Thursday, October 11, 2018

நாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.

வெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலரை கொலை செய்யத்திட்டம் தீட்டியதாக வெளியான தகவல்கள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், வெளியிடப்பட்ட தொலைபேசி சம்பாசனைகளில் பேசியிருப்பது பிரதிப் பொலிஸ் மா அதிபர் தானா என்பதை அராயுமாறு அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.

குறித்த இருவரதும் குரல் மாதிரிகளை பெற்று பரிசோதனை செய்த அரச பகுப்பாய்வுத்திணைக்களம், வெளியிடப்பட்ட குரல் டிஐஜி மற்றும் நாமல் குமாரவினுடையதே என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தினரின் அறிக்கையை சீஐடி யினர் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.

இதேநேரம் இன்று மேலும் சில ஒலிப்பதிவுகளை வெளியிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல்குமார தன்னிடமுள்ள மேலும் பல பதிவுகளை சீஐடி யினருக்கு வழங்கவுள்ளதாகவும் அவற்றில் பல அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர் தேசத்திலுள்ள சிலரது விடயங்களும் அடங்குமெனவும் அவர் கூறியுள்ளது.


அத்துடன் குறித்த சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையுடன் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்சவிற்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அம்பலப்படுத்திய நாமல் குமார என்ற நபருடன் தொடர்பு பேணிய இந்தியர், பல்வேறு சந்தர்ப்பங்களில் விமல் வீரவன்சவின் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி ஷசி வீரவன்சவை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

விமல் வீரவன்சவை சந்திக்கும் நோக்கில் அவரது மனைவியை தாம் சந்தித்ததாக குறித்த இந்தியர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் உயிருக்கு ஆபத்து என பத்திரிகைகளின் வாயிலாக அறிந்து கொண்டதாகவும் இது குறித்து பேசும் நோக்கில் தாம் விமல் வீரவன்சவை சந்திக்க முயற்சித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த நபரின் சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியவை எனவும், இந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்திக் கொள்ள ஷசி வீரவன்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் இந்த இந்தியர் முன்னதாக கூறியிருந்தார்.

குறித்த இந்தியர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment