Thursday, October 25, 2018

எழுத்தாளரை கொலை செய்ததன்மூலம், சர்வதேச நெருக்கடியில் அரேபியாவின் அரச குடும்பம். பாகம் 3

எழுத்தாளர் ஜமாலின் கொலையானது துருக்கி நாட்டில் நடைபெற்றதனால் துருக்கி புலனாய்வு துறையினர்கள் விசாரணைகளை பல கோணத்தில் ஆரம்பித்துள்ளார்கள். இதனால் பல ஆதாரபூர்வமான தடயங்கள் அவர்களிடம் அகப்பட்டுள்ளதாக அறியக்கிடைகின்றது. ஆனாலும் எந்தவித தடயத்தினையும் துருக்கி வெளியிடவில்லை.

துருக்கிய புலனாய்வு துறையினர் தங்களது பணிகளை ஆரம்பித்ததும், சவூதி அரசாங்கத்தின் செயல்பாட்டில் சில மாற்றங்கள் நடைபெற தொடங்கியது. அந்த மாற்றங்களே சவூதி மன்னர் குடும்பத்தினர் மீது சந்தேகத்தினை வலுவடைய செய்தது.

அதாவது மன்னர் சல்மான் அவர்கள் மரணித்த எழுத்தாளரின் மகனை அழைத்து தனது கவலையை தெரிவித்தார். இது மரபுகளுக்கு அப்பால்பட்ட ஆச்சர்யமான விடயமாகும். அரச உயர்மட்ட பதவியில் இல்லாத எவரையும் மன்னர் அழைத்து இவ்வாறு ஆறுதல் கூறியதில்லை.

அத்துடன் துருக்கிக்கான சவூதி அரேபிய தூதுவர் உடனடியாக தனது குடும்பத்துடன் நாடு திரும்பினார். வழக்கமாக பிரத்தியேகமான ஆடம்பர விமானத்தில் பயணிக்கின்ற அவர், அன்று சாதாரண பயணிகள் விமானத்தில் சென்றுள்ளார்.

சவூதி தூதுவர் வசிக்கின்ற இல்லமும் சோதனை செய்யப்படும் என்று துருக்கி அதிகாரிகள் அறிவித்தல் வழங்கியதன் பின்பே சவூதி தூதுவர் அவசரமாக நாடு திரும்பினார்.

மேலும் பதினெட்டு பேர்கள் கைது செய்யப்பட்டதுடன், தங்களது ஐந்து உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரசு அறிவித்தது.

இந்த ஐந்து பேரில் இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் ஆலோசகர் சவுத் அல் குப்தானி மற்றும் உளவுத்துறை துணைத்தலைவர் மேஜர் ஜென்ரல் அஹமத் அல் அசீரி ஆகியோர்கும் அடங்குவார்கள்.

கடந்த இரண்டாம் திகதி சவூதி தூதரகத்தினுள் பிரவேசித்த எழுத்தாளர் ஜமால் அவர்கள் திரும்பி வரவில்லை. அப்படியென்றால் அவர் எங்கே மறைந்தார் ? கொல்லப்பட்டிருந்தால் அவரது உடல் எங்கே ? அவர் தூதரகத்தின் உள்ளே பிரவேசித்ததனை பதிவு செய்த தூதரகத்தில் பொருத்தப்பட்ட கமராக்கள், ஏன் வெளியே வருவதனை பதிவு செய்யவில்லை ? என்ற கேள்விகளுடனேயே விசாரணைகள் ஆரம்பமானது.

அந்த வகையில் ஜமால் அவர்கள் கொல்லப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளார் என்றே கூறப்படுகின்றது. அவரது வெட்டப்பட்ட உடல் பாகங்கள் எப்படியும் துருக்கியில்தான் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியென்றால் அது எங்கே புதைக்கப்பட்டது என்பதுதான் துருக்கி அதிகாரிகளின் கேள்வியாகும்.

இந்த கொடூரமான கொலையினால் சவூதியின் உற்ற நண்பனான அமெரிக்காவில் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளது. சவூதிக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்ற அழுத்தமும் வலுப்பெற்றுள்ளது.

ஆனாலும் அமெரிக்கா, சவூதி ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் நீண்டகாலமாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாகும். இந்த நிலையில் ஒரு தனிநபர் கொலை செய்யப்பட்டதற்காக தனது உயிர் நண்பனுக்கெதிராக பொருளாதார தடை விதித்து விரோதியாக்கிக் கொள்வதென்பது சாத்தியமற்ற விடயமாகும்.

ஏனெனில் சவூதியை பகைத்தால் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் அமெரிக்காவுக்கே அதிகம் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது அமெரிக்காவுக்கு தெரியாமலில்லை. இருந்தாலும் தனது நாட்டை சேர்ந்த சிலரை திருப்திப் படுத்துவதற்காக இந்த கொலை விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி கருத்து கூறியிருக்கின்றார்.

அண்மையில் கட்டார் நாட்டுக்கெதிராக சவூதி அரேபியா பொருளாதார தடைகளை விதித்தபோது அமெரிக்கா சவூதி அரேபியாவின் பக்கமே தனது ஆதரவினை தெரிவித்தது. இத்தனைக்கும் இரண்டு நாடுகளும் அமெரிக்காவின் நற்பு நாடுகளாகும்.

அதிலும் மத்தியகிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளம் கட்டார் நாட்டிலேயே உள்ளது. இந்த இரு நட்பு நாடுகளுக்குமிடையில் விரிசல் ஏற்பட்டபோது சவூதிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாது தனது மிகப்பெரும் இரானுவத் தளத்தினையே கட்டாரிலிருந்து அகற்றுவதற்கு அமெரிக்கா துணிந்தது.

எழுத்தாளரின் கொலையானது அமெரிக்க நலனுக்கெதிரானதல்ல. மத்தியகிழக்கில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளையும், இஸ்லாமிய முற்போக்கு நாடுகளையும் அழிப்பதற்கு எந்த சூழ்நிலையிலும் அமெரிக்காவுக்கு பக்கபலமாக இருந்துவருகின்ற சவூதி அரேபியாவை இழப்பதற்கு ஒருபோதும் அமெரிக்கா முன்னிக்காது.

அத்துடன் சவூதியுடனான அமெரிக்காவின் உறவில் பாதிப்பு ஏற்பட்டால் அது மத்தியகிழக்கில் தனது பரம எதிரியான ஈரானின் கை ஓங்கிவிடும். இதனை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது.



தொடரும்.............................. முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது

No comments:

Post a Comment