Tuesday, September 18, 2018

ரணில் தொடர்பான அஸ்ரபின் நிலைப்பாடு நிலையானதா?

ரணில் சாரதியாக இருக்கும் பஸ்ஸில் பயணிக்கமாட்டேன் என்று அஸ்ரப் அப்போது சொன்னது உண்மைதான். அவர் உயிருடன் இருந்திருந்தால் தொடர்ந்தும் இதே நிலைப்பாட்டில் இருந்திருப்பார் என்று சொல்ல முடியாது.

அரசியலில் எப்போது என்ன மாற்றம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. அப்போது ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்பவே முடிவுகள் எடுக்கப்படும்.

அவர் உயிருடன் இருந்திருந்தால் மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகள் காரணமாக அவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாறி இருக்கக்கூடும்.

அஸ்ரப் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தார். பின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி ரணசிங்க பிரேமதாசாவை ஜனாதியாக்குவதற்கு ஆதரவு வழங்கினார். பின்பு சந்திரிகாவை ஜனாதியாக்குவதற்கு ஆதரவு வழங்கி அவர் தலைமையிலான சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்தார். மரணிக்கும் வரை அதிலேயே இருந்தார்.

இதைப் பதவிக்கான கட்சி தாவல்கள் என்று சொல்ல முடியாது. அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப அவரும் மாறினார் என்றே சொல்ல வேண்டும்.

அப்படிப் பார்க்கும்போது மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகள் காரணமாக அவர் ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியில் இணையும் நிலைப்பாட்டை எடுத்திருக்கக்கூடும்.

ஆனால், ரணில் சாரதியாக இருக்கும் பஸ்ஸில் பயணிக்கமாட்டேன் என்று அஸ்ரப் அப்போது சொன்னதை வைத்துக்கொண்டு அதுதான் அவரது இறுதி முடிவு என்று சொல்ல முடியாது.

அப்போது அவர் இதைக் கூறும்போது ரணிலின் சில நிலைப்பாடுகள் அஸ்ரப் க்கு பிடிக்காமல் இருந்திருக்கும். கால ஓட்டத்தில் அந்தக் கொள்கைகளை அவர் நீக்கி இருந்தால் அஸ்ரப் அவரது நிலைப்பாட்டை மாற்றி இருக்கக் கூடும்.

தங்களின் கட்சியின் நலனுக்கு அல்லது தங்களின் சமூகத்தின் நலனுக்கு ஏற்றால்போல் பெரும்பான்மை இனக் கட்சிகள் நிலைப்பாட்டை எடுத்தால் அந்தக் கட்சிகளுடன் இணைவதுதானே சிறுபான்மை இனக் கட்சிகளின் நிலைப்பாடு.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது இலங்கையின் அரசியலை பார்த்துக்க்கொண்டிருக்கின்ற அத்தனை பேருக்கும் தெரியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com