Tuesday, October 16, 2018

இராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன

கடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான பொடியப்பு பியசேன தெரிவித்தார்.

நாவிதன்வெளியை சேர்ந்த இளையோர்களை இவரின் அக்கரைப்பற்று அலுவலகத்தில் சனிக்கிழமை காலை சந்தித்து பேசியபோதே பியசேன இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

யுத்தத்தில் எந்த தரப்பும் பூ பறித்து கொண்டு இருப்பதில்லை. ஆகவே இராணுவத்தை தண்டிக்க வேண்டும், முன்னாள் புலிகளை மன்னிக்க வேண்டும் என்று தமிழர்கள் கொண்டிருக்கின்ற நிலைப்பாடு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒருபோதும் விடுதலையை பெற்று தராது என்பதே யதார்த்தமான நிலைவரம் ஆகும்.

ஆகவேதான் இராணுவம் போர் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் வரை சென்று குரல் கொடுக்கின்ற சம நேரத்தில் உள்நாட்டில் முன்னாள் புலிகளுக்கு பொது மன்னிப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழர்கள் கோருவது முற்றிலும் அர்த்தம் அற்ற விடயம் என்று நாம் அழுத்தி கூறுகின்றோம்.

ஏனென்றால் அரச படைகள் தண்டனை பெற்று உள்ளே செல்வதையும், போராளிகள் மன்னிப்பு பெற்று வெளியே வருவதையும் எந்த அரசும் கற்பனையில்கூட அனுமதிக்க மாட்டாது.

நாட்டுக்காக போராடிய இராணுவத்தை கதாநாயகர்களாகவே அரசாங்கமும், பெரும்பான்மை சமூகமும் பார்க்கின்றன. தனிநாட்டுக்காக போராடிய விடுதலை புலிகளை அரசாங்கமும், பெரும்பான்மை சமூகமும் மாத்திரம் அன்றி சர்வதேசமும் பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றன. எனவே தமிழ் அரசியல் கைதிகள் என்கிற மாயாஜால வார்த்தை பிரயோகம் முன்னாள் புலிகளுக்கு எந்த விமோசனத்தையும் பெற்று தராது.

மறப்போம், மன்னிப்போம் என்கிற பரந்து விரிந்த கோட்பாட்டை தமிழர் தரப்பு வரித்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென்றெடுக்க முடியும். மாறாக பிச்சைக்காரனின் புண்ணை போல பிரச்சினையை நீடிக்க வைத்து கொண்டு அரசியல் செய்கின்ற தமிழ் தேசிய தலைமைகளின் வழிமுறை மூலமாக தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலை கிடைக்க போவதே இல்லை.

No comments:

Post a Comment