இராணுவம் வேண்டுமா? வேண்டாமா? கரவெட்டடி தவிசாளரின் துணிகர முடிவால் மக்கள் பணம் ஒன்றரைக்கோடி சேமிப்பானது!
சைக்கிளுக்கு காற்றுப்போனது!
கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட பிரிவில் கழிவு முகாமைத்துவ செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த செயற்பாட்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள காணியினை செப்பனிடும் பணிகளுக்கான செலவுகள் தொடர்பான கணக்கெடுப்பில் ஒன்றைகோடி செலவாகும் என்பது தெரியவந்துள்ளது.
மக்களுக்கான குறித்த அவசர வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இராணுவ உதவியை பெற்றுக்கொண்டு, காணி செப்பனிடும் பணியை இராணுவச் சிப்பாய்களைகொண்டு செய்வதனால், இராணுவ வாகனங்கள் மற்றும் யந்திரங்களுக்கான எரிபொருள் செலவுடன் கருமத்தை நிறைவேற்ற முடியும் என்றும் அவ்வாறு செய்யும்போது சுமார் ஒன்றரைக்கோடி ருபா மக்களின் பணத்தை சேமித்துக்கொள்ளவும் முடியும் என்றும் சபையில் முன்மொழியப்பட்டுள்ளது.
குறித்த முன்மொழிவை எதிர்த்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்கள் தாம் தேசியக் கொள்கையில் உள்ளவர்கள் என்றும் இராணுவத்தினரை குறித்த செயற்பாட்டினுள் உள்வாங்க முடியாது என்றும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சபையில் பெரும் வாத-பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டது.
எதிர்ப்பை மறுத்துப்பேசிய கரவெட்டி சபைத்தவிசாளர் த.ஐங்கரன், ஒரு ஒருவார கால எல்லைக்குள் காணி தொடர்பான விடயங்களை உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாம் காலத்தை தாமதிப்போமானால் பருவமழை காலத்தினுள் சிக்கி எமது வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதுடன் அடுத்த வருடமே வேலைகளை ஆரம்பிக்ககூடிய நிலையும் ஏற்படலாம். 23 கோடி ரூபா பெறுமதியான வேலைத்திட்டத்தை நாம் நேரகாலத்தை கணக்கிலெடுத்து ஆரம்பிக்கத்தவறுவோமாக இருந்தால் மக்களின் அபிவிருத்திக்கென கிடைக்கப்பெற்ற பணம் திரும்பிச் செல்வதற்கான துர்ப்பாக்கிய நிலைகூட ஏற்படும்.
எனவே நாம் எமது மக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தியை கவனத்திலெடுத்து ராணுவத்தினரின் உதவியை நாடவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம். அவ்வாறு அவர்களின் உதவியை பெறுகின்றபோது வெறுமனே எரிபொருள் செலவு உட்பட பத்தோ அல்லது பதினைந்து லட்சங்களை செலவிட்டு விடயத்தை காலக்கிரமத்தில் செய்துவதுடன் மக்களின் பணத்தில் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா வீண்விரயமாவதையும் தடுக்க முடியும்.
இங்கு மேற்கொள்ளப்படவிருக்கின்ற எந்த கருமத்தையும் நான் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ள மாட்டேன். ஆனால் எமக்கென வந்திருக்கின்ற பணம் திரும்பிச் செல்வதற்கு ஏற்றவகையில் செயற்படுவதையும் என்னால் அனுமதிக்க முடியாது. ஆனால் குறித்த பணிக்கு இராணுவத்தினரின் உதவியை பெற்றுக்கொள்ளுவதை எதிர்கின்ற தரப்பினர் அதற்கான மாற்றுவழியை இச்சபையில் காலதாமதம் இன்றி முன்வைப்பார்களேயானால் அது மக்களுக்கு பயன்தரவல்லதாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ளுவதற்கு தயங்கவும் மாட்டேன் என சவால் விடுத்தார்.
மேலும் விடயத்தை ஆதரித்து வாதிட்ட தவிசாளர் ஐங்கரன், நான் மாவீரர் குடும்பத்தை சார்ந்தவன். ஆனால் இங்கு இதை எதிர்கின்ற பலர் மறைமுகமாக இராணுவத்தினரிடம் சொந்த உதவிகளை பெற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால் நாம் இன்று மக்களின் அபிவிருத்தி பணிக்காகவே இராணுவ உதவியை பெற முனைகின்றோம். இதற்காக என்மீது சேறடிக்கப்படலாம், ஆனாலும் மக்களின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு அச்சேறடிப்புக்களை தாங்கிக்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன் என்றார்.
இராணுவ உதவியை பெற்றுக்கொள்வதை எதிர்த்துப்பேசிய தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் புஸ்பவசந்தன், தாம் தேசிய கொள்கைகள் உடையவர்கள். இராணுவத்தின் உதவியை பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
அவ்வாறே தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் பேசுகையில் , இன அழிப்பு செய்த ராணுவத்தினருக்கு தாம் ஆதரவளிக்க முடியாதென்றும் காணியை அபகரிப்பவர்களுக்கே இப்படியான ஊடுருவல்களுக்கு தாம் அனுமதிக்க கூடாதென்றும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இராணுவத்தினரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஆதரித்துப்பேசிய உறுப்பினர்கள், இச்சபையானது, அபிவிருத்திக்குரிய சபையே என்றும் மக்களின் அபிவிருத்தியே இங்கு பிரதானமானது என்றும் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் சபை அதிகளவிலான பணத்தை செலவழிப்பதற்கு போதிய பணம் இல்லாத காரணத்தாலும் எதிர்ப்பவர்களிடம் மாற்றுவழி இல்லாத காரணத்தாலும் ராணுவத்தின் உதவியை நாட வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறினர்.
தொடர்ந்து இராணுத்தினரின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், ஈ.பி.டி.பியினர் , ஐக்கிய தேசிய கட்சியினர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 20 பேர் இராணுவத்தினரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எதிராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் 7 பேரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருவருமாக ஒன்பது பேர் வாக்களித்தனர்.
இரண்டு உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இருபதுக்கு ஒன்பது என்ற ரீதியில் தீர்மானம் வெற்றியளித்தது.
இச்செயற்பாட்டினூடாக கரவெட்டி சபை மக்கள் விடயத்தில் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளது என மக்கள் பேசிக்கொள்வதை கேட்கமுடிகின்றது.
0 comments :
Post a Comment