Tuesday, September 4, 2018

இராணுவ உள்ளகத் தகவல்களை வழங்காதீர்! முப்படைத்தளபதிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நெயார் கடத்தப்பட்டமை, உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை உள்ளிட்ட பல வழக்குகளில், விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, முப்படையினர் தொடர்பான தகவல்கள் தேவைப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குமாறு நீதிமன்று முப்படைகளின் தளபதிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றன.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு எவ்வித தகவல்களும் வழங்கப்படாத நிலையில், தனது இல்லத்தில் முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ண உள்ளிட்டோரை சந்தித்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, முப்படையினர் தொடர்பான உள்ளக தகவல்களை வழங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளதாக சிங்கள இதழான „அனித்தா' தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்ன கொண்டுவந்ததையடுத்தே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அங்கு கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்ன, கோரப்பட்ட 34 பிரிவுகளில் உள்ள தகவல்கள் வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

இதன்போது, காவல்துறை மா அதிபரின் பக்கம் திரும்பிய சிறிலங்கா அதிபர், ஆயுதப்படையினரை சந்தேகநபர்களாக காட்டியமை குறித்து அதிருப்தியை வெளியிட்டதுடன் அவர்களுக்கு எதிராக எந்த சாட்சியங்களும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு பதிலளித்த, காவல்துறை மா அதிபர், பூஜித ஜெயசுந்தர, நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்றும், சந்தேக நபர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் தெரிவித்ததுடன் படையினருக்கு எதிரான போதுமான சான்றுகள் இருந்ததன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும், இராணுவத் தகவல்கள் எதையும் வழங்கக் கூடாது என்று முப்படைகளின் தளபதிகளுக்கு ஜனாதிபதி கடின உத்தரவை பிறப்பித்துள்ளதாக அச்செய்திக்தாள் குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com