வடக்கிலுள்ள சட்டவிரோத குழுக்களை அடக்க ஜனாதிபதியிடம் அதிகாரம் கோருகிறார் இராணுவத் தளபதி.
வடக்கில் செயற்படுகின்ற சட்டவிரோத குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அதிகாரத்தினை இராணுவத்திருக்கு குறுகிய காலப்பகுதிக்கேனும் வழங்கப்பட்டால், அவற்றை திறம்படச்செய்து முடிக்க முடியும்மெனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க, அக் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்திற்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கண்டி - தலதா மாளிகைக்கு இன்று முற்பகல் சென்றிருந்த இராணுவத் தளபதியிடம், யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத குழுக்களை கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு அதிகாரம் அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி அண்மையில் தெரிவித்திருந்ததை குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள், அந்த குறித்த அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்துள்ள இராணுவத் தளபதி, “இது குறித்து பாதுகாப்பு சபை மற்றும் புலனாய்வு பிரிவின் கலந்துரையாடல்களின் போதும் கலந்துரையாடப்படும்.
குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானத்தை மேற்கொண்டு குறிப்பிட்ட சில அதிகாரங்களை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டும் வழங்கினால் அதனை தம்மால் சரியாக செயற்படுத்த முடியும்” என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு என்பது அனைத்து மக்களுக்கும் உரித்துடையது. நாட்டின் தேசிய பாதுகாப்பு சிறப்பாகவே உள்ளது. அதை இராணுவத்தினர் கவனித்துக்கொள்வர். வெளியார் அது தொடர்பில் கவலை கொள்ளத்தேவையில்லை.
மேலும் வடக்கிலிருந்து இராணுவத்தினர் வாபஸ்பெறப்படுவதாக தெற்கில் எழும் குற்றச்சாட்டக்கள் தொடர்பில் கருத்துக்கூறிய அவர், அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என்றும் முகாம்கள் இடம்மாறுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment