களவுக்கு வயதெல்லை கிடையாது. ஆர்னல்ட் தலைமையிலான களவு மற்றும் மோசடிகள் அம்பலமானது.
களவு மோசடி செய்தவற்காகவே அரசியல்வாதிகள் அரசியலில் நிலைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பது பொதுவான குற்றச்சாட்டு. மோசடிப்பேர்வழிகளான அரசியல்வாதிகளிடமிருந்து விடுதலை பெறவேண்டுமாக இருந்தால் இளைய தலைமுறையினரிடம் அரசியல் தலைமைத்துவம் செல்லவேண்டும் என்றதோர் எதிர்பார்ப்பு சகல இன மக்களிடமும் காணப்படுகின்றது.
அந்த அடிப்படையில் கடந்த தேர்தலில் மக்கள் கணிசமான அளவு இளையோரை தேர்வு செய்தனர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருவர்தான் ஆர்னல்ட். அவர் யாழ் மாநகர மேயராக உள்ளார். அவரது தலைமையில் இயங்குகின்ற யாழ் மாநகரசபை நிர்வாகத்தில், கடந்த ஐந்து மாத நிர்வாகத்தில் பெரும் மோசடிகள் நடைபெற்றதை மாநகரசபையின் இலஞ்ச, ஊழல் குழு கண்டறிந்துள்ளது. நேற்றைய மாநகரசபையின் அமர்வில் அவற்றை பகிரங்கப்படுத்தியமிருக்கிறது.
யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போதே, மாநகரசபையின் முறையற்ற ஆளணி நியமனம், இலஞ்சம் பெற்றமை, சட்டவிரோத இறைச்சி விற்பனை, முறையற்ற களஞ்சிய பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை யாழ் மாநகரசபையின் இலஞ்ச ஊழல் குழு முன்வைத்தது.
நல்லூர் ஆலய திருவிழா காலத்தில் சபை அனுமதியுடன் தற்காலிக தொழிலாளிகள் 40 பேர் மாநகரசபை தொழிலாளர் சங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் 12 பேரிடம் ஒரு தொகை இலஞ்சம் பெற்றுக்கொண்டே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 12 பேரிடமும் இருந்து சங்க உறுப்பினர்களால் இதுவரை பகுதிபகுதியாக 42 ஆயிரம் ரூபா இலஞ்சப்பணம் செலுத்தியுள்ளனர். இதனை அந்த 12 பேரும் ஒப்புக்கொண்டு எழுத்து மூலம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
நல்லூர் திருவிழா காலத்தில் பணிக்கு அமர்த்த சபையால் ஒப்புதல் வழங்கப்பட்ட பணியாளர்களின் தொகையை தவிர மேலதிக பணியாளர்கள் மேயரின் சிபாரிசில் ஆனையாளரால் சபையின் அனுமதியின்றி பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதேபோல, கோம்பையன் மயானத்தில் மேயரின் ஒப்புதலுடன், ஆணையாளரால் ஒருவர் தற்காலிகமாக- ஒரு மாதத்திற்கு- பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அந்த ஒப்பந்தக்காலம் முடிந்ததும், மேலதிக ஒப்பந்தக்காலம் மேயர், ஆணையாளரின் அனுமதியின்றி வழங்கப்பட்டுள்ளது. மேயர், ஆணையாளரின் ஒப்புதல் இன்றி அவருக்கான ஒப்பந்தக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
நல்லூர் திருவிழா காலங்களில் பணியில் இருந்தவர்கள், அங்கும் கையொப்பம் இட்டுவிட்டு, யாழ் நவீன சந்தை பகுதியிலும் தாம் பணியில் இருந்ததாக கையொப்பமிட்டுள்ளனர்.
மாநகரசபையின் களஞ்சியத்தில் உள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கண்டாவளை மண்ணின் அளவிலும் பார்க்க, 12 கியூப் மண் அதிகமாக காணப்படுகிறது. அதேபோல இரும்புக்குழாய் (பொக்ஸ் பார்) 24 காணாமல் போயுள்ளன.
இந்த குற்றங்கள் தொடர்பில் அந்தந்த பகுதிக்கு பொறுப்பானவர்கள் உரிய பதிலை தரவில்லை, தொழிலாளர் சங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்கள் மறுப்பு தெரிவித்து விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையென்று இலஞ்ச ஊழல் குழு சபையில் பகிரங்கப்படுத்தியது.
இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் கூறி, விடயத்தை முடித்து வைத்தார்.
0 comments :
Post a Comment