Tuesday, September 25, 2018

இலங்கை நாணயத்தின் பெறுமதி வரலாறு காணத அளவில் வீழ்ச்சி. முன்னாள் அதிபர் விசனம்.

அமெரிக்காவின் டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகின்றமை இன்று பாரதூரமான நிலையை அடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், உண்மையிலேயே தற்போதைய அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தில் குறைப்பாடுகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ச இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“2007, 2008 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இத்தகைய நிலை ஏற்பட்டிருந்தாலும் அதன் தாக்கம் இலங்கையை பாதிக்காத வகையில் தமது அரசாங்கம் செயற்பட்டது.

2007 ஆம் ஆண்டு 110 ரூபா 62 சதமாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 2009 ஆம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடி மறறும் இறுதி யுத்தத்தினை எதிர்கொண்டும் 114 ரூபா 92 சதமாகப் பேணப்பட்டது.

2015ம் ஆண்டு பொதுத்தேர்தலை வெற்றிகொள்வதற்காக தற்போதைய அரசாங்கம் எவ்வித கரிசனையும் இன்றி சம்பள அதிகரிப்பு, எரிபொருள் விலை குறைப்பு மற்றும் இறக்குமதிப் பொருட்களின் வரிகள் குறைப்பு போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

இதனால், அரசாங்கத்தின் செலவு சடுதியாக அதிகரித்தது. வேறு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி அதிகரித்தமையால் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழச்சியடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிதுள்ளது.

எனினும், அது உண்மையிலேயே தற்போதைய அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தில் உள்ள குறைபாடு.

எரிபொருள் மற்றும் மோட்டார் வாகன இறக்குமதி அதிகரித்தமை போன்ற காரணங்களினால் ஏற்பட்ட வர்த்தக பற்றாக்குறை மற்றும் வரவு செலவு துண்டு விழும் தொகையை நிவர்த்தி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் பெருமளவில் வெளிநாட்டு வணிகக் கடனை பெற்றுக்கொண்டுள்ளதாக” அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com