சிசேரியன், சட்டவிரோத கருக்கலைப்பை இல்லாதொழிப்பதற்கு ஒன்றுபடுங்கள்! பிரதி அமைச்சர் பைசல் காசீம்
சிசேரியனைத் தவிர்த்து இயற்கை பிரசவத்தை ஊக்குவிப்பதற்கும் சட்டவிரோதக் கருக்கலைப்பை நிறுத்துவதற்கும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.
தேசிய குடும்பக் கட்டுப்பாட்டு தினத்தையொட்டி புதன் கிழமை[ 26.09.2018] கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியவை வருமாறு:
குடும்பக் கட்டுப்பாடு தொடர்பில் எம் மத்தியில் பிழையான கருத்துக்கள் நிலவுவதால் இந்த விடயத்தில் நாம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றோம்.
முன்பெல்லாம் ஒரு குடும்பத்தில் ஐந்து, ஆறு என குழந்தைகள் இருந்தன.இன்று இரண்டு அல்லது மூன்று எனக் குறைந்துவிட்டன. அன்று குழந்தைகளை வளர்ப்பதற்கு குடும்பத்துக்குள் பூரண ஆதரவு இருந்ததால் அதிகமான குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
இன்று அப்படி இல்லை. ஆதரவு குறைந்துவிட்டது. எல்லோரும் தங்களை மாத்திரம் கவனிக்கத் தொடங்கியதால் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டன.
சனத்தொகை அதிகரிப்பை குறைக்க வேண்டும் என்று இன்று முழு உலகமும் விரும்புகின்றது. அதற்கான திட்டங்களை சர்வதேசம் வகுக்கின்றது.
இப்போது நாம் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றோம். அந்தப் பிரச்சினைகளுக்கு ஏற்ப-அந்தப் பிரச்சினைகளை சமாளிக்கும் வகையில் நாம் எமது குடும்பத்தை தீர்மானிக்கவேண்டியுள்ளது. குழந்தை வளர்ப்பு இப்போது பெரும் சவாலாக மாறி வருகிறது.
இன்று எல்லா பெற்றோர்களும் பிள்ளைகளின் கல்விக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். விளையாட்டைக் கவனிப்பதில்லை. பாடசாலைகளும் அப்படித்தான். இப்படி இருந்தால் குழந்தைகளின் எதிர்காலம் சிக்கலாகிவிடும். முதுமையை அடையும்போது அவர்கள் ஆரோக்கியமாக வாழமுடியாமல் போகும்.
அடுத்ததாக கண்பார்வைப் பிரச்சினையை எமது குழந்தைகள் எதிர்காலத்தில் எதிர்நோக்கப் போகின்றன. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளே இதற்குக் காரணம்.
அடுத்த பிரச்சினைதான் திட்டமிடப்படாத மற்றும் சட்டவிரோத கருக்கலைப்பு. இது பெண்கள் சமூகத்துக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறியுள்ளது. இது தடுக்கப்பட வேண்டும். எமது நாட்டில் இப்போது வீடுகளில் குழந்தை பிரசவிக்கும் நிலைமை இல்லை. கடந்த வாரம் நான் கலந்துகொண்ட இந்தோனேசிய மாநாட்டில் இதுபற்றிப் பேசப்பட்டது. இந்த நிலைமை குறித்து அங்கு இலங்கையைப் பாராட்டினார்கள்.
ஆனால், இயற்கை பிரசவம் குறைவடைந்து சிசேரியன் பிரசவம்தான் இலங்கையில் அதிகம் இடம்பெறுகின்றன. இயற்கை பிரசவம் இடம்பெறுவதற்கு ஓரிரு நாட்கள் இருக்கும்போது முந்திக்கொண்டு சிசேரியன் செய்கின்றனர்.
இந்த நிலை மாறவேண்டும். இயற்கை பிரசவத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். அதற்கு எமது பிள்ளைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இயற்கை பிரசவம் இடம்பெற்றால் இரண்டாவது பிரசவம் மிகவும் இலகுவாக இருக்கும்.
இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் குடும்பக் கட்டுப்பாடு கருத்தில்கொள்கிறது. குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தால் மாத்திரம்தான் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை வளர்த்தெடுக்க முடியும். இதற்காக நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டியுள்ளது. -என்றார் .
0 comments :
Post a Comment