Friday, September 7, 2018

பெருந்தலைவனைக் கொன்ற அடுத்த நாட்டுக்காரரை விடுதலை செய்தால் அது தேசத்துரோகம். ஸ்ரான்லி ராஜன்

மறுபடியும் 7 தமிழர் விடுதலை என, களம் என சத்தம் வர ஆரம்பித்துவிட்டது. இதில் 7 தமிழர் என்பதே பெரும் தவறு, மூவர் இந்தியர் மற்ற நால்வர் இலங்கையர் என்பதே உண்மை. இதில் 4 பேரை கேட்க வேண்டியது இலங்கை அரசு, இந்தியர்களான தமிழகத்தினர் அந்நியநாட்டு குடிகமன் 4 பேரை விடுவி என சொல்வது உலகிலே எங்குமே இல்லாத அதிசயம், அப்பட்டமான தேச துரோகம்.

மீதி 3 இந்தியரும் என்ன தியாகிகளா? நளினி பேரரிவாளன் உட்பட்ட மூவரும் நிச்சயம் பெரும் குற்றவாளிகள். சந்தேகமில்லை பேரரிவாளன் என்பவன் யாழ்பாணத்திற்கே சென்று புலிகளை சந்தித்து பயிற்சி எல்லாம் எடுத்தவன், இந்திய ராணுவத்திற்கு எதிராய் இங்கே "சாத்தானின் படைகள்" என்ற புத்தகம் எல்லாம் அச்சிட்டவன்.

நளினி முதலில் விவரம் புரியாமல் சிக்கினாலும் காதலுக்காக, காதலுக்காக நாட்டின் தலைவனையே கொல்ல துணை போனவர். இவர்கள் எல்லாம் நீண்ட நாள் சிறையில் இருந்தார்கள் என்பதற்காக விட முடியாது, நடந்த சம்பவம் அவ்வளவு கொடூரமானது.

இந்நாட்டில் நடந்தது உலகை உலுக்கிய படுகொலைகளில் காந்தி, இந்திராவினை தொடர்ந்தது ராஜிவ் கொலை. காந்தி இந்திரா கொலையாளிகள் சம்பவ இடத்திலே பிடிபட்டதும் அவர்களை தூக்கில் இட்டதும் யாவரும் அறிந்தது

ஆனால் ராஜிவ் கொலை உலகிற்கே சவால்விட்டது, கொலையாளிகளான புலிகளே முடிந்தால் இந்தியா கண்டுபிடிக்கட்டும் என சவால் விட்டனர், லண்டனில் இருந்து கிட்டு அப்படித்தான் சொன்னான்.

ஆனால் மிக அழகாக, தைரியமாக குற்றவாளிகளை அடையாளம் காட்டி நின்றது இந்திய புலனாய்வு துறை. புலிகளின் சால்ஜாப்புகள் எல்லாம் கலைந்தது. இதில் 24 புலிகள் தேடுதலிலே சயனைடு கடித்தனர், சிவராசனும் தனுவும் தற்கொலை செய்தார்கள்.

பின் 26 பேருக்கு தூக்கு அறிவிக்கபட்டு பின் அவர்கள் விடுவிக்கபட்டு 7 பேருக்கு ஆயுள் என்றானது, இப்பொழுது அவர்களையும் விடுவிக்க வேண்டுமாம். நிச்சயம் கூடாது, அப்படி விடுவித்தால் மாபெரும் தவறான முன் உதாரணமாக அமையும்.

அப்துல் குரு, யகூப் மேமனை எல்லாம் தூக்கிலிட்ட இந்திய அரசு இந்த சண்டாளர்களை விட்டிருக்க கூடாது. கேட்டால் சோனியா மன்னித்தாராம், ராகுல் உருகினாராம். ஆனால் ராஜிவ் மட்டுமா செத்தார்? 16 பேர் செத்தனர், அங்கவீனமானவர்கள் ஏராளம்.

ராஜிவ் குடும்பம் அரசியலுக்காக சிலதை சொல்லலாம், மீதி 16 பேரின் குடும்ப உணர்வுகள் என்ன? அவர்களுக்கான நியாயம் என்ன?

சரி இந்த சண்டாளா நளினி, பேரரிவாளன் கும்பலாவது ஒரு இடத்தில் ஒரே ஒரு இடத்தில் இந்த புலிகளாலே நாங்கள் நாசமானோம் என சொன்னார்களா?

அழுது புலம்பி திரியும் பேரரிவாளனை பெற்ற மகராசி ஒரு இடத்திலாவது புலிகளால் என் குடும்பம் அழிந்தது என சொல்லி இருக்கின்றாரா?

இல்லை, நிச்சயம் இல்லை. அதாவது இன்னும் தங்கள் மீதான தவறை அவர்கள் ஒப்புகொள்ளவே இல்லை பின்னர் எப்படி விடுதலை பற்றி யோசிப்பது?

இவர்கள் துயரத்திற்கு முதல் பொறுப்பு சனியன் பிரபாகரன், ஆம் அவனே முதல் பொறுப்பு. ஒரு இடத்திலாவது அவர்கள் குற்றமற்றவர்கள், இயக்கம் அவர்களுக்கு கொலைதிட்டத்தை சொல்லவில்லை என்றால் எப்போதோ முடிவு வந்திருக்கும்.

ஆனால் அவனோ ஒருவார்த்தை சொல்லவிலை, ராஜிவ் கொலை ஒரு " துன்பியல் சம்பவம்" என சொல்லி நகர்ந்தானே தவிர இவர்களை பற்றிய கவலை இல்லை. (ஆனால் நளினி மகள் டாக்டர் ஆனாள், பேரரிவாள்ன் தாய்க்கு சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் அளவு பணம் வருகின்றது எப்படி என்றெல்லாம் நாம் கேட்க கூடாது)

அவனை பொறுத்தவரை கிட்டு செத்தான், ஹரிபாபு செத்தான், தனு செத்தாள், சிவராசன் செத்தான் அப்படியே இவர்களும் செத்து தொலையவேண்டும் , இயக்க விதி என்பது அதுதான். அது சயனைடு கடித்து செத்தால் என்ன? தூக்கில் தொங்கினால் என்ன? புலி என்றால் சாகவேண்டும். ஆக அவனை பொறுத்தவரை இவர்கள் சாக வேண்டும் ஆனால் காத்து நிற்பது இந்தியா.

இவர்களை தூக்கில்தான் போட வேண்டும், இல்லாவிட்டால் என்ன செய்யலாம்? அமெரிக்காவில் இரட்டை கோபுர தகர்ப்பில் சிக்கிய தீவிரவாதிகளுக்கு 200 ஆண்டுகால ஆயுள் விதித்து குவாண்டமாவோ தீவு சிறையில் வைத்தது போல் வைக்கலாம்.

ஆம், அமெரிக்காவில் நடந்த மாபெரும் அழிவு அது என்றால், ராஜிவ் கொலை இந்திய ஆன்மாவில் விழுந்த அடி. அதற்காக இவர்களை விடுவிக்காமல் வாழ்நாள் சிறையில் வைப்பதுதான் சரி, இல்லாவிட்டால் சட்டத்தை திருத்தி தூக்கிலும் இடலாம் ஒன்றும் தவறில்லை. நடந்த கொடூரம் அப்படி

வஞ்சகமாக வலைவிரித்து ராஜிவினை கொடூரமாக கொல்லும் திட்டத்தில் பங்கெடுத்து அதை நிறைவேற்ற உதவியர்கள் இவர்கள். பல இடங்களில் தெரிந்தே உதவியிருகின்றார்கள், பேரரிவாளன் சிவராசனின் சதிதிட்டம் இலங்கைக்கு வயர்லெஸில் விவாதிக்கபடும் பொழுதெல்லாம் பேட்டரி முதல் சகல விஷயங்களில் உதவி இருக்கின்றார்.

அதிலும் சாந்தனும், நளினியும் அவர் கொல்லபடும் வரை அருகிருந்தே பார்த்தவர்கள் என்றால் எவ்வளவு கொடூர மனம்? இப்பொழுது நடந்திருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால் திமுக ஆளும் கட்சியாக இல்லை, இருந்திருந்தால் இப்பொழுது 7 தமிழர் விடுதலை என நாடகம் ஆடுவார்கள்.

நமக்கு திமுகவினை பற்றி நன்றாய் தெரியும், நிச்சயம் அவர்கள் 7 பேரையும் விடுவிக்கவே பார்ப்பார்கள் அதுவும் பாஜக டெல்லியில் இருக்கும்பொழுது அது தீவிரமாக முயற்சிக்கபடும். காரணம் 7 பேரை விடுவித்தால் வடக்கே பெரும் கலவரம் வெடிக்கும், பாஜக அரசுக்கு சிக்கலாகும் என்ற அரசியல் கணக்கு தமிழக வாக்கு கணக்கு இன்னபிற‌.

கலைஞரே ராஜிவ் கொலையில் திமுக சிக்கிய பொழுது 1990க்கு முன்பிருந்தே இந்திரா காலத்தில் இருந்தே புலிகளோடு தொடர்புடையவர்களை விசாரிக்க வேண்டும் என சொல்லி பார்த்தார். 1987ல் இந்திய ராணுவத்தை புலிகள் கொல்ல தொடங்கிய காலத்தின் பின்னரான நிலையினைத்தான் பார்க்க வேண்டும், பத்மநாபா கொலையாளி எப்படி தப்பினான்? யார் உதவினார் என கேட்ட பின்பு கலைஞர் அமைதியானார்.

ராஜிவ் கொலை எனும் மீறமுடியாத கயிறு அவரை கட்டிபோட்டதே அன்றி இல்லாவிட்டால் திமுகவின் ஈழ அழிச்சாட்டியம் எங்கோ போயிருக்கும். இப்பொழுது பாஜகவினை எதிர்த்து தமிழ் அரசியல் செய்யவேண்டிய நேரத்தில் இந்த 7 பேர் விடுதலை எல்லாம் திமுக சும்மா விடாது. திமுக சுபாவம் அப்படி.

நல்ல வேளையாக அவர்கள் பதவியில் இல்லை என்பதால் ஆறுதல். பெரும் ஆறுதல்.

இந்த 3 இந்தியரையும் , 4 இலங்கையர்களையும் விட முடியாது. அதுவும் எல்லை தாண்டிவந்து பெரும் கொலை செய்த அந்த 4 பேரையும் இத்தேசம் மன்னிக்காது. முடிந்தால் இவர்களை தூக்கில் இடலாம், இல்லை 200 ஆண்டுகால சிறை என அமெரிக்க பாணியில் நிர்ந்தரமாக வைக்கலாம்.

அதுவே மாபெரும் முன்னுதாரணமாகவும் , தண்டனையாகவும் அமையும். பழனிச்சாமி அரசு அதை செய்யட்டும், நிச்சயம் அவர்களுக்கு அடுத்த தேர்தல், வோட்டு வங்கி இன்னபிற இம்சைகள் இல்லை. அதனால் துணிந்து செய்யட்டும், இந்த மாநிலத்தின் நாட்டுபற்று மிக்கோர் நிச்சயம் அவருக்கு ஆதரவு கொடுப்பர்.

மிஸ்டர் பழனிச்சாமி , அடுத்த நாட்டில் இருந்து வந்து இங்கு பெரும் தலைவனை கொன்ற 4 அடுத்தநாட்டு குடிமக்களை விடுவிக்க துணைபோனால், அவர்களுக்கு உதவிய உள்நாட்டினர் 3 பேரை விடுவிக்க‌ நீர் ஏற்ற ரகசிய காப்பு பிரமாணத்திற்கு என்ன அர்த்தம்?

மேன்மைதங்கிய ஆளுநரே, அடுத்த நாட்டு குடிமக்கள் இந்நாட்டில் வந்து செய்த பெருங்கொலைக்கு விடுதலை அளித்து அவர்களை விடுவிக்க பரிந்துரை செய்வீரா? செய்தால் அது தேசவிரோதம் ஆகாதா?

அதிகார வர்க்கம் இந்நாட்டு தலைவரை கொன்ற அடுத்தநாட்டுகாரனை விடுவித்து டாட்டா காட்டினால் அதைவிட பெரும் மானகேடு இத்தேசத்திற்கு உண்டா?

இத்தேசம் தன் கவுரவத்தை நிலைநாட்ட இந்த சண்டாளர்களை விடவே கூடாது என்பதுதான் நாட்டுபற்றுள்ளோரின் உருக்கமான கோரிக்கை

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com