போதைப்பொருளுக்கென தனி நீதிமன்று அமைக்க கோரப்போகிறாராம் ரெஜிநோல்ட் கூரே!
போதைப் பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்குவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
நிதி மோசடிகளை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ள நீதிமன்றினை போன்று போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டணை வழங்கக் கூடிய வகையிலான விசேட உயர் நீதிமன்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் வன்முறைகளை கட்டுப்படுத்துதல், மாணவர்கள் மத்தியில் போதைவஸ்து புளங்குவதை தடைசெய்தல் சம்பந்தமாகவும் சட்டவிரோத மணல் வியாபாரம் உள்ளிட்ட சமூக சீரழிவுகளை கட்டுப்படுத்துதல் போன்றவை தொடர்பாகவும் யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (04.09.2018) முற்பகல் 10 மணியளவில் கூட்டம் நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை பாடசாலை அதிபர்களுடனும் சர்வமதத் தலைவர்களுனும், பேராசிரியர்களுடனும் கலந்துரையாடினேன். யாழ் குடாநாட்டில் மாணவர்கள் பணத்திற்காக போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும் அதற்காக 9ம் 10ம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டது. பாடசாலையில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள் இந்த போதை பழகத்தினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதாவும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக தெல்லிப்பளை அளவெட்டி மாதகல் வட்டுக்கோட்டைப் பகுதிகளில் இவ்வாறான பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்கள் முடிவடையும்போது மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் குழு பெண் மாணவிகளை பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும். பஸ் தரிப்பிடங்களிலும் இவர்கள் தொந்தரவு கொடுப்பதகாவும் தெரிவிக்கப்பட்டது.
தந்தை மற்றும் தாய் ஆகியோர் வேறு ஒரு திருமணத்தினை முடித்து செல்வதனால் பிள்ளைகள் தனிமை ஆகின்றனர். அவர்களினல் பலர் இந்த போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவது இனங்காணப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான பிரச்சினைகளை தடுப்பதற்கு சமூக மட்டத்திலும் கிராம மட்டத்திலும் பெற்றோர்களினதும் சமூக நலன்விரும்பிகளினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் சமூக அக்கறை கொண்டோர் இணைந்து செயற்படுவதன் ஊடாகவே இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்களுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருப்பதன் ஊடாக பிள்ளைகள் தவறான பாதையில் பயணிப்பதனை இலகுவில் அடையாளங்கண்டு கொள்ள முடியும். அவர்களை நல்வளிப்படுத்த முடியும் இதற்காக அனைவரினம் ஒத்துழைப்பு அவசியமாகின்றது என குறிப்பிட்டார்;.
தகவல் கிடைக்கின்றபோதும் விரைந்து செயற்படுவதில் பொலிஸாருக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளதாக தெரிவித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர விரைந்து செல்வதற்கு உரிய போதிய வாகனவசதிகள் இல்லாது இருப்பதாக தெரிவித்தார்.
இருந்தபோதும் இயலுமானவரையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பாடசாலை ஆரம்பிக்கும்போதும் முடியும்போது போக்குவரத்து பொலிஸார் பாடசாலைக்கு அருகாமையில் கடமை புரிகின்றனர். யாழ் ஐந்து சந்தி, மன்னார் பேசாலை, அராலி போன்ற பல பகுதிகளில் கேரள கஞ்சா கரோயின்போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கொடிகாமம், மண்கும்பான், போன்ற பகுதிகளில் களவாக மண் அகழ்வு செய்யப்படுகின்றது. ஆயினும் அதனை கொண்டு செல்பவர்கள் அனைத்து சந்திகளிலும் தமது தரப்பினரை தகவல் வழங்குவதற்காக நிறுத்திவிட்டு பாதுகாப்பாக பயணிக்கின்றனர். பொலிஸார் செல்லும் போது அவர்கள் அதிலிருந்து அகன்று சென்றுவிடுகின்றனர் என்றும் குறிப்பிட்டாhர்.
இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ, பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசூரிய, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் 1 ஏச்.டி.எஸ்.துசித ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், உதவிச் செயலர் ஏ.எக்ஸ் செல்வநாயகம் மற்றும் பிரதேச செயலர்கள் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment