Wednesday, September 19, 2018

த.தே.கூ வின் உள்வீட்டு பிரச்சினை வீதிக்கு வந்தது! பூநகரி பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

ஜனநாயக மரபை மீறி, மக்கள் பிரதிநிதியை சபையில் அவமதித்து மக்களுக்கு எதிராகச் செயற்பட்டிருக்கிறார் பூநகரிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம்ஐயம்பிள்ளை எனத் தெரிவித்து இன்று 19-09-2018 பூநகரியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 14-09-2018 ஆம் திகதி பூநகரி பிரதேச சபையில் இடம்பெற்ற மாதாந்தக் கூட்டத்தின் போது கௌரவ உறுப்பினர் யோன்பின்ரன் மேரிடென்சியா நிதிக்குழு அறிக்கை மீது கருத்து கூறும் போது சபையில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் கடும் இடையூறு செய்தனர். இதனால் யோன்பின்ரன் மேரிடென்சியா தொடர்ந்து கருத்துக் கூற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சபைக்குத் தலைமை தாங்கிய தவிசாளர் ஐயம்பிள்ளை நேரகாலம் குறிப்பிடாமல் சபையினை ஒத்திவைப்பதாக அறிவித்து சபையிலிருந்து வெளியேறிச் சென்றார். அவ்வாறு வெளியேறி செல்லும் போது 'வாயை மூடிக்கொண்டு வெளியே போ' என்று உறுப்பினரான யோன்பின்ரன் மேரிடென்சியாவை நோக்கி அச்சுறுத்தும் வகையில் வார்த்தை பிரயோகம் செய்து கட்டளையிட்டார். இது சபையின் ஜனநாயக மரபுக்கும் மக்கள் பிரதிநிதி என்ற உரிமைக்கும் எதிரான செயலாகும். அத்துடன், இது மக்கள் பிரதிநிதியாகிய யோன்பின்ரன் மேரிடென்சியின் கௌவரவத்திற்கும்,சபை நடவடிக்கைக்கும் முரணானது என்பதோடு, புதிய தேர்தல் முறையின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பெண் உறுப்பினர்களுக்கு சபையில் உரிய பாதுகாப்பு, கௌரவம், நியாயம் என்பனவற்றை இல்லாதொழிக்கும் தீயமுயற்சியுமாகும். எனத் தெரிவித்து தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யதனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தவிசாளரே தகைமையை வளர்த்துக்கொள், பூநகரியில் நடப்பது காட்டாட்சியா? மக்களாட்சியா? பெண்களை மதிக்க அரசியல் அநாகரீகத்தை எதிர்ப்போம், மக்கள் உரிமையை காப்போம், பெண்களை அவமதிக்காதே ஜனநாயக உரிமையை மீறாதே, பிரதேச சபையா அல்லது கட்சி அலுவலகமா போன்ற வாசகங்கள எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அ. ஜயம்பிள்ளை அவர்களிடம் வினவிய போது தான் அவ்வாறு நடந்துகொள்வில்லை என்றும், சபையில் அமைதியின்மை ஏற்படுவதனை தடுக்கவே இரண்டு உறுப்பினர்களை வெளியேறுமாறு அறிவித்ததாகவும் தெரிவித்த அவர் கட்சி சார்ந்து சபையினை கொண்டு செல்லவில்லை என்றும் குறிப்பிட்டார்

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் பூநகரி வாடியடிச் சந்தியிலிருந்து ஆரம்பமாகி பூநகரி பிரதேச சபையினை சென்றடைந்து நிறைவுற்றது. இதில் பூநகரி பிரதேச சபையின் எதிர்தரப்பு உறுப்பினர்கள் கரைச்சி கண்டாவளை, பளை பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் பெண்கள் அமைப்பினர் பலா் கலந்துகொண்டனர்








0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com