கொலைகாரர்களும் நினைவுகூரப்படக்கூடியவர்கள் என வாதிடச் செல்கிறார் சுமந்திரன்!
புலிகள் அமைப்பின் யாழ் மாவட்ட அரசியல் துறை என்ற பெயர்கொண்டிருந்த கொலப்படைக்கு தலைவராக இருந்தவர் இராசையா பார்த்தீபன் என்ற திலீபன். இவர் இந்திய இராணுவத்தினருக்கு எதிராக நீராகரம் இன்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்தார் என்பது புலிகள் சார்பு தமிழ் ஊடகங்களும் புலிகளின் முதுகில் பயணம் செய்து தமது அரசியல் இலக்கை எட்ட எத்தனிக்கும் அரசியல்வாதிகளும் நமக்கு சொல்லித்தருகின்ற கதை.
தமீழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர்கொண்டு செயற்பட்ட அமைப்பு எந்த மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்றோம் என்று குறிப்பிட்டார்களோ, அந்த மக்களின் அடிப்படை உரிமைகளில் பிரதானமான வாழ்வுரிமை உட்பட சகலவிதமான உரிமைகளையும் பறித்தனர், மட்டுப்படுத்தினர் என்பது யாவரும் அறிந்த உண்மை.
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனிதவிரோத செயற்பாடுகளுக்கு தளபதியாக இருந்தவர்தான் திலீபன். திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகள் அவர் உயிரிழந்த நல்லூரில் இடம்பெற்று வருகின்றது. இந்நிகழ்வானது அரசியல் கட்சிகள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு மேற்கொள்ளப்படுகின்றதோர் நிகழ்வென்பதை ஆரம்ப நிகழ்வுகளின்போது சம்பந்தப்பட்ட தரப்பினர் ரகளையில் ஈடுபட்டமையினூடாக தெளிவாகியுள்ளது.
இந்நிலையில் நல்லூரில் அமைந்துள்ள முன்னாள் பயங்கரவாதியான திலீபனின் நினைவிடத்தில் வரும் 27ம் திகதி நினைவு நிகழ்வை நடத்துவதற்கு தடைவிதிக்குமாறு கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிவான் மன்றில் யாழ்ப்பாணம் பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அத்துடன், நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளிலான வேலி மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பந்தல், திலீபனின் உருவப் படத்தை அகற்றுவதற்கான கட்டளையை யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளருக்கு வழங்குமாறும் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.
யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையாகி இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவானிடம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை முன்வைத்தனர்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானின் சமாதான அறையில் இந்த விண்ணப்பம் முன்வைக்கப்பட்டது.
'இலங்கையிலும் உலக நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவு கூருவதற்கு நல்லூரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸாரின் புலனாய்வுத் தகவல்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது.
பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரான திலீபன், உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த நல்லூரில் இந்த நினைகூரல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அதற்காக நல்லூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தைச் சுற்றி இரும்புக் கம்பிகளிலான வேலி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதற்கு அருகாமையில் பந்தல் இடப்பட்டு மேசையின் மேல் திலீபனின் உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.
திலீபனின் நினைவுகூரலை நடத்த தடை உத்தரவு வழங்கவேண்டும். அத்துடன், யாழ்ப்பாண மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் அந்தச் சபையின் ஆணையாளரின் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக இரும்புக் கம்பிகளால் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன, பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றை அந்தப் பகுதியிலிருந்து அகற்றுவதற்கு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளருக்கு உத்தரவிடவேண்டும்' என்று பொலிஸார் தமது விண்ணப்பத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளரை வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.
நீதிமன்றின் அழைப்புக் கட்டளை யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளருக்கு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம் தலைமையிலான சட்டத்தரணிகள் இந்த வழக்கில் முன்னிலையாகி பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு ஆட்சேபனையை முன்வைக்கவுள்ளதுடன் குறித்த அணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் முன்னிலையாகி நினைவுகூருவதற்கு உரிமையுண்டு என்று மன்றில் சமர்ப்பணம் செய்யவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
இங்கு எவரை நினைவுகூர்வதற்கு எவருக்கு உரிமையுண்டு? அதற்கு அரச அனுசரணை வழங்கமுடியுமா?
திலீபன் நினைவுகூரப்படுகின்றபோது ஏனையவர்களின் அடிப்படை உரிமைகளை அது மீறுவதாக அமையவில்லையா?
இந்த நினைவுகூரலானது ஒர் கட்டாயத்திணிப்பா?
குறித்த நினைவுகூரலானது திலிபனால் கொலைசெய்யப்பட்ட உறவுகளை நிந்திப்பதாக அமையாதா என்ற கேள்விகளுக்கான பதிலுடனா பா. உ. சுமந்திரன் தனது சமர்ப்பணத்தை முன்வைக்கவுள்ளார்.
திலீபன் பயங்கரவாத அமைப்பொன்றின் முன்னணித் தளபதியாக பல்வேறு கொலைகளில் நேரடியாக தொடர்புபட்டிருந்ததோர் கொலைகாரன். குறிப்பாக புலிகள் இயக்கத்தினர் வடகிழக்கில் செயற்பட்ட ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புக்களை தடைசெய்தபோது, அவ்வியக்கங்களை சேர்ந்த உறுப்பினர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்ததில் நேரடியாக சம்பந்தப்பட்ட மற்றும் அதற்கான ஆணைகளை வழங்கிய பயங்கரவாதி.
யாழ் மாவட்டத்தை உலுக்கிய கந்தன்கருணை படுகொலை மற்றும் ரெலோ உறுப்பினர்களை யாழ் வீதிகளில் உயிருடன் டயர் போட்டெரித்தது போன்ற கொலைகளில் திலீபன் நேரடியாக தொடர்புபட்டிருப்பது யாவரும் அறிந்த உண்மை. இவ்விடயங்களில் திலீபன் நேரடியாக சம்பந்தப்பட்டதை நிரூபிக்க இன்றும் கண்கண்ட சாட்சிகள் உண்டு.
திலீபன் எனும் கொலைகாரனை நினைவுகூருவதானது திலீபனால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை நிந்திப்பதாக அமைகின்றது. திலிபன் குறித்த பாதிக்கப்பட்டவர்களுக்கு கொலைகாரனாகவே தென்படுகின்றான், இந்நிலையில் அம்மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் சுமந்திரன் அவர்களது விருப்புக்கு மாறாக திலீபனை நினைவுகூரலாம் அல்லது திலீபன் தியாகி என்று வாதிட முன்வருவது மனிதகுலத்திற்கு எதிரான செயலாகும்.
ஒரு தரப்பு மக்களால் மனிதகுல விரோதி என அறியப்படுகின்ற திலீபனை நினைவுகூர்வதால் ஒரு தொகை மக்கள் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை கருத்தில்கொண்டு அதற்கான அனுமதியை நீதிமன்று மறுக்கும் என அம்மக்கள் எதிர்பார்கின்றனர்.
0 comments :
Post a Comment