வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள பொலீஸாரின் பாதுகாப்பினையே கோருகின்றனர் என வட மாகாண ஆழுநர் ரெஜினோல்ட கூரே தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி அம்பாள்குளம் பாடசாலையில் இடம்பெற்ற தரம் ஜந்து புலமை பரிசில் பரீடசையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் :
தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் பொலிஸாரை நிராகரிக்கின்றனர். அதற்கான காரணம் அவர்கள் சிங்களப் பொலிஸாரே நம்பிக்கையானவர்கள் என்றும் தமிழர் நம்பிக்கையற்றவர்கள் என்றம் கூறுகின்றனர்.
அரசியல் வாதிகள் மக்களிடம் உண்மையை பேசுவது கிடையாது. அவர்கள் தங்களின் தேர்தல் வெற்றிக்களுக்காக தவறான கருத்துக்களை பேசி வருகின்றார்கள்.
தமிழ் மக்களிலுள்ள செல்வந்தர்களும், படித்தோரும் கொழும்பில் வெள்ளவத்தை போன்ற இடங்களில் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். திருமணமும் செய்துகொண்டுள்ளனர.; ஆனால் ஏனைய தமிழ் மக்கள் அவ்வாறு நடந்துகெண்டால் அதனை தவறு என்கின்றனர்.
தமிழ் - சிங்கள மக்களும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ்வதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே எனது ஒரே ஒரு நோக்கம்.
அதிகாரம் வேண்டும் அடையாளம் வேண்டும் என்று போராடும் அதே தருணத்தில் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி கொண்டுவர முயலவேண்டும். அப்போது மக்களின் வாழ்வில் சுபிட்சம் நிலவும்.
நானும் எனது தாய் தந்தையரும் மலையகத்தில் தேயிலைத் தோட்டத்திலே பணிபுரிந்தவர்கள். அம்மக்களின் வேதனை துக்கம் அனைத்தையும் சிறுவயது முதலே நான் நன்கறிந்தவன். அந்த வகையில் இங்கு வாழ்கின்ற அங்கிருந்து வந்த மக்களின் மனநிலைகளை அறிந்து கொண்டுள்ளேன். எனவே அவர்களின் மேம்பாட்டுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று குறிப்பிட்டார் ரெஜினோல்ட கூரே.
No comments:
Post a Comment