Wednesday, September 12, 2018

2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் யார் வேட்பாளர் என்பதை கட்சியே முடிவு செய்யும் என்கின்றார் மஹிந்தர்!

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் வேட்பாளராக இருக்கலாம் என்றும், அதனை கட்சியே முடிவு செய்யும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ´த ஹிந்து´ பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எடுத்த தீர்மானம் இந்தியாவின் உள்ளக நடவடிக்கைகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றிருப்பின் வேறு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும் எனவும் இருப்பினும் இது இந்தியாவின் உள்ளக விடயம் என்பதால் இந்த விடயம் தொடர்பில் தனக்கு எவ்வித கருத்தும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் விரிவுரை ஒன்றை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

தன்னுடைய கட்சி 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவது தொடர்பில் 100 சதவீதம் நம்பிக்கை இருப்பதாகவும் நாம் பதவிக்கு வந்ததும், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட இந்தியாவுடனான அனைத்துப் சிக்கல்களையும் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்றை முன்மொழிவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொறிமுறை 2008 - 2009 யுத்த இடம்பெற்ற காலத்தில் இலங்கை அதிகாரிகள் மூவரும் இந்திய அதிகாரிகள் மூவரும் இணைந்து உருவாக்கிய ட்ரைகா பொறிமுறையை ஒத்ததாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரைகா பொறிமுறையை தயாரிப்பதற்காக இலங்கை சார்ப்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இந்தியா சார்ப்பில் இராஜங்க பாதுகாப்பு ஆலோசகர், வெளிநாட்டு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரும் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.

சீன வியாபாரத்தை இலங்கைக்கு எடுத்து வந்து இலங்கையை கடனுக்குள்ளாக்கியதாக தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் தற்போதைய அரசாங்கம் அதனை சிக்கலான நிலமைக்கு மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் இந்தியாவிற்கும் தனக்கும் இடையில் நிறைய தவறான புரிதல்கள் இருந்ததாகவும் அவற்றை சீர் செய்து கொள்வதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு தான் தலைமைத்துவம் வழங்குவதாகவும் 19 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு போட்டியிட முடியும் எனவும் அதற்காக நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அனைவரும் விரும்பும் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது அதற்கு மாற்று தீர்வாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி போட்டியிட குறைந்த பட்ச வயதெல்லை 30 முதல் 35 வயதிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தனது மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்த முடியாது எனவும் இருப்பினும் தனது சகோதரருக்கு ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக வேட்பாளராக நிற்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தன்னுடைய கட்சி மற்றும் மக்கள் ஒன்றிணைந்து தேவையான நபரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com