பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் மாற்றங்களுடனான புதிய வரைபு.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள், 48 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்தப்படுவதுடன், ஆகக்கூடியது 8 வாரங்கள் மட்டுமே இவர்களைத் தடுப்பில் வைத்திருக்கலாம் என்பதை வலியுறுத்தும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நீதிபதி தனது உத்தரவை வழங்கி இரண்டு வாரங்களின் பின்னர், சந்தேக நபர்களைத் தடுத்து வைப்பதற்கான கால எல்லையை நீட்டிப்பதற்கான கோரிக்கையை நிராகரிப்பது தொடர்பில், நீதிபதி தன்னிச்சையான தீர்மானத்தை எடுக்கமுடியும் என்றும், அமைச்சரவையில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் தொடர்பாக, குறித்த காலப்பகுதிக்குள் குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதவிடத்து சந்தேகநபர்கள் பிணையில் செல்வதற்கான அனுமதியும் புதிய சட்டவரைவில் வழங்கப்பட்டுள்ளது.
‘நீதிபதி சந்தேகநபர்களை தனிப்பட்ட ரீதியாகச் சந்திக்கவும், அவர்களுடன் தனிப்பட்ட கலந்துரையாடலை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் நல்வாழ்வு மற்றும் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கும் சந்தேகநபர்களின் கருத்துக்களை பதிவுசெய்வதற்குமான அதிகாரத்தைக் கொண்டுள்ளதாக’ பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு முன்கூட்டிய அறிவித்தல்கள் எதையும் விடுக்காது நீதிபதி செல்ல முடியும் எனவும், அவ்விடங்கள், பதிவேடுகள் மற்றும் தடுப்புக் கட்டளைகள், ஏனைய பதிவேடுகள், ஆவணங்களைப் பார்வையிடவும் அங்குள்ளவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கும் நீதிபதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்புதிய சட்டமூலம் அமுலுக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்கள் 72 மணித்தியாலங்கள் வரை நீதிபதியின் முன் நிறுத்தப்படாது தடுத்து வைத்திருப்பதற்கு காவற்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் மாற்றம் ஏற்படும்.
அத்துடன் 3மாதங்கள் தொடக்கம் 18 மாதங்கள் வரை தடுத்து வைக்கப்படும் காலப்பகுதியை நீட்டிப்பதற்கும், பல ஆண்டுகளானாலும் விசாரணைகள் முடிவுறும் வரை சந்தேகநபர்களைத் தடுத்து வைப்பதற்குமான அதிகாரத்தை தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வழங்குகிறது.
‘சிறிலங்காவின் பரிந்துரைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான கோட்பாடு மற்றும் சட்ட வரையறை’ தொடர்பான சட்டமூலமானது கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவையால் அனுமதியளிக்கப்பட்டது.
இச்சட்டமூலமானது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட போதிலும் இதன் முன்னைய பதிப்புக்களில் குறைகள் உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
‘த சண்டே ரைம்ஸ்’ ஊடகத்திற்கு கிடைக்கப்பெற்ற, தற்போது அங்கீகரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் பிரதி தொடர்பாக இந்த ஊடகத்தால் சில அதிருப்திகள் முன்வைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் முன்னர் வரையப்பட்ட சில சட்டமூலப் பதிப்புக்களில், காவற்துறையினரின் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது அங்கீகரிக்கப்பட்ட வாக்குமூலத்தில் நீதிபதியிடம் வழங்கப்படும் வாக்குமூலங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவை என விதந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிபதியிடம் சந்தேகநபரால் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலமானது அரசாங்க தடயவியல் மருத்துவ வல்லுநர் ஒருவரால் பரிசீலிக்கப்படும் எனவும் புதிய சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது சந்தேகநபரைப் பாதிக்கின்றது.
இவ்வாறான அறிக்கையானது ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான, ஆரம்ப கட்ட விசாரணையின் போது வழக்குத் தொடுக்கும் அதிகாரியால் வழங்கப்பட வேண்டும்.
காவற்துறையினர் ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்படுவதில் நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட்ட விவாதத்தை அடுத்தே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் சட்டமூலத்திற்கு அமைச்சரவையில் தடைவிதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பரிந்துரைக்கப்பட்ட சட்டம் தொடர்பாக சட்ட ஆய்வாளர்கள் வேறு பல விடயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றத்தில் ஈடுபடும் அல்லது சதித்திட்டம் தீட்டும் நபருக்கு அல்லது குற்றத்தில் ஈடுபட முயற்சிக்கும் நபருக்கு வழங்கும் நோக்கில் எந்தவொரு ‘இரகசியத் தகவலையும்’ சேகரிப்பதானது சட்டவிரோதமானதாகும்.
இச்சட்டத்தால் வரையறுக்கப்படும் இரகசியத் தகவல்களுக்குள் ‘காவற்துறையினர் அல்லது இராணுவத்தினருடன் தொடர்புபட்ட தகவல்களும் உள்ளடங்குகின்றன. அதாவது நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்பட வேண்டிய அல்லது நிறைவேற்றப்படுகின்ற இராணுவ சார் தகவல்கள் அல்லது சட்ட அமுலாக்கமானது இவ் இரகசிய தகவல்களுக்குள் அடங்குகிறது.
இது பரந்த விடயமாகக் காணப்படுவதுடன், பாதுகாப்பு சார் நடவடிக்கைகளைப் பாதிக்கும் விதமாக அமையலாம் என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். மக்களின் நலன்கருதி அல்லது தேசிய நலன்கருதி பதிவுசெய்யப்பட்ட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் அல்லது கல்விசார் வெளியீடுகளில் வெளியிடப்படும் குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன் பிரதி காவற்துறை மா அதிபர்கள், சந்தேகநபர்களைத் தடுத்து வைப்பதற்கான கட்டளைகளை வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளதால் சில சிக்கல்கள் இருப்பதாகவும், இவர்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தமது அதிகாரங்களைத் துஸ்பிரயோகம் செய்யும் சம்பங்கள் நிகழ்வதாகவும் ஆய்வாளர் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பில் பரந்த அளவில் மீளாய்வு செய்வதற்கான ஏற்பாடு சட்டத்தில் காணப்படுவதாகவும் ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் ஆய்வாளர் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, தற்போது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தில் சில நல்லவிடயங்கள் காணப்படுவதால் இது மனித உரிமை சமூகத்தால் பரந்தளவில் வரவேற்கப்படுகிறது.
இச்சட்டமூலமானது நீண்ட குற்றச் செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ள போதிலும், குற்றங்களில் ஈடுபட்டவர்களை அடையாளப்படுத்துதல், தடுத்துவைத்தல், அச்சம் கொள்ளுதல், கைதுசெய்தல், விசாரணை செய்தல், தண்டனை வழங்குதல் போன்ற முக்கிய செயற்பாடுகளை வலியுறுத்துகிறது.
இந்தச் சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமையின் சட்ட நடவடிக்கையின் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அல்லது சந்தேகநபர் தனக்கு வழங்கப்பட்ட சட்டக் கட்டளையை நிறைவேற்றவோ அல்லது நீதிசார் உத்தரவை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையையோ முன்னெடுக்க முடியாது.
புதிய சட்டமூலமானது ‘சந்தேகநபரைக் கைதுசெய்யும் போது, கைதுசெய்யும் அதிகாரி சந்தேகநபரிடம் கைதுசெய்யும் அதிகாரிகளின் அடையாளங்களைக் கூறுவதுடன், சந்தேகநபரால் இழைக்கப்பட்ட குற்றங்களைக் கூறுவதுடன், எழுதப்பட்ட சட்ட விதியின் பிரகாரம் சட்டவாளரிடம் சந்தேகநபர் தொடர்பை ஏற்படுத்துவதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். சந்தேகநபரின் தனித்துவத்தைக் கருத்திற் கொண்டே கைதுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ எனக் கூறுகிறது.
சந்தேகநபரின் இரத்த உறவு அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் சந்தேகநபரைக் கைது செய்ததற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை வழங்கப்பட வேண்டும்.
இந்த அறிக்கையில் கைதுசெய்த நேரம், திகதி, இடம், கைதுசெய்ததற்கான காரணம், தடுத்து வைக்கப்பட்டுள்ள அமைவிடம், கைது செய்த அதிகாரியின் நிலை போன்ற பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
சந்தேகநபரைத் தடுத்து வைத்திருக்கும் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி 24 மணித்தியாலங்களுக்குள் சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் மற்றும் இவரைத் தடுத்து வைப்பதற்கான விபரங்களை சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவிடம் தெரியப்படுத்த வேண்டும்.
இதனைத் தொடர்ந்து சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவானது சந்தேகநபரிடம் விரைந்து செல்ல வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது.
தற்போது அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம், கைதுகள், தடுத்து வைத்தல், சிறையில் அடைத்தல், பிணையில் விடுதல், குற்றத்திலிருந்து விடுவித்தல், தண்டனை வழங்குதல் போன்ற அனைத்து நடவடிக்கைகள் தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய தரவுத்தளம் ஒன்றைப் பேணவேண்டும்.
இத்தரவுத் தளத்தில் சந்தேகநபரைக் கைது செய்ததற்கான சட்ட நகர்வுகள், தடுப்பில் வைத்திருப்பதற்கான காரணங்கள், அவரை விடுவிப்பதற்கான சட்ட ஒழுங்குகள் மற்றும் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைப்பதற்கான தேவை தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.
இத்தரவுத் தளத்தில் தகவல்கள் பேணப்படும் அதேவேளையில் இவ்வாறான கைதுகள் தொடர்பாக சிறிலங்காவிற்கான மனித உரிமை ஆணைக்குழுவிடம் காவற்துறை மா அதிபர் பதிவை மேற்கொள்ள வேண்டும்.
குற்றவியல் வழக்குப் பதியப்படாத எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களின் பின்னரும் தடுத்து வைக்கப்பட முடியாது. இவ்வாறான சட்ட நகர்வுகள் ஆறு மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படாதவிடத்து, நீதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தேகநபர்களை விடுவிக்க முடியும்.
தடுத்து வைத்தலுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்வதற்கான நிர்வாக சார் நிவாரணங்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான மீளாய்வு சபை ஒன்று உருவாக்கப்படும். தடுத்து வைக்கப்பட வேண்டிய காலப்பகுதி இரண்டு வாரங்களுக்குள் வரையறுக்கப்பட வேண்டும்.
தடுப்பிலிருந்து அல்லது சிறையிலிருந்து சந்தேகநபர்கள் விடுவிக்கப்படும் போது இது தொடர்பாக சிறிலங்காவிற்கான மனித உரிமை ஆணைக்குழுவிடம் தெரியப்படுத்த வேண்டும்.
சந்தேகநபர்களால் மேற்கொள்ளப்பட்ட வங்கியியல் நடவடிக்கைகள், பண வைப்புக்கள், பண மீளெடுப்புக்கள் உட்பட்ட நிதியுடன் தொடர்புபட்ட தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு காவற்துறையினர் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவகங்கள், நிதி சாரா வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றுடன் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.
இதேபோன்று சந்தேகநபர்களின் தொடர்பாடல் சார் தகவல்களைப் பெறுவதற்கு தொலைபேசி உரையாடல்கள், தந்திகள், மின்னஞ்சல்கள், இணையம், காணொளி உரையாடல்கள் போன்றவற்றை குறுக்கீடு செய்து செவிமடுப்பதற்கான அனுமதியை காவற்துறையினருக்கு சட்டரீதியாக வழங்கப்பட வேண்டிய தேவையுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது, குற்றவியல் செயற்பாடுகளை ஐந்து ஆண்டுகள் தொடக்கம் பத்து ஆண்டுகள் வரை இடைநிறுத்தவும் ஒத்திவைப்பது தொடர்பாக சட்டமா அதிபர் தன்னிச்சையான தீர்மானத்தை எடுப்பதற்கான அனுமதியை வழங்குகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், சந்தேகநபர் தொடர்பாக ஒன்று அல்லது அதிகமான நிபந்தனைகளைச் சுமத்துதல், சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட எழுத்துமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபருக்கு மன்னிப்பு வழங்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குதல், புனர்வாழ்வு வழங்குதல், சமூக சேவையில் அல்லது வரையறுக்கப்பட்ட சமூகத்துடன் இணைத்தல் போன்ற பல்வேறு விடயங்களை சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றிடம் கையளிக்க முடியும்.
இச்சட்ட மூலமானது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்கள் தொடர்பான வழக்குகள், வாரஇறுதி நாட்கள், பொது விடுமுறைகள், நீதிமன்ற விடுமுறைகள் தவிர பிற நாட்களில் ஒவ்வொரு நாளும் நடைபெற வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது.
0 comments :
Post a Comment