குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு செல்வீர்! ஹிஸ்புல்லாவிற்கு நீதிமன்று உத்தரவு.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பிரதேசத்தில் சவூதிஅரேபிய நிதி உதவியின் கீழ் தனியார் பல்கலைக் கழகமொன்று நிர்மானிக்கப்பட்டு வருகிறது.
குறித்த கட்டிடப்பணிகளுக்காக லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்துடன் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து பிறிதொரு கட்டுமானப் பணிகள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், நிறுவனத்தின் தலைமையை பொறுப்பேற்றிருந்த பிரதி அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நிர்மாணப் பொருட்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தாஹீர், அபுல்ஹசன் மீது லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்தவினால் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே பிரதிவாதிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நால்வரும் எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு காலை 9.00 மணிக்கு சமூகமளித்து தங்களது வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
100 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் 2018.08.14 ஆம் திகதி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment