குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க புது சட்டம்: இந்திய உச்சநீதிமன்றம் பரிந்துரை! வருமா இலங்கையிலும்?
குற்றப் பின்னணி உள்ளவர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றம் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
அந்த நேரத்தில், நாடாளுமன்றம் புதிய சட்டம் இயற்றுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவரை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க அரசியல் சாசனத்திலோ அல்லது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலோ தற்போது வழியில்லாத நிலையில், புதிய தகுதியிழப்புச் சட்டத்தை நாடாளுமன்றம்தான் கொண்டுவர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அதே நேரத்தில், தேர்தலில் நேர்மையை நிலைநாட்ட, ஐந்து யோசனைகளை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1.தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தங்களுக்கு எதிராக எவ்வளவு வழக்குகள் உள்ளது என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
2.தங்களுக்கு எதிராக உள்ள வழக்குகள் விவரம் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை ஆகியவற்றை தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளிடமும் தெரிவிக்க வேண்டும்.
3.ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது வேட்பாளர்களுக்கு எதிராக உள்ள வழக்கு விவரங்களை தங்கள் கட்சியின் இணையதள பக்கத்தில் வெளியிட வேண்டும்.
4.வேட்பு மனு தாக்கல் முடிந்ததும், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளரும் தங்கள் மீதான வழக்குகள் குறித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தேர்தலுக்கு முன்பு மூன்று முறை விளம்பரம் செய்ய வேண்டும்.
5.இந்த உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றதா என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
தாங்கள் விரும்பும் நபர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு வேண்டும். அதனால், அனைத்து நபர்களைப்பற்றிய தகவல்களும் அவர்களுக்கு முழுமையாக அறியத் தரப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஊழல் என்பது புற்றுநோயின் மையமாகிவிட்ட நிலையில், அதைக் குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், அதற்காக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்த நாடு எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (3)-ன் படி, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டிக்கப்பட்டால் தான் வகிக்கும் பதவியை அவர் தகுதியிழப்பதுடன், விடுதலையான பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (4)-ன்படி, மக்கள் பிரதிநிதிகள் தண்டிக்கப்பட்டாலும், அவர் மூன்று மாதங்களுக்கு தகுதியிழப்பு செய்ய முடியாது. அந்த காலகட்டத்தில் அவர் மேல்முறையீடு செய்தால், அதுபற்றி உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை தகுதியிழப்பு செய்ய முடியாது. பின்னர் இந்த சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
தற்போது ஜனநாயகத்துக்கான கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு உள்ளிட்ட மனுதாரதர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (4) ரத்து செய்யப்பட்ட நிலையிலும், தற்போதைய நிலவரப்படி 34 சதம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் குற்றப்பின்னணி உடையவர்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை, உச்சநீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, 142-வது அரசியல் சட்டப் பிரிவின் அடிப்படையில், குற்றப் பின்னணி உடையவர்கள் முழுமையாக தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.
இந் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக ஏடிஆர் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் ஜெகதீப் சொக்கர் தெரிவித்துள்ளார். சட்டத்தின் வார்த்தைகளைப் பின்பற்றியுள்ள உச்சநீதிமன்றம், அதே சட்டத்தின் உயிர்ப்புத் தன்மையை புறக்கணித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்றும், இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment