ஒருவரை கொலை செய்த மூவருக்கும் மரண தண்டனை.
வென்னப்புவையில் நபர் ஒருவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளுக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி வை. பெர்னாண்டோ மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
வென்னப்புவை, லுணுவில சிறிகம்பல கொலனி பகுதியை சேர்ந்த சுரன் ஹேவகே பியல் இந்திரஜித், கொளையா என்ற ஹிட்டிஹாமி அப்புஹாமிலாகே பிரசாத் பிரியங்க மற்றும் அனுராத என்ற அதாவுத ஆராச்சிலாகே அஜித் பிரியந்த ஆகியோருக்கு இந்த மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி சிலாபம் மேல் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட லுணுவில சிறிகம்பள கொலனியை சேர்ந்த ரொக்சி மனோஜ் சுரனிமல என்பவரை கொலை செய்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், குற்றம் சுமத்தப்பட்டிருந்த நபர்கள் நாம் நிரபராதிகள் எனக் கூறியதுடன் சாட்சியங்களை விசாரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன.
அரச சட்டத்தரணி பத்மலால் வீரசிங்க டி சில்வா வழக்கை தொடர்ந்திருந்ததுடன் சட்டத்தரணி திலங்க வழக்கில் ஆஜராகி வாதாடியுள்ளார்.
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் குற்றவாளிகள் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, வழக்கு தீர்ப்பால் அதிர்ச்சியடைந்திருந்த உறவினர்கள், சிறைச்சாலை அதிகாரிகளை தள்ளிவிட்டு, தமது உறவினர்களை கட்டித்தழுவி அழுதமை அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
0 comments :
Post a Comment