சமூகம் என்ற போர்வையில் அதாஉல்லாவினால் விதைக்கப்படுகின்ற பிரதேசவாத நச்சு விதைகள்.
அரசியல்வாதிகளில் சிலர் தூரநோக்கில் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்வதற்கும், நிரந்தரமான வாக்கு வங்கிகளை தனது ஊரில் உருவாக்கிக்கொள்வதற்கும் பயன்படுத்தும் ஓர் கருவிதான் பிரதேசவாதமாகும்.
இந்த பிரதேசவாதம் என்னும் கொடூர நோயினால் சமூகத்துக்குள் ஒற்றுமை இழந்து பிளவுகளும், பிரிவினைகளும், கருத்து வேறுபாடுகளும் அதிகரித்து எமது சிறுபான்மை சமூகம் பலயீனம் அடைந்துவிடும் என்ற எந்தவித கவலைகளும் இந்த அரசியல்வாதிகளிடம் இல்லை.
சிலர் தனது பிரதேசவாத சிந்தனைகளை வெளிப்படைகாக தனது ஊர் மக்களிடத்தில் விதைப்பார்கள். ஆனால் வேறு சிலர் வெளிப்படைகாக சமூகம் என்று பேசினாலும் அவர்களது செயல்பாடுகள் மூலமாக பிரதேசவாத போக்கினை புரிந்துகொள்ள முடியும்.
அந்தவகையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் தனது பிரதேசவாத சிந்தனைகளை மிகவும் தந்திரமாக செயல்படுத்தி வருவது நீண்டகாலமாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையாக இருந்த அக்கரைப்பற்று பிரதேசம் பின்னாட்களில் அங்கு மு.கா செல்வாக்கு இழப்பதற்கு பிரதேசவாத நடவடிக்கையே முதல் காரணமாகும்.
அன்று மர்ஹூம் அஸ்ரப் மீதுள்ள கோபத்தினால் கல்முனையான் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் அமரவிடகூடாது என்று சேகு இஸ்ஸதீனால் ஆரம்பிக்கப்பட்ட வெளிப்படையான பிரதேசவாத சிந்தனையை பின்னாட்களில் வந்த அதாஉல்லா மிகவும் கட்சிதமாகவும், தந்திரமாகவும் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்.
சேகுஇஸ்ஸதீன், அதாஉல்லா ஆகியோருக்கிடையில் அரசியலில் நீண்டகால பகைமையும், ஏட்டிக்கு போட்டியான அரசியல் காணப்பட்டாலும், பிரதேசவாத சிந்தனைகளை அக்கரைபற்று மக்கள் மத்தியில் விதைக்கின்ற விடயத்தில் அவர்களிடம் ஒற்றுமையே காணப்படுகின்றது.
அந்தவகையில் கல்முனையை பிரித்தாளும் மிகவும் தந்திரமான நடவடிக்கையை தனது சாதூர்யமான அரசியல் காய் நகர்த்தல்கள் மூலமாக தொடர்ந்து அதாஉல்லாவினால் கையாளப்பட்டு வருகின்றது. அதற்காக எடுத்துக்கொண்ட துரும்புதான் சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்ற விவகாரமாகும்.
சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகின்ற தனியான உள்ளூராட்சிமன்ற விவகாரத்தினை பயன்படுத்தி, கல்முனையை பிரித்தாளும் தனது அரசியல் தந்திரோபாயத்துக்கு மிகவும் கட்சிதமாக அதாஉல்லா காய்நகர்த்துகின்றார் என்பது சாய்ந்தமருது மக்களினால் புரிந்துகொள்ள முடியாதது வேடிக்கைதான்.
மகிந்த ராஜபக்சவின் தம்பி என்று செல்லமாக அழைக்கப்பட்ட அதாஉல்லா அவர்கள் மகிந்தவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் உள்ளூராட்சிமன்ற மாகாணசபைகள் அமைச்சராக இருந்தபோது, ஒரு பிரதேச சபையாக இருந்த தனது ஊரை இரண்டு சபைகளாக பிரித்து அதில் ஒன்றை மாநகர சபையாக தரம் உயர்த்தி தனது அதிகாரத்தை காண்பித்தபோது, சாய்ந்தமருதுக்கும் சேர்த்து தனியான சபையை வழங்கி இருக்கலாம். வழங்கி இருந்தால் அதனை தடுப்பதற்கு அன்று யாரு இருக்கவில்லை.
ஏனென்றால் 2012 ஆம் ஆண்டில்தான் முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவின் அரசுடன் இணைந்தது. 2010 தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரைக்கும் உள்ளூராட்சி அமைச்சராக அதாஉல்லா பதவி வகித்தபோது, முஸ்லிம் காங்கிரஸ் எதிர்தரப்பு வரிசையில் இருந்தது. சாய்ந்தமருதுக்கான தனியான சபையின் கோரிக்கை வலுப்பெற்று இருந்த காலம் அதுவாகும்.
ஆனால் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு செய்ததன்பின்பு தேர்தல் ஆணையாளரிடம் அதிகாரம் இருந்த நிலையில், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சிமன்றம் வழங்கப்படும் என்று அமைச்சர் அதாஉல்லா பகிரங்கமாக அறிவிப்பு செய்திருந்தார்.
இந்த அறிவிப்பினை உண்மை என்று நம்புவதற்கும் சில பிரமுகர்கள் சாய்ந்தமருதில் இருக்கத்தான் செய்தார்கள்.
இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் கல்முனையை நான்கு சபைகளாக பிரித்து அதில் மருதமுனைக்கும் ஒரு சபை வழங்கப்படும் என்று மருதமுனை மக்களுக்கு ஆசைவார்த்தை காட்டியிருந்தார். கல்முனையை துண்டாடும் அதாஉல்லாவின் அரசியல் தந்திரோபாயத்துக்கு வலு சேர்க்கும்விதமாக மருதமுனை மக்களையும் களத்தில் இறக்குவதுதான் அதன் நோக்கமாக கருதப்பட்டது.
தடயங்கள் தொடரும்..............................
முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது
0 comments :
Post a Comment