கொலைச்சதி தொடர்பாக தன்னிடமும் தகவல்கள் உண்டாம்! பொலிஸ் மா அதிபர்.
பொலிஸ் திணைக்களம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்கின்றார் ஜனாதிபதி.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஆகியோரை மட்டக்களப்பிற்கு செல்கின்றபோது அங்கு கொலை செய்து புஸ்பராஜ் என்கின்ற அரசியல்வாதி ஒருவர் மேல் பழியை போடமுடியும் என பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, மோசடி ஒழிப்பு முன்னணி எனப்படுகின்ற அமைப்பொன்றின் தலைவரான நாமல் குமாரவிற்கு ஆலோசனை வழங்கினார் என்ற தகவல் நாட்டில் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டிய பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் இவ்வாறு செயற்பட்டமை தொடர்பில் மக்கள் கடும் விசனமடைந்துள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பாக தன்னிடமும் பல்வேறு தகவல்கள் உள்ளதாகவும் அவை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர.
இந்நாட்டின் பொலிஸ் மா அதிபராக இவ்விடயம் தொடர்பில் தனது வாய்முலத்தை வழங்குவது தனது கடமை என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனது வாய்மூலத்தையும் பெற்றுக்கொள்வேண்டுமென விரும்புவதாக அரச செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் பொருத்தமற்ற செயற்பாடுகளினால் மக்கள் பொலிஸ் திணைக்களம் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்த நிலைமையை துரித கதியில் சரி செய்து கொள்ள வேண்டுமெனவும், பொலிஸார் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இழப்பானது ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் குற்றச் செயல்கள், கொள்ளைகள், ஊழல் மோசடிகள் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றமை தொடர்பில் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்தா என்பதனை மீளாய்வு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பொலிஸார் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமையினால் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் உருவாகியுள்ளதாகவும், இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு எட்டப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை அந்த குற்றச் செயல்களை ஊக்குவிப்பதற்கு நிகரானதாகும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி இவ்வாறு பொலிஸ் மா அதிபரை விமர்சனம் செய்த போது அமைச்சர்கள் எவரும் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment