Tuesday, September 11, 2018

இலங்கையில் தலைவிரித்தாடும் இனவாத அரசியல் - இந்ரஜித்

இலங்கையைப் பொறுத்தவரையில் இனவாதம் என்பது புரையோடிப்போன வரலாறாகும். இலங்கை வரலாறு முழுவதிலும் இனவாத அரசியலையே அனைத்துக் கட்சிகளும் முன்னெடுத்து வந்துள்ளன. அதுதமிழ் கட்சியாக இருந்தாலும் சரி,சிங்கள், முஸ்லிம் அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகும். அன்று முதல் இன்று வரையில் இது தொடர் கதையாகும். இந்த அரசியலை முன்னெடுப்பவர்கள் யார்? முன்னெடுப்பது ஏன்? என்ற வினாக்களுக்கான பதிலைத் தேடும் போது இந்த சமூகத்தின் தன்மையைப் பற்றிப் புரிதல் இருக்கவேண்டும்.

அதாவது நாம் இன்றுவாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் முதலாளித்துவ அமைப்புடைய சமூகமாகும். இந்த சமூகத்தில் வாழும் அதிபெரும்பான்மையான மக்கள் துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். அதாவது வாழ்க்கை செலவை எடுத்துக் கொண்டால், அதுமக்களால் தாங்கிக் கொள்ள முடியாத சுமையாக மாறியுள்ள நாடாகும். அதன் காரணமாக இன்று இலங்கையில் வாழும் மக்களில் 42 சதவீதமான மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு டொலருக்கு குறைவான வருமானத்தையே (800 ரூபா) பெறுகிறார்கள் என்று புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது. அதேபோன்று சுகாதாரப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும், கல்விப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் சரி, போக்குவரத்துப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் நிலைமை இதுவேயாகும். பிறக்கின்ற பிள்ளைகளில் நூற்றுக்கு 42 வீதம் போஷhக்கின்மையால், வாடும் நாடாகமாறியுள்ள நிலையில் எமது எதிர்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது,

அதாவது இந்த சமுத்திரப் பிராந்தியத்தில் மிகவும் வறுமை கூடியநாடாக எமது நாட்டை மாற்றியுள்ளனர். அதில் வயதுக்கேற்ற வளர்ச்சிகுன்றிய பிள்ளைகள் நூற்றுக்கு 17மூ ஆகும். நிறையில்லாத பிள்ளைகளின் வீதம் நூற்றுக்கு 21மூ ஆகும். ஐந்து இறாத்தலுக்கு குறைவான எடையுள்ள பிள்ளைகளின் தொகை நூற்றுக்கு 16மூ வீதமாகும். கர்ப்பிணித் தாய்மார்களில் நூற்றுக்கு 22மூ தினர் இரத்தச் சோகையால் பீடிக்கப்பட்டுள்ளனர். இதுவேமக்களின் இன்றைய வாழ்வு நிலையாகும்

உற்பத்திப் பொருளாதாரத்துக்கு என்ன நடந்துள்ளது? அரிசி 2017ஆம் ஆண்டில் 15,23000 மெ.தொன் உற்பத்திச் செய்யப்பட்டு, 7,48000 மெ.தொன் அரிசி இறக்குமதிச் செய்யபப்ட்டது. அரிசி இறக்குமதி செய்யப்பட வேண்டிய நாடா இது? அதுமட்டுமா தேயிலை 32 சதவீதம் இறக்குமதிச் செய்யப்படும் நாடு. பெரியவெங்காயம் 54,000 மெ.தொன் உற்பத்திச் செய்யப்பட்டு 2,32000 மெ.தொன் இறக்குமதிச் செய்யப்படுகின்ற நாடு. சீனி 56,000 மெ.தொன் உற்பத்திச் செய்யப்பட்டு 4,98,000 மெ.தொன் இறக்குமதிச் செய்யப்படுகின்ற நாடாகமாறியுள்ளது. சீனி உற்பத்திக்குத் தேவையான கந்தளாய் சினித் தொழிற்சாலை மூடப்பட்டும் கரும்பு வளர்ப்புக்குத் தேவையான 23,000 ஏக்கர் காணி பாழடைந்துப் போயுள்ளது. உற்பத்தியில்லாத வெளிநாட்டுக் கடனை நம்பி வாழும் நாடாக நமது நாடு மாறியுள்ளது.

அது மட்டுமல்ல ஏற்றுமதியின் மூலமாக 1000 கோடிரூபாய் கிடைக்கின்றபோது நாம் இறக்குமதிக்காக 2000 கோடி செலவழிக்க வேண்டியிருக்கிறது. அதேபோன்று இன்று ரூபாவின் மதிப்புமேன் மேலும் வீழ்ச்சியடைந்து டொலரின் மதிப்பு 160 ரூபாவை கடந்துள்ளது. இவைகளிலிருந்து மீள்வதற்கான வழியாக அரசாங்கம் மக்களை மேன்மேலும் வதைத்து வரி, தண்டப் பணம் மற்றும் ஏனைய வரிகள் மூலமாக மக்களை சூறையாடி வருகிறது. அது மட்டுமல்ல தேசிய உற்பத்தித் துறைகள் அனைத்தும் செயலிழந்துப் போயுள்ளன. அதன் காரணமாகக் கடன் மீது தங்கியிருக்க வேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு வருமானம் கிடையாது அதன் காரணமாக தண்டம், வரி, பெட்ரோல் விலைச் சூத்திரம் போன்வற்றால் மக்கள் மேன்மேலும் நசுக்கப்படுகிறார்கள். இது கடந்த 70 வருடத்து இலங்கையின் ஆட்சியாளர்களால் கொண்டு சென்ற முதலாளித்துவ முறையின் தன்மையாகும். இன்று இந்த ஆட்சியாளர்களால்

மக்கள் முகம் கொடுக்கின்ற மேற்கண்ட எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது போயுள்ளது. மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாத இவர்களால் முன்னெடுக்கும் ஆயுதமே இனவாதமாகும். அதுமக்களின் எண்ணங்களைத் திசைதிருப்புகிறது. நாட்டை நாசமாக்கிய மோசடிக்காரர்களைப் பாதுகாக்கிறது. அதற்காகத் தமிழ் என்றாலும், சிங்களம் என்றாலும், முஸ்லிம் என்றாலும் அனைத்து அரசியல் கட்சிகளும் இனவாதத்தையே தமது அரசியல் மூலதனமாகக் கொண்டு இயங்குகிறது.

அதுமட்டுமல்ல 10 வருடங்களுக்கு மேலான நாட்டு ஆண்டு நாட்டை இலஞ்ச, ஊழல், மேசடியின் முகட்டுக்கே கொண்டுச் சென்று நாட்டை அராஜக நிலைக்குத் தள்ளிய ராஜபக்ஷாக்கள் இன்று தமது ஊழல் மோசடிகளை மறைப்பதற்காக இனவாதத்தை கையில் எடுத்து மக்களை திசைதிருப்பும் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அத்தோடு தமது கட்சியில் தோன்றியுள்ள உட்கட்சி முரண்பாட்டை மறைப்பதற்கும் தமது கட்சி அங்கத்தவர்களின் நம்பிக்கையீனத்தை மாற்றுவதற்கும், ராஜபக்ஷ குடும்பத்தில் அதாவது பசில், கோத்தபயா முரண்பாட்டை தற்காலிகமாக தணிப்பதற்காக மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இனவாதத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

அதே போன்று 2015 ஆட்சிக்கு வந்த மைத்திரி -ரணில் முரண்பாடு இன்று உக்கிர நிலையடைந்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களுக்கு வழங்கியவாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து செயற்படுகின்ற நிலையே இன்று காணப்படுகிறது. அதற்காக அவர்களும் இன்று இனவாதம், மதவாதம், மற்றும் அடக்குமுறை அனைத்தையும் பிரயோகித்து வருகின்றனர். அதே போன்று வடபகுதி தமிழ் அரசியலை எடுத்துக் கொண்டாலும் தென்னிலங்கையில் உள்ள அரசியவாதிகளுக்கு தாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதையே அவர்களின் நடவடிக்கை வெளிக்காட்டுகிறது.

இப்போது வடபகுதியல் சுமந்திரனுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது. சமஷ்டியா? இல்லையா? என்ற வாதப்பிரதிவாதங்கள் உக்கிமடைந்துள்ளது. அதில் குளிர்காயும் சுரேஷ் பிரேமசச்ந்திரனும், அத்தோடு புளொட் சித்தார்த்தன், டெலோ அடைக்கலநாதன் இவர்கள் அனைவரும் தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் உண்மையான பிரச்சினைகளைப் பற்றிப் பேசாது, சமஷ்டியா? இவருடன் கூட்டுவேண்டாம், விக்கியோடு மட்டுமே கூட்டுச் சேருவோம் என்று கூறி மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறக்கடித்து வருகின்றனர்.

இதுவே இன்றைய இலங்கையின் மேட்டுக்குடிகளின் அரசியலாகும். அதற்கு மகிந்தவா, ரணிலா, விக்கியா, சம்பந்தரா, சுமந்திரனா, கஜேந்திரனா என்ற வேறுபாடு கிடையாது. இன்று இவர்கள் அனைவரும் இந்த இனவாத சாக்கடையில் அமிழ்ந்துப் போயுள்ளனர் என்பதை மக்கள் உணரவேண்டும்.

ஆகவே, மக்கள் முன்னால் இன்று பாhரியகடப்பாடு இருக்கிறது. அது, இந்த 70 வருட இனவாத அரசியலிலிருந்து மீள்வதாகும். அதற்காகமக்கள் இந்த அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தை இனங்கண்டு கொள்ளவேண்டும். கடந்த 70 வருட அரசியலைத் திருப்பிப்பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கின்றபோது இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை உணரமுடியும். அதனால் அவர்களிடமிருந்து மீளவேண்டும் என்றால் மக்கள் புதிய வழியில் புதியதோர் அரசியல் பாதையைப் பற்றி சிந்திக்க வேண்டும் இதற்கான காலமே இன்று உதயமாகியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com