Tuesday, September 11, 2018

அரச தொழில் பெற்றுத்தருவதாக ஏமாற்றிய 3 பெண்கள் கைது. இவ்வாண்டில் 1968 லஞ்ச முறைப்பாடுகள்.

அரச நிறுவனங்களில் தொழில் பெற்றுத்தருவதாக நபர்களை ஏமாற்றிய 3 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் தம்மை அரச உயர் அதிகாரிகள் என்று காட்டிக்கொண்டுள்ளதுடன், ஒவ்வொரு நபரிடமிருந்தும் 12500 ரூபாய்களை மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பில் ஹோமாகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, கொழும்பு, ஹிம்புத்தட்டண மற்றும் ஜம்புமரச்சந்தி ஆகிய பிரதேசங்களிலிருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம் இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் 1968 முறைப்பாடுகள் தமது ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது.

அந்த முறைப்பாடுகளில் 1264 முறைப்பாடுகளை விசாரணைக்காக தெரிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி கூறினார்.

அவற்றுள் மோசடி முறைப்பாடுகள் 900, ஊழல் முறைப்பாடுகள் 254, தவறாக சொத்து சேர்த்த முறைப்பாடுகள் 63 மற்றும் 47 சுற்றிவளைப்புக்கள் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த அண்டின் ஆகஸ்ட் 15 வரையான காலத்தில் 28 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரியந்த சந்திரசிறி கூறினார்.

விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 29 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதேவேளை குறித்த காலப்பகுதியில் 74 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்று 57 மேல் நீதிமன்றங்களிலும் 17 நீதவான் நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி கூறினார்.

வடபகுதியிலும் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் நெருங்கிய சகாவான முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் இவ்வாறு அரச தொழில் பெற்றுத்தருவதாக பணமோசடி செய்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் மாதம் இறுதிப்பகுதிக்குள் பணத்தை செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com