வட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2 -வை எல் எஸ் ஹமீட்-
இந்த வழக்கின் சட்டப்பின்னணி
1987ம் ஆண்டைய 42ம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 37(1) கீழ் ஜனாதிபதி அருகருகேயுள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்களை இணைப்பதற்காக பிரகடனம் வெளியிடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் வடக்கு, கிழக்கு இணைவதற்கான பிரகடனத்தை அன்றைய ஜனாதிபதி விடுத்திருந்தார்.
மேற்படி சட்டத்தின் 37(1)(b) இன் பிரகாரம் , வட கிழக்கைப் பொறுத்தவரை ஆயுதங்கள் களையப்பட்டு யுத்த நிறுத்தம் ஏற்பட்டாலேயொழிய அம்மாகாணங்களின் இணைப்புக்கான பிரகடனத்தை ஜனாதிபதி வெளியிடக்கூடாது.
இந்த ஆயுதக்களைவு நிபந்தனை பூர்த்தி செய்யப்படாததால் ஜனாதிபதியின் இணைப்புக்கான பிரகடனம் பிழையானது. அதேநேரம் அவசரகால சட்டத்தின் கீழ் இந்த ஆயுதக்களைவு இடம்பெற்றிருக்க வேண்டும்; என்ற 37(1)(b) இல் தெரிவிக்கப்பட்ட நிபந்தனை அவசரகால சட்டத்தின் கீழ் ‘ ஆயதக்களைவு தொடங்கியிருந்தால் எனத் திருத்தப்பட்டது சட்டப்படி செல்லுபடியாகாது .
பிரிவு 37(1)(a) இன் கீழ் எந்த மாகாணங்கள் இணைக்கப்படுவதற்காக ஜனாதிபதியால் பிரகடனம் வெளியிடப்படுகின்றதோ அம்மாகாணங்களில் 31.12.1988 இற்குமுன் அம்மாகாணங்கள் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்; என 37(2)(a) கூறுகின்றது.
அதேநேரம், 37(2)(b) காலத்திற்கு காலம் இந்த சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திப்போடுகின்ற அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகின்றது. இந்த அதிகாரத்தைப் பாவித்தே ஜனாதிபதிகள் சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திப்போட்டு வந்தனர்.
ஆயதக்களைவு நடைபெறாமல் இணைத்தது பிழை. ஆயுதக்களை நடைபெற்றால் என்பது தொடங்கினால் என்று வர்த்தமானி மூலம் திருத்தியது செல்லுபடியாகாது; எனவே சட்டப்படி வட கிழக்கு இணைக்கப்படவில்லை. இணைக்கப்படாத வட கிழக்கிற்கு “இணைப்புத் தொடர்ந்திருக்க வேண்டுமா?” என அறிவதற்காக ஒரு சர்வஜனவாக்கெடுப்பு பிற்போடப்படுவதும் அதைக் காரணமாகவைத்து கிழக்கில் தேர்தல் நடாத்தாமல் இருப்பதும் வழக்காளிகளுக்கும் அவர்களைப்போன்றவர்களுக்கும் சட்டரீதியாக 13 வது திருத்தம் சரத்து 154A(2) இற்கமைய கிழக்குமாகாணத்தில் தமக்கென கூட்டப்பட்ட ஒரு மாகாணசபையைக் கொண்டிருக்கின்ற உரிமையை தொடர்ந்தும் மறுத்து வருகின்றது; என்ற வாதம் வழக்காளிகள் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி H L de Silva வினால் முன்வைக்கப்பட்டது.
இந்த வாதத்தை மீண்டும் இலகுபடுத்தி சுருக்கமாக தருகின்றேன்.
ஜனாதிபதி இணைப்புக்காக விடுத்த பிரகடனம் பிழையானது. ஏனெனில் ஆயுதக்களைவு இடம்பெறவில்லை.
இணைப்பதற்கு ஆயுதக்களைவு இடம்பெறவேண்டும் என்ற சட்டத்தை வர்த்தமானி மூலம் ஆயுதக்களவு ஆரம்பித்தால் ( போதும்) என்று திருத்தியது செல்லுபடியாகாது . ( ஏன் செல்லுபடியாகாது என்பது பின்னர் வரும்)
எனவே, வட கிழக்கு ஒருபோதும் இணைக்கப்படவில்லை.
இணைக்கப்படாத மாகாணங்கள் தொடர்ந்து இணைந்திருக்கவேண்டுமா? என்பதை அறிவதற்கான சர்வஜனவாக்கெடுப்பே ஒத்திப்போடப்பட்டது.
இணைக்கப்பட்ட மாகாணங்களுக்கான சர்வஜனவாக்கெடுப்பை ஒத்திப்போடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. ஆனால் இணையாத மாகாணங்களுக்கு எவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவது அல்லது ஒத்திவைப்பது.
எனவே, கிழக்கு மாகாணசபை ஒருபோதும் வடமாகாணசபையுடன் இணைக்கப்படவுமில்லை. கிழக்கு மாகாணசபைக்கு ஒருபோதும் தேர்தல் நடாத்தப்படவுமில்லை. அது கூட்டப்படவுமில்லை.
இதனால் வழக்காளிகளினதும் இதேபோன்ற ஏனையவர்களினதும் உரிமை பாதிக்கப்பட்டிருக்கின்றது.
தொடரும்
இக்கட்டுரைகளின் தொடரை தொடர் கட்டுரைகள் பகுதியில் காணலம்.
0 comments :
Post a Comment