Friday, October 26, 2018

குற்றவாளிகளை நான் ஒருபோதும் அரசியல் கைதிகளாக கருதமாட்டேன். மாற்று வழி இருந்தால் கூறுங்கள். தலதா

“நீதிமன்ற தீர்ப்புக்களிற்கு முரணாக என்னால் செயற்பட முடியாது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நீதிப்பொறிமுறைகளிற்கு வெளியில் ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்று பார்த்து கூறுங்கள்“- இப்படி கேட்டிருக்கிறார் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரள.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றிய போதே, இந்த கோரிக்கையை இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரிடம் விடுத்தார்.

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கையை நான் உதாசீனம் செய்யவில்லை. 103 கைதிகளின் வழக்குகள் விசாரணையில் உள்ளன. வழக்கு விசாரணைகளில் ஏற்படும் தாமதம் பாரதூரமான பிரச்சனையாக உள்ளது. ஒரு நீதிபதி 400 வழக்குகளை விசாரிக்க வேண்டியுள்ளது.

103 கைதிகளில் 54 பேர் பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களாக உள்ளனர். இவர்களில் 6 பேர் சிங்களவர்கள். 3 பேர் முஸ்லிம்கள். லக்ஷ்மன் கதிர்காமர் கொலை, சரத் பொன்சேகா கொலை முயற்சி, ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே கொலை, விமானங்களை கடத்தியமை, இராணுவ பிரதானிகளை கொல்ல முயன்றமை, தலதா மாளிகை குண்டு வெடிப்பு போன்ற பெரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை எப்படி அரசியல் கைதிகளாக கருத முடியும்?

எனவே, ஒருபோதும் அவர்களை நான் அரசியல் கைதிகளாக கருத மாட்டேன். நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக என்னால் செயற்பட முடியாது. எனவே, இக் கைதிகளின் விடுதலைக்கு நீதிப்பொறிமுறைக்கு அப்பால் வேறு ஏதாவது வழிமுறைகள் இருந்தால் கூறும்படி எதிர்க்கட்சி தலைவரையும், சுமந்திரன் எம்.பியையும் கோருகிறேன்“ என்றார்.

No comments:

Post a Comment