கம்பன்பிலவின் இருபதிற்கு எதிரான மனு 17ம் திகதிக்கு ஒத்திவைப்பு.
மக்கள் விடுதலை முன்னணியால் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்ட 20வது அரசியல் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு உச்ச நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிசிர ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் 20வது அரசியல் திருத்த யோசனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது மாற்றுக் கொள்கைகளுக்கான மத்தியநிலையம் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக இந்நாட்டு மக்கள் பல தடவைகள் தமது விருப்பத்தை தெரிவித்திருப்பதாக கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க முதல் ஆட்சிக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக மக்கள் வரம் பெற்றதாகவும், நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிப்பதன் ஊடாக மக்களின் இறைமை மீறல் இடம்பெறுவதில்லை என்றும் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.
இதன்பின்னர் மனு மீதான மேலதிக விசாரணைகள் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஜேவிபி யினரால் தனிநபர் பில் ஆக கொண்டுவரப்பட்டுள்ள குறித்த முன்மொழிவிற்கு ஸ்ரீ ஜயவர்னபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் எதிர்பை தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற தேசிய கல்விமான்கள் பிக்கு ஒன்றியத்தின் கூட்டத்தில் அவர் பேசும்போது , நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை என்ற வெற்று சத்தத்திற்கு மத்தியில் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை பலப்படுத்தி பிரிவினைவாதிகளுக்கு தேவையானவற்றை வழங்க அரசியலமைப்புத் திருத்தங்களை செய்ய முடியாது என்பதால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு என்ற போலியான கோஷத்தை எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதியை பொது வாக்கெடுப்பில் தெரிவு செய்வதற்கு பதிலாக அந்த அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டிருக்கும் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவிருக்கும் சகல வழிகளையும் அடைக்க வேண்டும்.
இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக அறிக்கையிட்டு வெளியில் இறங்குமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு சவால் விடுக்கின்றேன். அப்படி வெளியேறும் மக்கள் பிரதிநிதிகளை மலர் மாலை அணிவித்து வரவேற்க மக்கள் தயாராக இருக்கின்றனர் எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment