Monday, September 17, 2018

TID பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வா IT பிரிவிற்கு இடமாற்றம்

பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவை தற்காலிகமாக தகவல் தொழிநுட்ப பிரிவிற்கு இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது கிழக்கு மாகாணத்தில் வைத்து தாக்குதல் செய்யும் திட்டத்தில் இருந்ததாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார கடந்த 12 ஆம் திகதி கண்டி பிரதேசத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்ததுடன், இதுதொடர்பான ஒலிப்பதிவுகளையும் வெளியிட்டிருந்தார்.

கிழக்கில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை வேறு பக்கம் திருப்பிவிடலாம் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கூறியதாக ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்திருந்தார்.

அத்துடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லதீப் உட்பட மேலும் சில பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு எதிராகவும் நாலக சில்வா திட்டம் தீட்டுவது சம்பந்தமான ஒலிப்பதிவுகளும் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டிருந்தது

இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குறித்த ஒலிப்பதிவுகள் மற்றும் நாலக சில்வா மீது விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டிருந்த நிலையிலே அவருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com