Friday, September 14, 2018

தேர்தல் வேதாளம் மீண்டும் முருங்கையில்! தீர்வின்றேல் மீண்டும் போராம்! சம்பந்தன்.

தேர்தல்கள் வரும்போது அரசியல்வாதிகள் மூட்டை மூட்டையாக உறுதிமொழிகளை அள்ளி வீசுவர். அது தெற்கில். ஆனால் நமது அரசியல்வாதிகள் இனவாதத்தையும் அரசியல் பிரச்சினையையும் கையிலெடுப்பர். அதற்கும் மேலாக சென்று அரசியல் தீர்வு கிடையாவிட்டால் ஆயுதத்தீர்வே வழி என்பர். அதற்கு தங்களுடன் சர்வதேசம் ஒத்து நிற்கும் என்பர். இவ்வாறான வார்த்தைகளை நாம் கேட்காத தேர்தல் ஒன்றை இதுவரை சந்தித்ததே இல்லை.

எதிர்வரும் மாதங்கள் தேர்தல் மாதங்களாக அறிவிக்கப்படவுள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்றக் குழுவினர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்தக் குழுவில் இரா.சம்பந்தனும் இடம்பெற்றிருந்தார். கடந்த திங்கட்கிழமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்தக் குழுவினர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

சந்திப்புக்களை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் இந்தியப் பிரதமருடனான சந்திப்புத் தொடர்பில் வினவியபோது,

“இந்தியப் பிரதமருடனான சந்திப்பில் பல விடயங்கள் குறித்துப் பேசினோம். அதில் அரசியல் தீர்வு தொடர்பில் நான் அதிகம் பேசினேன்.

ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இலங்கையில் தொடரும் இனப் பிரச்சினைக்கு இன்னமும் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. இனப் பிரச்சினை இனிமேலும் தொடரக் கூடாது. 70 ஆண்டுகளில் சுமார் 30 ஆண்டுகள் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. இனப் பிரச்சினையால்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். இதன்போது மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள், பேச்சுகள் மூலம் மட்டுமே காலத்தை இழுத்தடித்தன. இதனால் அரசியல் தீர்வு எட்டாக்கனியாகவே இருந்தது.

30ஆண்டு கால ஆயுதப் போரால், எமது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டன. தமிழர் தாயகம் அரச படைகளின் தாக்குதல்களினால் பேரழிவைச் சந்தித்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனமாக்கப்பட்டனர்; பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

போர் முடிவுக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. அபிவிருத்தி மாத்திரம் ஓரளவு இடம்பெற்று வருகின்றது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதில் இந்திய அரசு பெரும் உதவிகளை வழங்கி வருகின்றது. அதற்கு நன்றிகளைக் கூறுகின்றோம்.

அபிவிருத்தி நடவடிக்கைகள் மாத்திரம் இடம்பெற்றாலும் தீர்வைப் பெறும் முயற்சியில் தற்போதைய அரசு ஈடுபடுகின்றது என்பதைச் சொல்லி வைக்க விரும்புகின்றோம். எனினும், வேகம் போதாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தீர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். எனினும், இனவாதிகள் இதனைக் குழப்பியடிக்க முயற்சிக்கின்றனர்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான யோசனைகளை முன்வைப்பதற்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் நாமும் இடம்பெற்றுள்ளோம். தீர்வுக்கான தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ளது. வழிநடத்தல் குழுவானது இடைக்கால அறிக்கையை அரசமைப்பு நிர்ணய சபைக்கு சமர்ப்பித்துள்ளது.

இதன் பின்னர் வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவானது சமர்ப்பித்துள்ள அரசமைப்புக்கான நகல் வரைவு, திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் அரசியல் நிர்ணய சபையான நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதற்கு இறுதியாக நடைபெற்ற வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பு உருவாகும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது. எனினும், இந்த விடயத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா உட்பட சர்வதேச சமூகம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய அரசு அதிக அக்கறை செலுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு மக்கள் இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் எங்களைக் கைவிடமாட்டீர்கள் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கின்றது. புதிய அரசமைப்பில் நிரந்தர அரசியல் தீர்வையே எதிர்பார்க்கின்றோம். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அந்தத் தீர்வு அமையவேண்டும். அதாவது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய அரசமைப்பு அமையவேண்டும்.

புதிய அரசமைப்பு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, தீர்வு விடயத்தில் இந்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்த விடயத்தில் நாங்கள் உங்களை தொல்லைப்படுத்துகின்றோம் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் பிரதமராகப் பதவியேற்றவுடன் எனது தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழு இங்கு வந்து உங்களை நேரில் சந்தித்தபோதும், அரசியல் தீர்வு விடயம் தொடர்பிலேயே அதிகம் பேசினோம். அதன்பின்னர் நீங்கள் இலங்கைக்கு இரு தடவைகள் வந்தபோதும், அரசியல் தீர்வு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தோம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சொன்னேன்.

இதற்குப் பதிலளித்த இந்தியப் பிரதமர், இலங்கை எமது அயல்நாடு. அங்கு மீண்டும் போர் ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டோம். எம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடனேயே இருப்போம். இலங்கை அரசு காலதாமதமின்றி அரசியல் தீர்வைக் காணவேண்டும். இதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. நான் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இரு தடவைகள் இலங்கைக்கு வந்தபோதும் ஜனாதிபதி, பிரதமரிடம் இதனை எடுத்துக் கூறியிருந்தேன். எனவே, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை இலங்கை உடன் காணவேண்டும். இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையாக – சமாதானமாக வாழவேண்டும். அதற்கான வழியை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் கூறினார்” – என்றார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com