மக்கள் மனங்களில் மாற்றம் வரவிட்டால், நாட்டில் அரசியலில் எந்த மாற்றமும் இடம்பெறாது. சுனில் ஹந்துன்நெத்தி
நாட்டின் அரசியலில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டுமானல் அதற்கான மாற்றம் மக்கள் மனங்களிலிருந்தே வரவேண்டும் என ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தலைவர்கள் இல்லை என்பதா இன்று நாட்டில் உள்ள பிரச்சினை?. மைத்திரி நேரடியான தீர்மானங்களை எடுப்பதில்லை என்றும் அதற்கு அவருக்கு முதுகெலும்பில்லை என்றும் சாடியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபாலவுக்கு ஞாபக மறதி என்றும் அவர் பலவற்றை பத்திரிகைகளில் பார்த்தே அறிந்து கொள்கிறார் என்றும் நகைத்துள்ளார்.
இதனால், நாடு அராஜக நிலைக்கு சென்றுள்ளது. நேரடியாக தீர்மானங்களை எடுக்கக்கூடிய, தூக்கு தண்டனையை கொண்டு வரக் கூடிய ஒருவர் பதவிக்கு வந்தால், பிரச்சினைகளை தீர்க்க முடியும் என சிலர் கூறுகின்றனர்.
அதேபோல் கொள்ளையிட்டால் பரவாயில்லை, பழையவர்களை மீண்டும் கொண்டு வந்து நாட்டை முன்னேற்றலாம், முன்னோக்கி கொண்டு செல்லலாம் என சிலர் நினைக்கின்றனர்.
பாகிஸ்தானில் போல் கிரிக்கெட் வீரரை நாட்டின் தலைவராக கொண்டு வந்து இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என மேலும் சிலர் நினைக்கின்றனர்.
அரசியலில் எதனையும் அறியாத புதியவரை கொண்டு வந்து நாட்டை முன்னேற்றலாம் என மேலும் சிலர் நினைக்கின்றனர். சமூக ஊடகங்களில் இப்படியான சிலர் கூச்சல் போட்டு வருகின்றனர்.
மரண நிதி உதவி சங்கத்தில் தலைவராக கூட பதவி வகிக்காத அரசியல் பற்றி எதனையும் அறியாத ஒருவர் தான், நாட்டின் தலைவராக வந்தால், நாட்டின் கடனை செலுத்தி விடுவேன் என்கிறார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மாறாமல், அந்த மாற்றம் ஏற்படாது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment