Tuesday, October 2, 2018

50 கோடி ரூபா ஊழியர் சேமலாப நிதியிலிருந்து மாயம். ஆணைக்குழுமுன் கைகட்டி நிற்கும் அதிகாரிகள்

எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடமிருந்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனப் பங்குகளைக் கொள்வனவு செய்ய ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 500 மில்லியன் ரூபாவை சட்ட விதிகளை மீறிப் பயன்படுத்தப்பட்டதாக மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் பொறுப்பதிகாரியான நாளினி மல்காந்தி பண்டார ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பல ஆவணங்களையும் அவர் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறார். கடந்த 2010 இல் இந்தப் பங்குகளை மீட்டெடுக்கப் பணம் பெறப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நேற்றுக்காலை கூடிய போது ஊழியர் சேமலாப நிதியத்தின் பொறுப்பதிகாரி நாளினி மல்காந்தி பண்டார நேற்று சாட்சியமளித்தார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நீல் உனம்புவவின் கோரிக்கையின் பேரில் சாட்சியமளித்த நாளினி மல்காந்தி, மேற்படி நிதியை பயன்படுத்த விடுத்த கோரிக்கைகள் தொடர்பில் எந்தவித சிபாரிசும் இல்லாமல் நிதி அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பான எந்தவிதமான ஆவணங்களும் கிடையாதெனவும் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை வங்கியின் மேலதிக பொது முகாமையாளரான பி. ஏ. லயனல் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலரது நிலைப்பாட்டுக்கு அமையவே இது இடம்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊழியர்களுக்குச் சொந்தமான ஊழியர் சேமலாப நிதியிலிருந்து ஏதாவதொரு தேவைக்காக முதலீடு செய்யப்பட வேண்டுமாக இருந்தால் அதனை செய்ய மத்திய வங்கி ஆளுநருக்கே உரியது. அன்றைய காலகட்டத்தில் அதனைச் செய்ய வேண்டியவர் ஆளுநராகவிருந்த அஜித் நிவாட் கப்ராலாவார் என்றும் அவர் தெரிவித்தார். ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்னவின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே சாட்சி இவ்வாறு கூறினார்.

ஆணைக்குழுவின் உறுப்பினரொருவரான ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த சாட்சி தெரிவிக்கையில், ஊழியர் சேமலாப நிதியிலிருந்து எந்த முதலீட்டுக்கும் அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவைக்குக் கூட முடியாது. அதனை மத்திய வங்கியின் நிதிச்சபை மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீல் உனம்புவ, விசாரணையில் மேலும் சாட்சியமளித்த நாளினி மல்காந்தி பண்டார மேலும் தெரிவித்ததாவது-

ஊழியர் சேமலாப நிதியிலிருந்து எமிரேட்ஸ் பங்குகளை கொள்வனவு செய்ய பயன்படுத்துமாறு அமைச்சரவையோ திறைசேரியோ அனுமதி வழங்கவில்லை.

2010ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி அன்றைய நிதியமைச்சராக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எமிரேட்ஸ் பங்குகளை கொள்வனவு செய்ய அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த விபரம், 43.63 வீதமான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை வங்கியும், காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் ஊழியர் சேமலாப நிதியின் மூலம் கொள்வனவு செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

2010 ஜூலை 6ஆம் திகதி இலங்கை வங்கியின் மேலதிகப் பொது முகாமையாளர் பி. ஏ. லயனல் எழுத்து மூலம் இலங்கை மத்திய வங்கியின் நிதி முகாமைத்துவ குழுவுக்கு ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 500 மில்லியன் ரூபாவை பங்குகளைக் கொள்வனவு செய்ய இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் நடைமுறை கணக்குக்கு செலுத்துமாறு கூறியிருந்தார். அதன் பிரகாரமே அது நடந்துள்ளது. உடன்படிக்கையோ சட்டபூர்வமான எழுத்தாவணங்களோ அதில் காணப்படவில்லை. அத்துடன் இது நடந்ததா என்பது குறித்த ஆவணங்களும் கோப்புகளில் கிடையாது. 1.8 மில்லியன் பங்குகளை ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பெற்றுத் தரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற உயர்நிதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன தலைமையில் ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் எச். ஜி. ஏ. ஹெரல்ட் உட்பட ஸ்ரீலங்கன் விமான சேவை, ஸ்ரீலங்கன் கேட்டரிங், மிஹின் லங்கா நிறுவனம் உள்ளிட்ட உயரதிகாரிகள் முன்னிலையிலேயே இந்த சாட்சியம் வழங்கப்பட்டது. அரச சட்டத்தரணி சஜித் பண்டார ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.

No comments:

Post a Comment