Friday, October 5, 2018

டக்ளசுக்கு முதலமைச்சராக வர விருப்பமாம்.

ஈபிடிபி என்ற ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தனக்கு வட மாகாண சபையின் முதலமைச்சராக வர விருப்பமுள்ளதாக தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் தனது விருப்பை தெரிவித்துள்ள அவர் பன்னெடுங்காலங்களாக மத்தியின் நிர்வாத்தில் இருந்ததாகவும் தற்போது ஓர் மாற்றத்திற்கு காலம் கனிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உச்சக்கட்ட பிளவு காணப்படுகின்றது என்றும் அவர்கள் பொது வெளியிலே ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்கின்றனர் என்றும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, அது தனக்கு சாதகமான நிலையை தோற்றுவிக்கும் என நம்புகின்றார்.

கடந்த காலங்களிலும் இவ்வாறான பிளவுகள் காணப்பட்டது, ஆனால் தேர்தலை எதிர்கொள்ளுகின்றபோது அவற்றை சமாளித்து த.தே.கூ வினர் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என கேட்கப்பட்டபோது:

அக்காலகட்டங்களில் புலிகள் அமைப்பு இருந்தது. அவர்கள் இப்போது இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு முடையில் போட்டு இறுக்கிகட்டி வைத்த உருளைக் கிழங்கு போன்ற அமைப்பு. இப்போது மூட்டை அவிழ்த்து விடப்பட்டுள்ளது. உருளைக்கிழங்குகள் சிதறிக்கிடக்கின்றது. அவற்றை பொறுக்கி ஒன்று சேர்க்க எவரும் தற்போது இல்லை என்றும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment