Friday, September 7, 2018

வடமாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு கிளிநொச்சியில் புதிய அலுவலம்.

வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்திற்கான அலுவலகத்தினை அமைக்க கிளிநொச்சியில் காணி அடையாளம் இடப்பட்டது. நீண்ட காலமாக குறித்த அலுவலகத்தை கிளிநொச்சியை மையப்படுத்தி மக்களுக்கு சேவையாற்றும் வகையில் அமைப்பதற்கு காணி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு தடவைகள் பேசப்பட்டன.

இந்த நிலையில் பலத்த இழுபறிக்கு மத்தியில் கிளிநொச்சி நகரில் குறித்த காணி ஆணையாளர் அலுவலகத்தினை அமைப்பதற்கு இடம் இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி தபால் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு பின்புறமாக சுமார் 1 ஏக்கர் அளவு கொண்ட காணி குறித்த அலுவலகத்திற்காக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

குறித்த காணியினை இன்று கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், மாகாண காணி ஆணையாளர் மற்றும் மாகாண உதவி காணி ஆணையாளர் ஆகியோரிடம் அடையாளம் காட்டியதுடன், குறித்த காணி மேற்குறித்த அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளமை என்ற அடையாளமும் இடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மாகாண காணி ஆணையாளரிடம் ஊடகங்கள் வினவியபோது,

வடமாகாண மக்களுக்கு வேவை வழங்குவதற்காக காணி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும், அந்த அடிப்படையில் இன்று கிளிநொச்சியில் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சியை மையப்படுத்தி கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிற்கு வேவைகளை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த காணியில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு 15 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதனைக்கொண்டு கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர், அடுத்த வருட நிதி ஒதுக்கீட்டில் கிடைக்கும் நிதியுடன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிற்கு இங்கிருந்து சேவை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இருப்பினும் பொருத்தமான கட்டடம் ஒன்றை தற்காலிகமாக எமக்கு வழங்கப்படும் பட்சத்தில் இங்கிருந்து இப்பொழுதே மக்களிற்கான சேவைகைளை வழங்க தம்மால் முடியும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

குறித்த விவகாரம் தொடர்பில் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com