Sunday, October 21, 2018

யாழ் வைத்தியசாலையில் இந்திய ராணுவத்தின் பேயாட்டம் 31 வருடங்கள்.

அமைதிப்படையென வந்த இந்திய ராணுவத்தை பிறேமதாஸவுடன் இணைந்து எதிர்த்தனர் புலிகள். அவர்களுக்கு எதிராக போரும்தொடுத்தனர். இந்திய ராணுவமோ அத்துடன் தான் இலங்கையில் அமைதிப்படை என்பதை மறந்தது. அது வெறியாட்டம் ஆடியது. இந்திய இராணுவத்தாலோ அன்றில் அவர்களுடன் இணைந்து இயங்கிய அமைப்புக்களான ஈபிஆர்எல்எப் , ரெலோ மற்றும் ஈஎன்டிஎல்எப் இனராலோ புலிகளுக்கும் மக்களுக்குமான வித்தயாசம் தெரியவில்லை.

அவ்வாறு 30 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் அமைதிப்படையென வந்த இந்திய ராணுவம் யாழ் மருத்தவமனையில் செய்த படுகொலைகளை மறந்துவிட முடியுமா?

அக்டோபர் 21, 1987:
முப 11 : 00 மணி – யாழ் கோட்டைப் பகுதியில் இருந்த இந்திய ராணுவம் யாழ் மருத்துவமனைப் பகுதியை நோக்கி பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களும், உலங்கு வானூர்திகளில் இருந்து குண்டுத் தாக்க்குதல்களும் ஆரம்பித்தது.

முப 11 : 30 மணி – மருத்துவமனையின் வெளிமருத்துவ பீடத்தின் மீது ஏவுகணை ஒன்று வந்து வீழ்ந்தது.

பிப 13 : 00 மணி – அருகில் உள்ள சாந்தி தியேட்டர் பக்கத்தில் இந்திய இராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதாக மருத்துவமனையில் கடமையில் இருந்த மருத்துவ அதிகாரிக்குத் தகவல் வந்தது.

பிப 13 : 30 மணி – 8ம் இலக்க கூடத்தில் ஏவுகணை ஒன்று வீழ்ந்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

பிப 15 : 00 மணி – சில ஊழியர்கள் பின்பக்க வழியாக மதிய உணவுக்காக மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.

பிப 16 : 00 மணி – ஆசுபத்திரி வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தின் பக்கமாக 15 – 20 நிமிடங்களுக்கு துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதை ஊழியர்கள் கேட்டனர்.

மாலை 16 : 20 மணி முதல் – இந்திய இராணுவத்தினர் மருத்துவமனையின் முன்பக்கமாக உள்ளே வந்தனர். நடைபாதை வழியாக உள்ளே வந்த அவர்கள் அங்கிருந்த அனைவரையும் உள்ளே செல்லுமாறு பணித்தனர்.

அதன் பின்னர் மேற்பார்வையாளரின் அலுவலகத்தினுள்ளும் ஏனைய அறைகளுள்ளும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேரில் கண்டவர்களின் கூற்றுப்படி, பல பணியாளர்கள் இறந்து வீழ்ந்தனர்.

இவர்களில் மேற்பார்வையாளர், மற்றும் முதலுதவி வண்டி சாரதியும் அடங்குவர். ஒரு படையினன் பணியாளர் ஒருவரை நோக்கி கிரனேட்டு எறிந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.

இன்னும் ஒருவரின் கூற்றுப்படி, இந்திய இராணுவத்தினர் ஊடுகதிரியல் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பலரைச் சுட்டுக் கொன்றனர்.

8, இலக்க வார்டில் இருந்து நோயாளிகள் பலர் இங்கு பாதுகாப்புக்காக தங்கியிருந்தனர். இறந்து விட்டதாகத் தரையில் படுத்திருந்த சிலர் உயிர் தப்பினர்.

இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சுகளும் இடம்பெற்றன.

அக்டோபர் 22, 1987:
காலை 08 : 30 மணி – மரு. சிவபாதசுந்தரம் மேலும் மூன்று தாதிகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். அவர்கள் தமது கைகளை மேலே தூக்கியவாறு “நாம் சாதாரண மருத்துவர்களும் தாதிகளும். நாம் சரணடைகிறோம்,” எனக் கத்தியபடி சென்றனர்.

துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. மரு. சிவபாதசுந்தரம் கொல்லப்பட்டார், தாதிகள் மூவரும் கடும் காயங்களுக்குள்ளானார்கள்.

முப 11 : 00 மணி – இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் வார்டு ஒன்றினுள் நுழைந்தார். ஒரு பெண் மருத்தவர் எதிரில் எதிர்ப்பட்டார். அவர் இராணுவ அதிகாரிக்கு நிலைமையை விளக்கிய பின்னர் அவர் ஏனைய பணியாளர்களை கைகளைத் தூக்கியவாறு வெளியேறி வருமாறு கூறினார்.

அங்கு உயிருடன் இருந்த 10 பேர் வெளியேறினர். வெளியேறும் போது அவர்கள் மரு. கணேச ரத்தினம் இறந்து கிடப்பதைக் கண்டனர். அன்று மாலை இறந்தவர்கள் அனைவரினதும் உடல்கள் சேகரிக்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டன.

கிட்லர்கூட மருத்துவமனைகள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தியது இல்லை. ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அப்பாவி தமிழ் மக்களை கொன்றுள்ளனர்.

ஆனால் இங்கு ஆறுதல் தரும் விடயம் என்னவெனில் இறந்தவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள் என்பதை இந்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது. ஏனெனில் வழக்கமாக இவர்களால் இறக்கும் அனைவரையும் புலிகள் என்றே கூறி வந்தனர்.

30 வருடமாகியும் இறந்த இந்த அப்பாவி மக்களுக்கு இந்திய அரசு நியாயம் வழங்கவில்லை. ஆனால் அதே மருத்துவமனை வாசலில் காந்தி சிலை வைத்து அதற்கு வருடா வருடம் மாலை அணிவிக்கின்றது.

இதில் கொடுமை என்னவென்றால் இந்த படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்வதையும் யாழ் இந்திய தூதர் தடுத்து வருகிறார்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com