக்கும், முடிக்குரிய இளவரசர் முகம்மத் பின் சல்மானுக்கும் எதிராக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “வாசிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் கட்டுரைகளை எழுதிவருகின்றவராவார்.
இவரது மரணம் பற்றிய உண்மையை கண்டறிந்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் “வாசிங்டன் போஸ்ட்” பத்திரிகை அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றது.
சவூதி அரேபியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி அங்கு நிறுவப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தை எழுத்தாளர் ஜமால் கசோக்கி அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இவரது பிரச்சாரத்தினால் தங்களது ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பலைகள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மன்னர் குடும்பத்தினர்களுக்கு ஏற்ப்பட்டுள்ளது.
இவர் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புலில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானதும், ஆரம்பத்தில் சவூதி அரசாங்கம் அந்த செய்தியை மறுத்திருந்தது.
எவ்வளவுதான் மறுத்தாலும், கொலையாளிகளின் புகைப்படத்துடன் கூடிய ஆதாராங்கள் வெளிவந்ததுடன் தனது உற்ற தோழமை நாடான அமெரிக்காவின் அதிபரே இந்த விவகாரத்தினை பகிரங்கமாக கண்டித்திருந்தார்.
அத்துடன் இந்த கொலை விவகாரத்தினால் சவூதி அரேபியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வலுவடைந்துகொண்டு வருகின்றது.
இதனால் வேறு வழியின்றி தனது தூதரகத்தில் வைத்தே அந்த கொலை நடந்ததை சவூதி அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனாலும் அது சவூதி அரசாங்கத்தின் கட்டளைகளின் பேரில் கொல்லப்படவில்லை என்றும், அது பற்றி விசாரிப்பதாக கூறி பதினெட்டு சந்தேக நபர்களை சவூதி அரசு கைது செய்ததாக அறிவித்துள்ளது. ஆனால் எங்கே வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று அறிவிக்கப்படவில்லை.
அமெரிக்காவில் வசித்து வருகின்ற எழுத்தாளர் ஜமால் கசோக்கி அவர்கள் ஏற்கனவே தனது நாட்டு பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவர் மீண்டும் துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக விவாகரத்து பத்திரத்தை கோரி விண்ணப்பித்திருந்தார்.
ஜமாலின் எழுத்துக்களால் மிகவும் ஆத்திரமடைந்த சவூதி ஆட்சியாளர்கள், இவரை தீர்த்துக்கட்டும் பொருட்டு இவரது விவாகரத்து பத்திர கோரிக்கையை தனக்கு சாதகாமாகவும், சந்தர்ப்பமாகவும் பயன்படுத்தியுள்ளார்கள்.
அதாவது கடந்த இரண்டாம் திகதி இஸ்தான்புலில் உள்ள சவூதி தூதரகத்துக்குள் வந்து தனது விவாகரத்து பத்திரத்தினை பெற்றுக்கொள்ளுமாறு ஜமாலுக்கு அறிவித்துவிட்டு, அதே தினத்தில் தூதரகத்தினுள் வைத்து இவரை கொலை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
இதற்காக பாதுகாப்புத் துறையில் பணிபுரிகின்ற மன்னர் குடும்பத்தின் விசுவாசத்துக்குரிய பதினைந்து பேர்கள் கொண்ட குழுவினர் சவூதியிலிருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட இரண்டு தனியார் விமானங்கள் மூலமாக இஸ்தான்புலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
இவர்கள் தங்குவதற்காக இஸ்தான்புலில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நான்கு நாட்களுக்காக அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இவர்கள் வந்த முதல் நாளே காரியம் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதனால், அதே தினத்திலேயே அந்த பதினைந்து பேர்களும் நாடு திரும்பிவிட்டார்கள்.
சவூதி தூதரகத்துக்குள் பிரவேசிக்கும் முன்பே எழுத்தாளர் ஜமாலுக்கு உள்மனதில் ஒருவித அச்சம் இருந்தது. இதனால் காதலியிடம் இருந்த அப்பிள் போனில் தனது ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினூடாக இணைப்பினை ஏற்படுத்திவிட்டு, காதலி வெளியே காத்துக்கொண்டிருக்க இவர் தூதரகம் உள்ளே சென்றார்.
தூதரகத்தினுள் எழுத்தாளர் சித்தரவதை செய்யப்பட்டது மற்றும் அவர் அழுகின்ற சத்தம் தொடக்கம் கொல்லப்பட்டது வரைக்குமான குரலோசைகள் சில நிமிடங்கள் வரைக்கும் காதலியிடம் இருந்த போனில் பதிவாகியுள்ளது.
ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஊடாக பதிவான விடயம் பின்புதான் கொலையாளிகளுக்கு தெரியவந்தது. அதனால் கொல்லப்பட்டவரின் கையிலிருந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் மூலமாக பதிவாகியதை அழிப்பதற்கு கொலையாளிகள் கடுமையாக முயன்றும் அது முடியவில்லை.
இதன் காரணமாகவே சவூதி தூதரகத்தில் கொலை நடந்த விடயத்தினை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளும் நிலை சவூதி அரசுக்கு ஏற்பட்டது.
இந்த கொலையாளிகள் அனைவரிடமும் ராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் இருந்ததனால் அவர்கள் விமான நிலையத்தின் VIP கடவை வழியாகவே வந்து அதே வழியாகவே சென்றுள்ளார்கள். செல்லும்போது அவர்களிடம் பயணப் பைகள் இருந்தது. அவர்களது பயணப்பைகள் பரிசோதிக்கப்படவில்லை. சிலநேரங்களில் அந்த பைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்திருக்கலாம் என்று துருக்கி புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றார்கள்.
எழுத்தாளர் ஜமாலின் தலையை கொண்டுவர வேண்டும் என்று இளவரசர் முஹம்மத் பின் சல்மான் உத்தரவிட்டிருந்ததாக அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததே இந்த சந்தேகத்துக்கு காரணமாகும்.
இந்த கொலை நடைபெற்று இரண்டு வாரங்களின் பின்பு குறிப்பிட்ட பதினைந்து கொலையாளிகளில் ஒருவரான சவூதியின் ரோயல் விமானப்படையின் லெப்டினன்ட் தர அதிகாரியான அல் வஸ்தானி என்பவர் சவூதியில் நடைபெற்ற கார் விபத்தில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரது விபத்து பற்றிய காணொளியோ அல்லது விபத்து நடைபெற்ற இடமோ காண்பிக்கப்படவில்லை.
இதிலும் சந்தேகம் எழுகின்றது. அதாவது உண்மையில் இவர் விபத்தில் கொல்லப்பட்டாரா ? அல்லது இவர் பிரதான சாட்சி என்பதனால் அதனை மறைக்கும்பொருட்டு மரணித்ததாக அறிவிப்பு செய்யப்பட்டதா ? அல்லது சவூதி அரசாங்கமே இவரை கொலை செய்ததா ? போன்ற கேள்விகள் எழுகின்றது.
இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய பதினான்கு பேரினது நிலைமை என்னாகும் ? இவர்களும் எதிர்காலத்தில் காணாமல் போவார்களா ? அல்லது கொல்லப்படுவார்களா ? என்ற சந்தேகமும் எழுகின்றது.
தொடரும்.................... முகம்மத் இக்பால்
0 comments :
Post a Comment