தென்கிழக்குப் பல்கலைக்கலைக்கழகத்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை!
மூன்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சிரேஷ்ட விரிவுரையாளர் பதவி இழந்தார்! (ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தமை உட்பட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த விரிவுரையாளர் கடந்த வருடம் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவர் அதே திகதியிலிருந்து பதவி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மாணவி ஒருவரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியமை, அவருக்கு உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியமை மற்றும் இந்த விவகாரம் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், அவ்வாறு முறையிட்டால் பரீட்சையில் சித்தியடையாது செய்வேன் என்று அச்சுறுத்தியமை என்பன தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதனையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாத காலப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் காரணமாக பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் குறித்த சிரேஷ்ட விரிவுரையாளரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்குமாறும் கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்தன.
இவ்வாறானதொரு நிலையிலே அவர் சிரேஷ்ட விரிவுரையாளர் பதவியிலிருந்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் இடைநிறுத்தப்பட்டதுடன், அவருக்கான மாதாந்தக் கொடுப்பனவாக, அவர் பெற்று வந்த மாதச் சம்பளத்தின் அரைப் பகுதி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக பேரவையினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் கொழும்பு, பல்கலைக்கழக சட்ட பீட விரிவுரையாளர்கள் அடங்கிய குழுவினரால் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து அவர் மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதனையடுத்து குறித்த விரிவுரையாளருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டுமென விசாரணைக் குழு சிபார்சு செய்து தென்கிழக்குப்ப ல்கலைக்கழக பேரவைக்கு தமது அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.
இது தொடர்பில் கடந்த மாதம் கூடி ஆராய்ந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவை அவரை பணியிலிருந்து நீக்குவதென தீர்மானித்தது. இதன்படி அவர் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலப் பகுதியிலிருந்து பதவி நீக்கஞ் செய்வதாக பல்கலைக்கழகப் பேரவை தீர்மானித்தது.
அத்துடன், அவர் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலத்திலிருந்து அவருக்கு மாதாந்தம் வழங்கப்பட்ட அரை மாதச் சம்பளத்தையும் மீளப் பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அந்தப் பணத்தை அவரது பணிக்கொடை கொடுப்பனவிலிருந்து மீளப் பெறுவதாகவும் பல்கலைக்கழகப் பேரவை தீர்மானித்துள்ளாகவும் தெரிய வருகிறது.
இது தொடர்பான கடிதம் பதவி நீக்கஞ் செய்யப்பட்ட குறித்த சிரேஷ்ட விரிவுரையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ நாடாளுமன்றில் தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்று அவர் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த உரை தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தினரிடையே பாரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருந்ததோடு கண்டனங்களுக்கும் உள்ளாகியிருந்தது.
குறித்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விரிவுரையாளர் மீதான குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு, அந்தப் பல்கலைக்கழகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், அங்குள்ள ஒட்டுமொத்த மாணவிகளை அவமதிக்கும் வகையிலும் அமைச்சர் கருத்து வெளியிட்டமையைப் பலரும் வெளிப்படையாக கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே குறித்த விரிவுரையாளர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
'மெட்ரோ நியூஸ்'
0 comments :
Post a Comment