Tuesday, October 16, 2018

வட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம். வை எல் எஸ் ஹமீட் -பாகம் 1

வழக்காளிகள்:
1. N W M ஜயந்த விஜேசேகர, கந்தளாய்
2. A S முஹம்மது புகாரி, சம்மாந்துறை
3. வசந்த பியதிஸ்ஸ, உகனை

பிரதிவாதிகள்:
1. கௌரவ சட்டமா அதிபர்
2. வட கிழக்கு மாகாணசபை ஆளுநர்
3. தேர்தல் ஆணையாளர்

இடையீட்டு வாதிகள் ( Intervenient petitioners)
1. கே தம்பையா, திருகோணமலை
2. வெற்றிவேல் ஜயனாதன், அம்பாறை
3. சிறிதுங்க ஜயசூரிய
4. ந தில்லையம்பலம் , அம்பாறை

நீதிபதிகள்

1. கௌரவ சரத் என் சில்வா, பிரதம நீதியரசர்
2. கௌரவ நிஹால் ஜயசிங்க, நீதியரசர்
3. கௌரவ என் கே உடலாகம, நீதியரசர்
4. கௌரவ ஏ ஆர் என் பெர்நாந்து நீதியரசர்
5. கௌரவ ஆர் ஏ என் ஜி அமரதுங்க, நீதியரசர்

சட்டத்தரணிகள்
ஜனாதிபதி சட்டத்தரணி எச் எல் டி சில்வா
எஸ் எல் குணசேசகர
கோமின் தயாசிறி
மனோலி ஜினதாச ஆகியோர் வாதிகள் சார்பில்

பி ஏ ரத்னாயக்கா, ஜனாதிபதி சட்டத்தரணி, Add. Solicitor General
அனில் குணரத்ன, D S.G ( Deputy Soicitor General)
A. ஞானதாசன் D S G
இந்திக டெமுனி டி சில்வா S.S.C ( senior state counsel)
ஜானக டி சில்வா S.S.C
மிலின்த குணதிலக, S.S.C
நெரின் புள்ளே S.S.C ( இவர்கள் அனைவரும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள்), பிரதிவாதிகள் சார்பில்

இடையீட்டு வாதிகள் சாரபில்

K. கனக ஈஸ்வரன் PC
M A சுமந்திரன்
L ஜெயக்குமார்
பற்றி வீரக்கோன்
பேர்சி விக்ரமசேகர
லால் விஜேநாயக்க

இந்த வழக்கின் அடிப்படை அரசியலமைப்பின் சரத்து 12(1) வழங்கிய ‘ சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கான அடிப்படை உரிமை’ தமக்கு மறுக்கப்பட்டுள்ளது; என்பதாகும்.

சட்டமாஅதிபர் தரப்பின் பலமான ஆட்சேபனை

பிரதிவாதிகளின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அவர்களால் முன்வைக்கப்பட்ட இரு பிரதான ஆட்சேபனைகள்:

முதலாவது, இது ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கு. இது சரத்து 126 இன் அடிப்படையில் தாக்கல் செய்யப்படுகிறது. அச்சரத்தின் பிரகாரம் அவ்வாறு அடிப்படை உரிமை மீறப்பட்டால் அதிலிருந்து ஒரு மாதத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யவேண்டும். ஆனால் இவ்வழக்கு காலம் தாழ்த்தி தாக்கல் செய்யப்பட்டிருப்பதனால் இவ்வழக்கில் அவர்கள் நிவாரணம் கோரமுடியாது; என்பதாகும்.

இரண்டாவதும் அதிமுக்கியமானதுமான ஆட்சேபனை:

Immunity

அரசியலமைப்பின் சரத்து 35 ஜனாதிபதிக்கு immunity ஐ வழங்குகின்றது. அதாவது 19வது திருத்தம் அறிமுகப்படுத்தப்படும்வரை ஜனாதிபதி தனிப்பட்ட முறையிலோ அல்லது தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்தோ செய்கின்ற எந்தவொரு விடயத்தையும் நீதிமன்றில் அவருடைய பதவிக்காலத்தில் கேள்விக்குட்படுத்த முடியாது.

அதேவேளை, ஜனாதிபதி சில அமைச்சுகளுக்கு பொறுப்பாக இருக்கும்போது அவர் அவ்வமைச்சுகளுக்கு அமைச்சர் என்ற வகையில் அவரது செயற்பாடு தொடர்பாக அடிப்படை உரிமை மீறப்பட்டால் அவற்றிற்கெதிராக வழக்குத் தொடர முடியும். ஆனால் ஜனாதிபதிக்குப் பதிலாக அவ்வழக்குகளில் சட்டமாஅதிபரே பிரதிவாதியாக குறிப்பிடப்பட வேண்டும்.

19 திருத்தத்தின் பின், ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து செய்கின்ற விடயங்களிலும் ஒருவருடைய அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டால் ஜனாதிபதியின் அச்செயற்பாட்டிற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யமுடியும்; ஆனாலும் சட்டமாஅதிபரைத்தான் பிரதிவாதியாக குறிப்பிட வேண்டும்.

சுருங்கக்கூறின், 19 இற்கு முன்; ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார செயற்பாடுகளுக்கெதிராக வழக்குத்தொடர முடியாது.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக உயர்நீதிமன்ற நீதியசராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் நியமனம் செய்யப்பட்டபோது பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார செயற்பாடுகளுக்கெதிராக வழக்குத் தொடுக்க முடியாது; என்றே அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

இந்த அடிப்படையில்தான் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார செயற்பாட்டிற்கெதிராக வழக்குத்தொடுக்க முடியாது; இவ்வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும்; என்று வாதாடினார்.

இது மிகப்பலமான ஆட்சேபனையாகும். ஏற்கனவே உயர்நீதிமன்றின் பெரும்பான்மை நீதிபதிகளால் மேற்கூறிய வழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதம்.

இவ்வளவு பலமான ஆட்சேபனையை எவ்வாறு நீதிமன்றம் மறுத்து இந்த வழக்கை ஏற்று வட கிழக்கைப் பிரித்தது; என்பது மிகவும் சுவாரசியமானது. அதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

( தொடரும் )

குறிப்பு: இது சட்டமாணவர்களுக்கும் பிரயோசனமாக அமையும் என்பதால் சற்று நுணுக்கமான விடயங்களுக்குள்ளும் சென்று இதனை எழுத விழைகின்றேன் இன்ஷாஅல்லாஹ். ஏனையவர்களும் சற்று ஊன்றிவாசித்தால் புரிந்துகொள்ளலாம்

இக்கட்டுரைகளின் தொடரை தொடர் கட்டுரைகள் பகுதியில் காணலம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com