கட்சியில் சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் பௌத்த சிங்கள வாக்குகளை பெற்றுத்தருவேன். நவீன்
ஐக்கிய தேசியக் கட்சியினுள் தன்னை சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் சிங்கள பௌத்த வாக்குகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் நான் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு இயங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் கட்சியின் வலுவான விடயங்களை வெளிக்கொணர்ந்து கட்சியை வலுப்படுத்துவேன்.
கட்சியின் இளைஞர் அணி மற்றும் இரண்டாம் நிலை தலைவர்கள் கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டுமென்றே விரும்புகின்றார்கள்.
இவர்கள் மத்தியில் எவ்வித முரண்பாடுகளும் போட்டிகளும் கிடையாது. நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டு வருவதனால் தேசிய அமைப்பாளர் பதவியை வகிப்பதில் சிரமங்கள் கிடையாது.
கடந்த தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்பட்டது. இதேபோன்று தேசிய ரீதியில் சில திட்டங்களை வகுத்து கட்சியை முன்னோக்கி நகர்த்த முடியும்.
கட்சியின் சில தொகுதி அமைப்பாளர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கட்சியிடமிருந்து கைவிட்டுப் போன சிங்கள பௌத்த வாக்குகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment