Friday, September 21, 2018

ஆங்கிலம் தெரியாது என்ற அனந்திக்கு, வருகின்றது மேலுமோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.

வட மாகாண உறுப்பினரான டெனீஸ்வரனை பதவிநீக்கம் செய்திருந்தார் வடமாகாண முதல்வர். அவ்வாறு பதவிநீக்கம் செய்தமை தவறானது என நீதிமன்று தீர்பளித்திருந்ததுடன் அவரை தொடர்ந்தும் அமைச்சராக செயற்பட அனுமதிக்குமாறு நீதிமன்று ஆணையிட்டிருந்தது யாவரும் அறிந்தது.

குறித்த நீதிமன்ற ஆணையை நிறைவேற்றாமை தொடர்பில் நீதிமன்றை அவமதித்த வழக்கொன்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்கனேஸ்வரன் மீது தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பிரதிவாதிகளாக மேலும் அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்பத்திரமும் ஏனைய ஆவணங்களும் ஆங்கில மொழியில் உள்ளனவென்றும் தனது கட்சிக்காரரான அனந்தி சசிதரனுக்கு ஆங்கிலமொழி தெரியாது என்றும் தெரிவித்த அனந்தி சசிதரனின் வக்கீல் கணேசராஜா, குற்றப் பத்திரத்தில் உள்ள விடயத்தை புரிந்துகொண்டு குற்றவாளியா, சுத்தவாளியா என்று பதிலளிக்க முடியாத நிலையில் தனது கட்சிக்காரர் உள்ளதாக மன்றில் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் டெனீஸ்வரனின் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, அனந்தி சசிதரன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆங்கிலத்தில் உரையாற்றியிருக்கின்றார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உண்டு.

அவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்து, ஆங்கிலம் தெரிந்திருந்தும், தமக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று கூறியதன் மூலம் இந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவர் அவமதித்துள்ளார் எனப் பிறிதொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாம் தொடுக்க எண்ணியுள்ளோம். ஆகவே குறித்த விடயத்தை நீதிமன்றப் பதிவுகளில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினார்.

அவரது கோரிக்கையை ஏற்ற நீதியரசர்கள் அந்த விடயங்களை நீதிமன்றப் பதிவுகளில் தவறாது சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டனர்.


அத்துடன் அங்கு குறுக்கிட்ட நீதியரசர்கள் இந்த வழக்கில் தம் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளை நியமித்து நீதிமன்றுக்கு எதிர்மனுதாரர் அனந்தி சசிதரன் சமர்ப்பித்த 'புரொக்ஸி' பத்திரத்தை பரிசீலனைக்கு எடுக்க உத்தரவிட்டதுடன் குறித்த புராக்ஸி ஆங்கிலத்தில் நிரப்பப்பட்டிருந்தமை கண்டு தெளிவாகியது.

சட்டத்தரணி ஒருவரை நியமிக்கும் புராக்ஸி எனப்படும் அப்பத்திரத்தினை அனந்தி சசிதரன் ஆங்கில மொழியில் நிரப்பியிருந்தமையை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் தனது சட்டத்தரணியைத் தாம் நியமிப்பது பற்றிய ஆவணத்தை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கும் எதிர்மனுதாரர், தமக்கு ஆங்கில மொழி தெரியாதமையால் குற்றவாளியா, சுற்றவாளியா என்றுரைக்க முடியாமல் உள்ளது என்று கூறும் ஆட்சேபனையை ஏற்க முடியாது என மறுத்துரைத்தனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com