கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் கட்டப்படுகின்ற இந்து ஆலயத்தை இடிக்க உத்தரவிட கோரி கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ. எம். றஹீப் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.
இவரின் சமர்ப்பணம் கல்முனை மேலதிக நீதிவான் பயாஸ் ரஸாக் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை செவிமடுக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்படாமல் கட்டப்படுகின்ற சட்டவிரோத கட்டிடம் இது என்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை கையளித்து உள்ள அதிகாரத்தின்படி இக்கட்டிடத்தை இடிக்க கோருகின்ற உரிமை அவருக்கு உள்ளது என்றும் முதல்வர் றஹீப் சார்பாக நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இச்சட்டவிரோத கட்டிடத்தின் நிர்மாணத்தை ஆட்சேபித்து இவரால் அனுப்பப்பட்ட இரு கடிதங்களுக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலாளரால் பதில் விளக்கம் தரப்படாத நிலையிலேயே நீதிமன்றத்தை நாடி வந்து உள்ளார் என்றும் சமர்ப்பணத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவரின் சமர்ப்பணத்தில் கூறப்பட்ட விடயங்களில் திருப்தி கண்டு உள்ளதாக நீதிமன்றம் அறிவித்தது. குறிப்பாக இவருக்கு உள்ள சில அதிகாரங்களின்படி இவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தமிழ் பிரிவு பிரதேச செயலாளரால் உதசீனம் செய்யப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் வந்து உள்ளார் என்று கண்டு கொண்டது.
இருப்பினும் இக்கட்டிடம் ஏன் இடிக்கப்பட கூடாது? என்று ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க தமிழ் பிரிவு பிரதேச செயலாளருக்கு இரு வார கால அவகாசம் வழங்குவதாக அறிவித்து இதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி தமிழ் பிரதேச செயலாளர் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை பிறப்பித்தது.
கல்முனை மாநகர முதல்வரை ஆதரித்து சட்டத்தரணிகளான ரொஷான் அத்தார், முஹைமீன் காலித் , அன்ஸார் மௌலானா ஆகியோரும் ஆஜரானார்கள்.
ஆனால் கல்முனை பிரதேச செயலகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தொடர்பாகவோ அன்றில் குறித்த கட்டிடமானது இந்துக்களின் ஆலயமாகவுள்ளதால் அதற்கான அனுமதி வழங்கப்படவேண்டும் என வாதிடுவதற்காக இதுவரை எந்த தமிழ் சட்டத்தரணிகளோ, அன்றில் அரசியல் கட்சிகளோ தமது சட்டத்தரணிகளை முன்நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment