எதிர்காலத்தில் சமஷ்டி முறைமைக்கு வாய்ப்புண்டா? - சேகுதாவூத் பஸீ்ர்
இலங்கையின் வடபுலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இராஜதந்திரப் போர் மையங்கொள்ளத் தொடங்கியிருப்பதை அனைவரும் அறிவோம். வடக்கில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரண வீடமைப்பைக் கையாள்வது சீனாவா இந்தியாவா என்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது. இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தம்பக்கம் இழுப்பதில் சீனா முந்திக் கொண்டது.
ஆயினும், பின்னர் கூட்டமைப்பு இந்தியாவின் பக்கம் தள்ளாடியவாறு சாய்ந்துவிட்டதைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சீனா ஒரு வகைச் சீற்றத்தோடு,வடக்கின் வீடமைப்புத் திட்டத்தில் இந்தியாவின் தலையீடு உள்ளதா என்று இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதே நேரம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் முன்னிலையில் - இந்தியாவுக்கும் பலாலிக்குமிடையில் இந்தியத் தனியார் விமானப் போக்குவரத்தை உடனடியாக ஆரம்பிப்பது என்ற முடிவை இந்தியாவும் இலங்கையும் எடுத்துள்ளன.
இம்முடிவு நடைமுறைப்படுத்தப்படுமானால் ஐரோப்பாவில் வாழும் இலட்சக்கணக்கான வடபுலத் தமிழர்கள் இலங்கை வரும் போது சென்னைக்கு வந்து சில நாட்கள் அங்கு தங்கியிருந்து பொருட்கள் நுகர்வில் ஈடுபட்ட பின்னர் நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு வருவர். இதனால் கொழும்பு நட்டத்தை அடைகிற அதே வேளை சென்னை இலாபம் அடையும் வாய்ப்புள்ளது.
மேலும், யாழ் - சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணம் கொழும்பு சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணத்தைவிடக் குறைவானதாகவே இருக்கும். எனவே, சென்னைக்குச் செல்லுகின்ற வடகிழக்கைச் சேர்ந்த பெரும்பாலான பயணிகள் பலாலி ஊடாகவே செல்ல விரும்புவர். பலாலி விமான நிலையத்தை சர்வதேச சேவைக்கு இந்தியாவைத் தவிர வேறெந்த நாடும் உபயோகிக்க முடியாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இப்படியாக வடபுலத்து நிலைமை மாறி வருகிறதன் அரசியலையும் நன்கு புரிதல் இங்கு முக்கியமாகிறது. குறைந்த - சிறந்த அரசியல் தீர்வாக சமஷ்டி முறை அரசியலமைப்பையே தமிழர்கள் வேண்டி நிற்கிறார்கள்.
சீனா 2009 இல் விடுதலைப் புலிகளைத் தோல்வியடையச் செய்வதற்கு இலங்கை அரசுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கிய நாடுகளுள் முதன்மையானதாகும்.
வடக்கில் அரங்கேறும் இராஜதந்திர யுத்தத்தை வெல்வதாயின் தமிழ் அரசியல் சக்திகளினதும், மக்களினதும் ஆதரவு என்பது சீனாவுக்கோ இந்தியாவுக்கோ மிகவும் அவசியமாதாகும்.
இந்தியா சமஷ்டி பற்றி பல முறை தமிழருக்கு வாக்களித்தும் அது சில பத்தாண்டுகளாக நிறைவேறவில்லை. எந்தவொரு இலங்கை அரசுக்கும் பெரும்பான்மை சிங்களவர்களுக்குள் இந்தியாவுக்கான செல்வாக்கை உட்செலுத்த முடியாது. இம்முடியாமைக்கு வரலாற்றுப் பகை காரணமாகும்.
சமஷ்டித் தீர்வு பற்றி சிங்கள அரசியல் தலைமைகள் மூச்சு விடுவதற்கும் அஞ்சுவதற்கு இந்தியா பற்றிய சிங்களவர்களின் தப்பபிப்பிராயமும் ஒரு காரணமாகும். இந்தியாவை விடவும் சீனாவுக்கு பெரும்பான்மையினருக்குள் மிகப் பெரும்பான்மை ஆதரவு உண்டு. அவர்கள், இந்தியா இங்கு வந்தால் திரும்பிப் போகாது, ஆனால் சீனா வந்தாலும் மீண்டும் போய்விடும் என்று நம்புகிறார்கள்.
தமிழர்களின் அரசியல் வேட்கையும், சிங்களவர்களின் அரசியல் போக்கும் சீனாவுக்குத் தெரியாததுமல்ல, புரியாததுமல்ல. சீனா தனது பட்டுப்பாதையில் இலங்கையை ஒரு சமஷ்டி நாடாகப் பதியமிடும் உத்தியை கையாளமாட்டாது என்றுமில்லை. இந்தியாவை விட சீனாவுக்கு இப்படிச் செய்வது இலகுவானதாகும்.
ஏனெனில் சீனாவிடம் பணமிருக்கிறது. சீனா தனது ஓரிரு மாநகர சபைகளைப் பராமரிப்பதற்குத் தேவையான பணத்தில் இலங்கையைப் பராமரிப்பதோடு அதன் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி வாழ்க்கைச் செலவையும் குறைக்க உதவ முடியும்.
0 comments :
Post a Comment