Monday, October 8, 2018

கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இன்டர்போல் தலைவர் பெய்ஜிங் சிறையில்! ராஜனாமா கடிதம்.

சர்வதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் காவல்அமைப்பான இண்டர்போல் தலைவர் பற்றியே மர்மமான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இண்டர்போல் தலைவர் பொறுப்புவகித்து வந்த மெங் ஹாங்வெய் ராஜினாமா செய்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காவல் அமைப்பான இண்டர்போலுக்கு முதன்முறையாக சீனாவிலிருந்து மெங் ஹாங்வெய் என்பவர் பொறுப்பை ஏற்றார். அவர் ஒரு முறை சீனாவில் பொது பாதுகாப்பு துணை அமைச்சராகப் பணியாற்றினார். குற்றவியல் நீதி மற்றும் காவல் ஆகிய துறைகளில் 40 ஆண்டுகால அனுபவம் அவருக்கு உண்டு.

செப்டம்பர் 28 வெள்ளியன்று பிரஞ்சு அதிகாரிகள் அவரது காணாமல் போன செய்தியை வெளியிட்டனர்.

உயிருக்கு ஆபத்து

அதேநாளில் சமூக வலைதளம் வாயிலாக தனது கணவர் தனக்கு ஒரு தகவல் பரிமாறிக்கொண்டதாக மெங்கின் மனைவி தெரிவித்துள்ளார். அதில் ''பிறகு தொலைபேசி செய்கிறேன்'' ஒரு பதிவு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தகவல் வருவதற்கு முன்பு ஆபத்தைத் தெரிவிப்பதற்கு அடையாளமாக சமையலறையில் இறைச்சிவெட்ட பயன்படுத்தும் கத்திப்படத்தை அனுப்பியதாக தெரிவித்த அவரது மனைவி, தனது கணவரின் உயிருக்கு ஆபத்து என்று தான் அச்சப்படுவதாகவும் தெரிவித்தார்.

அவர் காணாமல் போன செய்தியை இண்டர்போல் வெளியிட்டதிலிருந்து எதுவும் பேசாமல் இருந்த பெய்ஜிங், பின்னர் மெங்கை சிறையில் அடைத்துள்ளதாக ஒப்புக்கொண்டது.

நேற்று ஒரு வரி அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ள பெய்ஜிங் அதில் ''அவர்மீது நடைபெற்று வரும் விசாரணையின்படி அவர் சட்டத்தை மீறியுள்ளதாக தாங்கள் சந்தேகிக்கிறோம்'' என்று தெரிவித்தது.

சீனாவின் பொது பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சராக இருக்கும் மெங், செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியன்று இண்டர்போல் அமைந்திருக்கும் ஃபிரான்ஸின் லியான் நகரில் இருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்டபோது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

அவசர நடவடிக்கையாக தலைமையிடத்திலிருந்து அவரின் ராஜிநாமா கடிதம் வந்ததாக இண்டர்போல் தெரிவித்துள்ளது.

பொதுத்துறை ஊழியர்கள் ஊழல் உட்பட அனைத்து ஊழல் விவகாரங்களை கவனித்து வரும் சீனாவின் தேசிய மேற்பார்வைக் குழு மெங்கை தாங்கள்தான் பிடித்து வைத்திருப்பதாக தங்களின் வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

பல உயர்மட்ட அரசு அதிகாரிகள், பில்லியனியர்கள், மேல்நிலை நட்சத்திரங்கள் என பலர் சமீபத்தில் சீனாவில் காணமல் போயுள்ளனர் அந்த வரிசையில் மெங்கும் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் சட்டத்தை மீறிய வகையில் அவர் தொடர்ந்து இண்டர்போல் பதவியில் இருக்கக் கூடாது என்று எதிர்ப்புகளும் எழுந்தன.

விலகாத மர்மம்

அதனைத் தொடர்ந்து அவரது ராஜினாமா கடிதம் இண்டர்போல் அலுவலகத்திற்கு நேற்று இரவு வந்துள்ளது. அவர் எப்படி காணாமல் போனார் யார் அழைத்துச் சென்றனர். பெய்ஜிங் எதற்காக அவரை கைது செய்து விசாரணை செய்துவருகிறது போன்ற தகவல்கைள் மர்மமாகவே உள்ளன.

புதிய தலைவர்

இந்நிலையில் தற்போதுள்ள பதவிக்காலத்தின்படி மீதமுளள இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு புதிய இண்டர்போல் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டம் துபாயில் வரும் நவம்பர் 18லிருந்து 21 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment