விக்கி ஒரு இனவாதியே அல்லவாம்! ரெஜினோட் கூரே நற்சான்றிதழ்.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரான சீ.வி விக்கினேஸ்வரன் தனது அரசியல் பிரவேசத்தின் பின்னர் படுமோசமான இனவாதி எனப்பேசப்டுகின்றார். இந்நிலையில் நேற்று காலை இந்துக்கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே, இரு பௌத்தர்களை தனது சம்பந்தியாக்கிக்கொண்டுள்ள விக்கினேஸ்வரன் ஒருபோதும் இனவாதி அல்லவே அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
அங்கு உரையாற்றிய ரெஜினோல்ட கூரே :
வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் இனவாதி அல்ல அதனால்தான் அவரது புதல்வர்களை கொழும்பு பக்கத்தில் புத்தமதம் சார்ந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவின் தங்கை நிருபம்மா ராஜபக்ஷ நடேசன் எனும் தமிழரை திருமணம் முடித்து வாழ்கின்றார். மறைந்த வெளிவிகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சிங்கள பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்திருக்கின்றார். இதேபோன்று மைதிரிபால சேனாநாயக்க எனும் பெருந் தலைவர் ஒருவர் தமிழ் பெண் ஒருவரையே மணம் முடித்து இருக்கின்றார்.
இந்த நாட்டினை ஆட்சி செய்த சிங்கள அரசர்கள் இந்தியாவின் மதுராபுரியிலிருந்து தமிழ் பெண்களை திருமணம் முடித்திருக்கின்றார்கள்.
பௌத்த விகாரைக்குள் இந்து தெய்வங்கள் புத்த பெருமானோடு சந்தோசமாக சாந்தியும் சமாதானமுமாக இருக்கின்றபோது புத்தரை கும்பிட போற மக்கள் சண்டை பிடிக்கின்றார்கள். இச்செயலை பார்த்து தெய்வம் சிரிக்கின்றது. தெய்வத்திடமிருக்கும் நல்லவை ஏன் மனிதனிடம் இருக்கக்கூடாது.
வைத்தியசாலையில் நீங்கள் உயிரிருக்கு போராடும்போது வைத்தியர்கள் இரத்தம் ஏற்ற வேண்டும் என்று சொன்னால் அந்த இரத்தம் யாருடையது என்று உங்களுக்கு தெரியுமா? இரத்த வங்கிகளுக்கு இராணுவத்தினர் பௌத்த துறவிகள் இரத்தம் வழங்குகின்றார்கள். இந்த சிங்கள இரத்தம் எனக்கு வேண்டாம் என்று யாராவது கூறியிருக்கின்றீர்களா?
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கடமையில் இருப்பவர்கள் சிங்கள மொழி பேசும் பொலிஸார். மிகச்சிறந்த நீதிபதி இளஞ்செழியன் ஐயாவை உயிர் கொடுத்து காப்பாற்றியவர் ஒரு சிங்கள மொழி பேசும் பொலிஸ் கான்ஸ்டபிள். தமிழ் பொலிஸார் யாரையும் ஏன் பாதுகாப்புக்கு உறுப்பினர்கள் வைத்திருப்பதில்லை.
கௌரவ முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஏன் தமிழ் பொலிஸாரை பாதுகாப்பிற்கு வைத்திருக்கவில்லை. அவர் சிங்கள பொலிஸார் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார். அவ்வாறு நம்பிக்கையை சிங்கள பொலிஸார் மீது வைத்துக்கொண்டு வெளியே வேறு கதை பேசுகின்றார்.
மக்கள் மத்தியில் விரைவாக தலைவராக வருவதற்கு சுலபமான வழி இருக்கின்றது. அதுதான் இனவாதம், மொழிவாதம், குலவாதம் பேசுவது. வேறு ஒன்றும் தேவையில்லை குறுகிய காலத்திற்குள் தலைவராவதற்கு. தேர்தல் காலம் நெருங்கும்போது இனவாதம் மொழிவாதம் குலவாதம் பேசுகிறார்கள். அவை தேர்தல் காலத்தில் மட்டுமேதான்.
வெள்ளவத்தை பக்கத்திலே தமிழ் மக்கள் வீடு கட்ட முடியும் கோவில் கட்ட முடியும் கோவில்களில் விழா கொண்டாட முடியும். அங்கு எங்கும் எந்த தடையும் இல்லை. இங்கே ஒரு சிலை வைத்தால் பாரிய பிரச்சினைகள் எழுக்கின்றன. பௌத்த விகாரைக்குள் நீங்கள் போவதற்கு பெயரை மாற்றத் தேவை இல்லை மதம் மாற வேண்டியதில்லை அதேபோன்று பௌத்த மக்கள் இந்து கோவிலுக்குள் போறதற்கு தடை ஏதும் இல்லை பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் நல்லூர் கோவிலுக்குள் சென்று வழிபடுவதை நான் கண்டிருக்கின்றேன்.
மதங்கள், இனங்களுக்கு மேலே மனிதத் தன்மையை மேலே வைக்க வேண்டும் நாம் அனைவரும் மனிதனாக வாழ வேண்டும்.
அன்பான மாணவர்களே!
படித்தவர்களில் பல யாழ்ப்பாண தமிழர்கள் தலைவர்களாக பெரியவர்களாக இந்த நாட்டில் வாழ்ந்திருக்கின்றார்கள். லக்ஸ்மன் கதிர்காமர் நீலன் திருச்செல்வம் ரஜனி திராணகம ஆனந்தகுமாரசுவாமி சிற்றம்பலம் காடினர் ஜிஜி பொன்னம்பலம் எதிர்வீரசிங்கம் போன்றோர் போல நீங்களும் பெரியவர்களாக அவர்களின் பாதையில் வரவேண்டும்.
இங்கே படித்துவிட்டு பெரிய ஆளாகி பல பதவிகளை வகிக்கின்றவர்கள் தாய் நாட்டிற்கு தாய் தந்தையருக்கு சேவை செய்வது கிடையாது. படித்து பெரியவர்களாக இருந்தாலும் தாய் தந்தை தாய் நாட்டிற்கு திருப்பி சேவை செய்யாது போனால் பிரியோசனம் ஒன்றும் இல்லை.
அரசியல் வாதிகள் அடுத்த தேர்தலை நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் எதிர்கால அடுத்த சந்ததிக்காக சிந்திக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள் என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment