ஐ.நா வில் இலங்கை அரசு செய்யவேண்டியதை உலக இலங்கையர் பேரவை செய்யும்.
அமெரிக்காவினால் மலக்குளிக்கு நிகரானது என அறிவிக்கப்பட்டுள்ள ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொண்டுவரப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக, இலங்கை அரசினால் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் அரசு அதனை செய்யவில்லை என உலக இலங்கையர் பேரவையின் தலைவர் சுனில் சந்தரகுமாரா தெரிவித்துள்ளார்.
இன்று 10 திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 39 வது அமர்வுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மியன்மாருக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபையினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அதே தருஸ்மான் அவர்களாலேயே மியன்மாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களை பௌத்தர்கள் கொல்கின்றனர் என்றும் அவ்வாறே இலங்கையிலும் தமிழர்கள் கொல்லப்படுவதாக புதிய புரளி ஒன்றை புலம்பெயர் தமிழர்கள் கிளப்ப முற்படுகின்றனா் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இக்குற்றச்சாட்டுக்கான பொதுவான காரணி பௌத்தர்கள் என்பதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பாக 39வது அமர்வில் சமர்பிப்பதற்கென மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையானது கடந்த 2015 ஒக்டோபர் 01 ம் திகதி நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை அடிப்படையாக கொண்டே அமைந்துள்ளது என்றும் உலக இலங்கையர் பேரவையின் அறிக்கை குறிப்பிடுகின்றது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொண்டுவரப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்பட்ட சட்டவிரோத கைது தொடர்பில் பேசப்பட்டுள்ளது. காணமல்போனோரின் காரியாலயத்தின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படவேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும், பயங்கரவாத தடுப்புச்சட்டம் இல்லாதொழிக்கப்படவேண்டும், பூந்தோட்டம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்பன அறிக்கையில் அடங்கியுள்ள சிபார்சுகளில் சிலவாகும்.
நாட்டை பிரிக்க முற்படுகின்ற புலிகளின் ஆதரவாளர்கள் இவ்வறிக்கையினை பயன்படுத்தி கொள்வார்கள். 1948 இலிருந்து தமிழ் மக்களை சிங்களவர் கொன்றதாக கூறுகின்றார்கள். இலங்கை இராணுவம் தமிழரின் பூர்வீக பூமியை ஆக்கிரமிப்பதாக சொல்லுகின்றார்கள். இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசு பதிலளிக்கவில்லை. இச்சந்தர்பத்தில் நாட்டை மதிக்கின்ற மக்களாக நாம் சுவிட்சாலந்து சென்று இக்குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கின்றோம் என்று உலக இலங்கையர் பேரவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு 17 உறுப்பு நாடுகளிடம் கையொப்பமிட்டு சமர்பித்தால் ஐ.நா அதனை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிர்பதந்தத்திற்கு உட்படும் என்றும் பேரவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு குறித்த தீர்மானத்தில் மாற்றத்தை கொண்டுவந்தால் எமக்கு ஏற்றவாறு சர்வதேச நாடுகளை மாற்றிக்கொள்ள முடியும். எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியுடன் எமக்கு வழங்கப்பட்டுள்ள 2 ஆண்டு கால அவகாசம் முடிவுக்கு வருகின்றது. நாம் இவ்வாறு ஒன்றை செய்யாதவிடத்து எம்மீது ஐ.நா அழுத்தங்களை பிரயோகிக்ககூடிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.
இது தொடர்பில் நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்கள் விலைவாசி ஏற்றம் போன்ற செயற்பாடுகளில் கவனத்தை செலுத்துகின்றபோது, அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு தேவையானவற்றை இங்கு நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றது. புதிய அரசியல் யாப்பை கொண்டுவர முடியாதவிடத்து 20 ம் திருத்தத்தின் ஊடாக அவற்றை நிறைவேற்றிக்கொள்ளவும் முயற்சிக்கின்றது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment