வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைச் சந்தேக நபர் நியோமல் ரங்கஜீவ பிணையில் விடுதலை.
2012ம் ஆண்டு கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றின்போது அங்கிருந்த சிறைக்கைதிகள் 27 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இக்கொலைகள் தொடர்பாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு கடந்த 9 மாத காலமாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவை மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுப்படி பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியோமல் ரங்கஜீவவை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பிரதி கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சமர்பிக்கப்பட்டது.
அதன்படி சந்தேகநபரான நியோமல் ரங்கஜீவவை பிணையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
ஒரு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திற்கு சென்று கையொப்பமிடவும் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், கடவுச்சீட்டை நீதிமன்றின் பொறுப்பில் எடுக்கவும் நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment