Wednesday, September 12, 2018

தமிழ் மக்களை நாய்கள் என அழைத்த வடக்கு மாகாண கல்வி அமைச்சர்.

கடந்த மாதம் ஒரு கூட்ட உரையில் கலாநிதி வரை படித்த கல்வி அமைச்சர் தமிழ்ச் சொற்களின் அர்த்தம் தெரியாமல் மக்கள் மத்தியில் - மேடைகளில் - இனவாத அடிப்படையில் தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தும் வகையில் விதண்டாவாதம் பேசியது - கவலைக்கும், வேதனைக்கும், வேடிக்கைக்கும், சோதனைக்கும், நகைப்புக்கும், பகிடிக்கும், பரிகாசத்திற்கும் உரிய விடயமாகும்.

தமிழ் அரசியல் தலைமைகள், வட பகுதி மக்களை அரசியல் பற்றி சுயமாக சிந்திக்க விடாமல் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிர் காலத்தில் ஒரு சமூகத்தின் இருப்பைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் இலங்கை தேசியம் பற்றி எண்ணாது தமிழ்த் தேசியம் பற்றி கதைத்தவர்கள். இப்போது தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பற்றி கதைப்பது சிறிது தமிழ் மக்களுக்கு மன சாந்தியைக் கொடுத்தாலும், வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடையும் தறுவாயில் கல்வி அமைச்சர் உரிமைக்கான போராட்டம் பொருளாதாரத்திற்கான போராட்டம் இரண்டிலும் சமாந்தரமாக வடக்கு மக்கள் பாண் துண்டுகளைச் சிங்கள இனவாதம் வீசியதாகவும் அங்கு தமிழ் மக்கள் அதை பொறுக்கி எடுப்பதற்கு முண்டியடித்ததாகவும் அந்த உரையில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் மக்களை மறைமுகமாக செயற்பாடுகளின் மூலம் நாய்கள் என குறிப்பிட்டு, சாதாரண தமிழ் மக்கள் என்றும் தமிழ் அரசியல் எஜமானிகளுக்கு அடிமைகள் என்பதையும் நாசூக்காக விகடம் பேசியுள்ளார், கல்வி அமைச்சர். இப்போதைய வட மாகாண கல்வி அமைச்சர் தமிழ் மக்கள் கம்பி வேலிக்குள் இருக்கும் போது எங்கேயிருந்தார்?;.

தமிழ் மக்களைக் கம்பி வேலிக்குள் சிங்கள இனவாதம் கொடுமைப்படுத்தும் போது அதற்கு தமிழ் இனவாதமும் துணை புரிந்துவிட்டு, இப்போது தமிழ்த் தேசியவாதிகள் தமிழ்த் தேசியம் கதைப்பது எந்த வகையில் நியாயமானது.

சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சலுகை பற்றியே கதைப்பதாகவும் அந்த உரையில் கல்வி அமைச்சர் குறிப்பிட்டது வெறும் பித்தலாட்டமாகவுள்ளது. ஏனெனில் வரவு செலவு திட்டத்தில் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போரால் பாதிக்கப்பட்ட பகுதி என சலுகை அடிப்படையில் பணம் பெறவில்லையா?.

பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் மக்கள் சேவைக்காக மக்கள் பிரதிநிதிகளாக சென்று ஆடம்பர வாகனங்களுக்கான சலுகையைப் பெறவில்லையா?.

மூலதன நன்கொடை நிதியை மாகாண சபை உறுப்பினர்கள், மக்களுக்கு எங்கிருந்து வழங்குகின்றார்கள்?.

மக்களிடமிருந்து அரிசி, சீனி, பருப்பு, எண்ணெய் முதலியவற்றின் மூலம் கிடைக்கும் வரிப்பணத்தின் ஊடாக அல்லவா?.

ஏன் அரசியல்வாதிகள் சலுகை பெறும் போதுளூ சாதாரண தமிழ் மக்கள் பெறமுடியாது.

தமிழ் இனவாத அரசியல் வாதிகள் தமிழ்த் தேசியத்தாலும் சிங்கள இனவாத அரசியல் வாதிகள் சிங்கள தேசியத்தாலும் முஸ்லிம் இனவாத அரசியல் வாதிகள் முஸ்லிம் தேசியத்திலும் ஊறி வகுப்பு வாதம் பேச எல்லா இனத்திலும் சாதாரண மக்களே பலிக்கடாக்கள். –

புயல் பெ.ஸ்ரீகந்தநேசன் -

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com