Monday, October 8, 2018

சமூகம் என்ற போர்வையில் அதாஉல்லாவினால் விதைக்கப்படுகின்ற பிரதேசவாதமும், அதற்கான தடயங்களும். பகுதி 2

எதிர்பாராதமுறையில் தலைவர் அஸ்ரப் அவர்கள் மரணமடைந்ததனை தொடர்ந்து கட்சிக்குள் தலைமைத்துவ பிரச்சினை ஏற்பட்டது. ரவுப் ஹக்கீம் அவர்களும், இத்தா அனுஷ்டித்து கொண்டிருந்த தலைவரின் மனைவி பேரியலும் முஸ்லிம் காங்கிரசின் இணைத்தளைவர்களாக தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்கள்.

ஒருசிலர் பேரியல் அஸ்ரப் முஸ்லிம் காங்கிரசுக்கு தலைவராக வரவேண்டும் என்றும், சிலர் இணைத் தலைமைத்துவம் நீடிக்க வேண்டும் என்று விரும்பினாலும், பெரும்பாலான கட்சி முக்கியஸ்தர்களும், போராளிகளும் ரவுப் ஹக்கீம் அவர்களே கட்சிக்கு ஏக தலைவராக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

இதில் ரவுப் ஹக்கீம் அவர்களை தலைவராக்குவதில் எல்லோரையும்விட அதாஉல்லா அவர்களே மிகவும் தீவிரமாக செயல்பட்டார். அவரது செயல்பாடுகள் மிகவும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருந்தது.

ஒவ்வொரு மேடையிலும் அதாஉல்லா அவர்கள் பேசும்போது மறைந்த தலைவரை நினைத்து விம்மி விம்மி அழுவார். அவரது அழுகையை கண்டு போராளிகளும் அழுவார்கள். அந்தளவுக்கு தன்னை தலைவர் அஸ்ரபின் தீவிர விசுவாசியாக காட்டிக்கொண்டார்.

இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரசுக்கு தலைவராக வர முயற்சி செய்கின்ற பேரியல் அஸ்ரபோடு பேச்சுவார்த்தைகள் நடாத்தி, ஓர் இணக்கப்பாட்டுடன் தலைவருக்கு அடுத்த அதிகாரம் உள்ள பதவியினை பேரியலுக்கு வழங்குவதன் மூலம், கட்சிக்குள் ஏற்பட இருக்கின்ற பிளவுகளை தடுக்க முடியும் என்று இணைத் தலைவராக இருந்த ரவுப் ஹக்கீம் அவர்கள் விரும்பினார்.

அதற்காக பேரியல் அணியினரோடு பேசுவதற்கு தயாரானபோது அதனை அதாஉல்லா அவர்கள் முற்றாக நிராகரித்துவிட்டார். அதாவது முஸ்லிம் காங்கிரசில் பேரியலுக்கு எந்த ஓர் இடமும் வழங்கக்கூடாது என்பதுதான் அதாஉல்லாவின் எண்ணமாக இருந்தது.

அப்போது அதாஉல்லா அவர்களின் எதிர்கால திட்டத்தினை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

முஸ்லிம் காங்கிரசின் பிரச்சாரங்கள் அனைத்தும் பேரியலை மையமாக கொண்டதாகவே இருந்தது. அதில் ஒவ்வொரு மேடைகளிலும் பேரியல் அஸ்ரப்பை “பேய்க்குழந்தை” என்றும், அவளது “புடவையை” உரியப்போவதாகவும் அதாஉல்லா அவர்கள் பகிரங்கமாக மேடைகளில் பேசிய பேச்சுக்கள் அன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றது.

ரவுப் ஹக்கீம் அவர்கள்மீது இவ்வளவு அதிகமான பாசமும், அதேநேரம் பேரியல் அஸ்ரப்மீது இந்தளவுக்கு வெறுப்பும் அதாஉல்லா அவர்களுக்கு ஏற்ப்பட காரணமென்ன ?

ரவுப் ஹக்கீம் அவர்கள் கண்டியை சேர்ந்தவர் என்பதனால் அவரை பொம்மை தலைவராக வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் கிழக்கின் அதிகாரமுள்ள தலைவராகவும், பின்பு ரவுப் ஹக்கீமை அகற்றிவிட்டு முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவராகவும் வரவேண்டும். அதாவது படிப்படியாக தலைமைத்துவத்தை கைப்பேற்ற வேண்டும் என்பதுதான் அதாஉல்லாவின் திட்டமாகும்.

அதற்காக கிழக்கில் இருந்து எந்த சக்தியையும் கட்சிக்குள் தன்னைவிட வளர அனுமதிக்காமலும், அதேநேரம் தன்னைவிட சக்தியுள்ளவர்களை கட்சிக்குள்ளிருந்து ஓரம் கட்டுவதிலும் அதாஉல்லா அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்.

காலப்போக்கில் கட்சி சில பிழையான தீர்மானங்களை எடுப்பதற்கு உடந்தையாக இருந்துவிட்டு பின்பு அவைகள் விமர்சிக்கப்பட்டபோது அதனை தலைவர்மேல் பழியைப் போடுகின்ற நிலைமை அவ்வப்போது நிறைவேறியது.

பேரியல் அஸ்ரப் கல்முனையை மையமாக கொண்டவர் என்பதனால், அஸ்ரப்போடு அழிந்துபோன கல்முனையின் அரசியல் அதிகாரம் மீண்டும் எழுச்சி கண்டுவிடும் என்பதனாலும், பேரியல் முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்தால் தனது எதிர்கால தலைமைத்துவ கனவும், முழு அமைச்சர் எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் போய்விடும் என்பதனாலேயே பேரியல் திட்டமிட்டு அதாஉல்லா அவர்களினால் ஓரம்கட்டப்பட்டார்.

அன்று பேரியல் அஸ்ரப் முஸ்லிம் காங்கிரசுக்குள் தொடர்ந்து இருந்திருந்தால், கட்சிக்கு ஏற்ப்பட்ட பாரிய பிளவுகள் தடுக்கப்பட்டிருக்கும். அதேநேரம் பின்னாட்களில் கட்சி பல வழக்குகளை எதிர்கொண்டிருக்காது. தாருஸ்ஸலாம் பிரச்சினையும் வந்திருக்காது.


தடயங்கள் தொடரும்.............. முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments:

Post a Comment