Sunday, August 19, 2018

முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதா ? அரச புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் முன்னாள் புலி உறுப்பினர்.

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களும், கருணா அணியினர்களும் தப்பி ஓடியபோது அவர்களது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் விற்பனை செய்ததாகவும், அவ்வாறான ஆயுதங்கள் இன்றும் முஸ்லிம்களிடம் உள்ளதாகவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் பகிரங்கமாக கூறியுள்ளார்.

இவரது கூற்று இன்று அரசியல் மட்டத்தில் பாரிய விமர்சனங்களை தோற்றுவித்துள்ளதுடன் இதனை சாதாரணமான ஒரு பேச்சாக எடுத்துக்கொள்ள முடியாது. சிங்கள இனவாதிகள் தொடக்கம் மதத் தலைவர்கள் வரைக்கும் அரசியலில் தங்களை பிரபலப்படுத்துவதற்காக பாவிக்கின்ற ஒரு துரும்புதான் முஸ்லிம் மக்களாகும்.

அதுபோலவே அரசியலில் தமிழ் மக்கள் மத்தியில் தடம்பதிக்க முற்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதாக புரளியை கிளப்பிவிட்டு அதன்மூலம் பிரபலம் அடையவும், அரசியல் இலாபம் பெறுவதற்குமான முயற்சியா ? அல்லது இதற்குப்பின்னால் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்று சிந்திக்க தோன்றுகின்றது.

இலங்கையின் அரச புலனாய்வு துறையினர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. விடுதலை புலிகள் பலமாக இருந்த காலங்களில் யாராலும் பிரவேசிக்க முடியாத அவர்களது கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவும் அணியினர்களை அனுப்பி புலிகளின் விமானப்படை தளபதி சங்கர் உட்பட பல முன்னணி தளபதிகளை கொலை செய்தார்கள்.

அத்தோடு துல்லியமான புலனாய்வு தகவலின் அடிப்படையிலேயே புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை விமானத்தாக்குதல் மூலம் அழித்தார்கள்.

சர்வதேச பொலிசாரின் கண்களில் மண்ணை தூவிக்கொண்டு புனைப்பெயர்களில் நடமாடிய புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி அவர்களை மலேசியாவில் அதிரடியாக கைது செய்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவந்தவர்கள்.

இவ்வாறு எத்தனையோ சாதனைகளை இலங்கை புலனாய்வு துறையினர்கள் செய்ததுடன், இறுதி யுத்த காலத்தில் கொழும்பில் புலிகளின் தற்கொலை தாக்குதல் நடைபெறாதவாறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

இலங்கை அரசாங்கத்திடம் இப்படியான திறமையான புலனாய்வு துறையினர்கள் இருக்கும்போது முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் இருப்பது மட்டும் அவர்களுக்கு தெரியாமல் போனது எவ்வாறு ?

2004 இன் இறுதியில் கருணா அணியினர்கள் ஆயுதங்களை களைந்துவிட்டு தப்பி சென்றார்கள். அதுபோல் 2009 இல் இறுதி யுத்தம் நடைபெற்று புலிகள் இயக்கத்தின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இன்றைய நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களிடம் உள்ள ஆயுதங்களை களையவில்லை என்றும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் கூறுவது நியாயமென்றால், கடந்த 2005 தொடக்கம் 2014 இறுதி வரைக்கும் மகிந்த ராஜபக்ஸவே இந்த நாட்டை ஆட்சி செய்தார். ஏன் மகிந்தவினால் முஸ்லிம்களின் ஆயுதங்களை கண்டுபிடிக்கவில்லை ? அல்லது களைய முடியவில்லை ?

புலனாய்வு துறையினர்கள் உட்பட அரச படையினர்களை மிகவும் திறமையாக வழி நடாத்திய அன்றைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவுக்கு இது தெரியாமல் போனது எவ்வாறு ?

குறித்த காலப்பகுதிக்குள் முஸ்லிம் மக்களை சிங்களவர்கள் தாக்கி அவர்களது பொருளாதாரத்தை அழித்தபோது இந்த ஆயுதங்களை அவர்கள் ஏன் பாவிக்கவில்லை ?

எனவே புனர்வாழ்வு பெற்ற ,முன்னாள் புலி உறுப்பினர்களின் இந்த அறிவிப்பானது பின்னணி அரசியல் நோக்கம் கொண்டதே தவிர எந்தவித உண்மையுமில்லை.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com