மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பிற்போக்கு இனவாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும்!
பதவிக்காலம் முடிவடைந்த சில மாகாண சபைகளுக்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்தாது அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. இதே நேரத்தில் வட மாகாண சபை உட்பட வேறும் சில மாகாண சபைகளின் பதவிக் காலமும் இவ்வருட இறுதியில் முடிவடைய இருக்கின்றது. அவற்றின் தேர்தல்களும் உரிய காலத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் நடத்தாது என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சூசமாகச் சொல்லியும் விட்டார். சில நாட்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர், மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பனவற்றுக்கு முன்னதாக நடத்தப்படும் எனச் சொன்னார். அடுத்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் எப்பொழுது நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும். அதன்படி பார்த்தால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு மாகாண சபைத் தேர்தல் இல்லை என்பது புலனாகும்.
சில வேளைளில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் கூட உரிய காலத்தில் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் நடத்தாமல் இழுத்தடிப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது. அதில் முக்கியமானது பழைய முறையிலா அல்லது புதிய முறையிலா நடத்துவது என்பது. புதிய முறையில் நடத்தினால் அது சிறுபான்மை இனங்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சில தமிழ் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. ஜே.வி.பி. ஒரு குட்டி முதலாளித்துவ சிங்கள தேசியவாதக் கட்சி என்ற போதிலும் அதுவும் கூட புதிய தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆக, எதிர்க்கட்சிப் பதவியை வைத்துக்கொண்டு, அதனால் வரும் சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிற தமிழரசுக் கட்சி ஒரு தேசிய சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதும், ஐ.தே.க. அரசாங்கத்துடன் உள்ள வர்க்க – அரசியல் ஐக்கியம் காரணமாக புதிய தேர்தல் முறைக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பதை எதிர்க்காமல் மௌன அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இழுத்தடித்து வருவதற்கு தேர்தலை பழைய முறையில் நடத்துவதா அல்லது புதிய முறையில் நடத்துவதா என்ற நடைமுறைப் பிரச்சினைகளை விட, அரசியல் ரீதியான காரணமே பிரதானமானது. அதாவது தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் படுமோசமான தோல்வியைச் சந்திக்கும் என்பதே காரணமாகும். இது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாகும்.
நாம் முன்னரே சில தடவைகள் சுட்டிக் காட்டியது போன்று, இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து சில மாதங்களிலேயே மக்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது. (அதற்குப் பல காரணங்கள், அதை அலசுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம்) அது அரசாங்கத்துக்கும் தெரிந்த காரணத்தால்தான், தமக்கு மக்கள் மத்தியில் என்ன நிலை இருக்கிறது என்று அறிவதற்கு தென்னிலங்கையில் சில பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்திப் பார்த்தார்கள். அப்படி நடத்திய தேர்தல்கள் எல்லாவற்றிலுமே அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இரண்டும் படுதோல்வியடைந்தன.
அதன் காரணமாக உள்ள+ராட்சித் தேர்தல்களை நடத்தப் பயந்து, இரண்டரை வருடங்களாக இழுத்தடித்து, பின்னர் தவிர்க்க இயலாத சூழலில் தேர்தலை நடத்தினார்கள். அத்தேர்தலில் முன்னரிலும் பார்க்கப் படுமோசமாகத் தோல்வியைத் தழுவினார்கள். அதன் காரணமாகவே இப்பொழுது மாகாண சபைத் தேர்தல்களை நடத்தப் பயந்து இழுத்தடித்து வருகின்றனர். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் எப்பொழுது தேர்தல் நடத்தினாலும் அரசாங்க கட்சிகள் இரண்டும் படுதோல்வியடையும் என்பதும், வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர இதர ஏழு மாகாணங்களிலும் கூட்டு எதிரணி அமோக வெற்றி பெறும் என்பதும் நிதர்சனமான உண்மை.
இது ஒருபுறமிருக்க, மாகாண சபைத் தேர்தல்களை – குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாது இழுத்தடிப்பதில் தமிழ் அரசியல் தலைமைக்கும் இரகசியமான முறையில் விருப்பம் உண்டு. வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாணத்தின் ஆயுள்காலத்தை நீடிக்கும்படி கோரி அரசாங்கத்தை இரகசியமாக அணுகியதாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தகவல் வெளியானது. இதுவும் தேர்தல் பயத்தின் காரணமாகத்தான். விக்னேஸ்வரனுடன் முரண்பாடு இருந்தாலும், தமது முரண்பாடு அம்பலத்துக்கு வருவதைத் தவிர்ப்பதற்கும், சில வேளைகளில் தேர்தலில் பின்னடைவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், சம்பந்தன் குழுவினருக்கும் இதில் உடன்பாடு உண்டு.
தற்போதைய சூழலில் வட மாகாண சபைத் தேர்தல் நடந்தால் (மேற்கத்தைய, இந்தியத் தரப்புகள் தலையிடாமல் இருந்தால்) சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அணியாகவும், விக்னேஸ்வரன் தலைமையிலான இன்னொரு அணி தனியாகவும் களமிறங்கக்கூடிய சூழல் உண்டு. இதில் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெற்றாலும் கூட, பிற்போக்கு தமிழ் தேசியவாத சக்திகள் பலவீனமடையும் என்பது நிச்சயம். அதனால், பிரிந்து நிற்பது தமிழ் தேசிய நலன்களுக்கு பாதகம் என்று சொல்லி (தமிழ் தேசிய நலன்கள் என்பது தமிழ் மக்களின் நலன்கள் அல்ல, மாறாக தமிழ் மக்கள் மத்தியிலுள்ள அற்ப தொகையான பிற்போக்கு இனவாத மேட்டுக் குழாமினரின் நலன்கள் என்று அர்த்தம் கொள்க), உள் – வெளி சக்திகள் இவர்களை ஒன்றிணைந்து போட்டியிட வைக்கவே முயற்சிகள் நிகழும் என்பதும் உண்மை.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, அங்கு தமிழ் மக்களை விட, முஸ்லீம் – சிங்கள மக்களின் கூட்டு எண்ணிக்கை அதிகம் என்பதால், அங்கு தமிழ் பிரிதிநிதித்துவத்தைப் பாதுகாக்க கட்சி வேறுபாடின்றி அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இது எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது ஒருபுறமிருக்க, இது சரியான அணுகுமுறையா என்ற கேள்வியும் இருக்கின்றது.
ஏனெனில், கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழ்கின்ற பிரதேசம் என்ற யதார்த்தம் அங்கு உள்ளது. இந்த நிலைமையில் தேசியக் கட்சிகள் மூவின மக்களையும் உள்வாங்கி அரசியல் செய்கையில், இன (தமிழ் – முஸ்லிம்) அடிப்படையிலான கட்சிகள் தனித்து அரசியல் செய்வது சரியா, பயன் தருமா என்ற கேள்வி எழுகின்றது. இங்கும் கூட மக்களை ஏமாற்றவே இன அடிப்படையிலான கோசம் முன் வைக்கப்படுகின்றது.
ஏனெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழமைபோல தமிழ் தேசியவாதம் பேசி கடந்த தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றிபெற்ற பின்னர் என்ன செய்கிறது? தமிழ் தேசியத்தைக் கைவிட்டுவிட்டு, மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளால் இலங்கையில் நிறுவப்பட்ட வலதுசாரி அரசாங்கத்தைப் பாதுகாக்க எவ்வித நிபந்தனையுமின்றி அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றது.
முஸ்லிம் கட்சிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைத்து முஸ்லிம் கட்சிகளும் இஸ்லாமிய தேசியவாதத்தை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்றாலும், பின்னர் பதவிக்கு வரும் எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவற்றுடன் இணைந்துவிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.
எனவே உண்மை என்னவென்றால், தமிழ் – முஸ்லிம் தலைமைகள் தத்தமது தேசியவாதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தாலும், அவர்கள் அந்த இனங்களில் உள்ள ஏகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கவில்லை. அந்த இனங்களிலுள்ள ஒரு குறிப்பிட்ட வரக்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக முழு மக்களினதும் பிரதிநிதிகள் போல் நடித்துவிட்டு, பின்னர் சிங்கள முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து விடுவர். இதுதான் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. மக்கள் இதை விளங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து ஏமாந்து வருகின்றனர்.
குறிப்பாக, இலங்கைத் தமிழ் மக்கள் இந்த விடயத்தில் வடிகட்டின முட்டாள்களாகவே தொடர்ந்து இருந்து வருகின்றனர். ஏனெனில், தென்னிலங்கையில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரை “சுற்றிச் சுற்றி சுப்பற்றை கொல்லைக்குள்ளே”தான் நின்று உழல்கின்றனர்.
முன்பு தமிழரசு – தமிழ் காங்கிரஸ் என்ற ஒரே வர்க்க, ஒரே அரசியலின் இரண்டு பிரிவுகளுடனும் ‘கன்னை’ பிரிந்து நின்றனர். இப்பொழுது சம்பந்தன் அணி – விக்னேஸ்வரன் அணி என்ற அதே விதமான இரண்டு அணிகளுக்கிடையிலும் கன்னை பிரிந்து நிற்கின்றனர். இங்கேதான் தமிழ் மக்கள் மீண்டும் தவறு விடுகின்றனர்.
அதாவது, சம்பந்தன் அணி – விக்னேஸ்வரன் அணி என்பது அரசியல் ரீதியாக வெவ்வேறானவை அல்ல. இரண்டினதும் அரசியல் அடிப்படை ஒன்றுதான். அதாவது, இரண்டுமே பிற்போக்கு தமிழ் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. இரண்டினதும் சமூக அடிப்படை யாழ்.மையவாத, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, உயர்சாதி மேட்டுக்குழாமினர்தான். இவர்கள் இருவருமே ஏகாதிபத்திய விசுவாசிகள். இப்பொழுது இவர்களுக்கிடையில் உள்ள முரண்பாடு சம்பந்தன் குழு அரசாங்கத்தை ஆதரிக்கின்து, விக்னேஸ்வரன் குழு எதிர்க்கின்றது என்பதுதான்.
இது தற்காலிகமானது. நாளைக்கே தேர்தல் நடந்து கூட்டு எதிரணி ஆட்சிக்கு வந்தால் (பெரும்பாலும் அதற்கான வாய்ப்புகள்தான் உண்டு), சமபந்தன் அணி அரச எதிர்ப்பாளர்களாக மாறும். அப்பொழுது சம்பந்தன் அணிக்கும், விக்னேஸ்வரன் அணிக்கும் இடையில் இப்பொழுது நிலவுகின்ற ஒரேயொரு முரண்பாடும் அகன்றுவிடும். விக்னேஸ்வரன் இப்பொழுது சம்பந்தன் அணியை எதிர்ப்பது, தமிழ் அரசியல் அதிகார பீடத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி, தமிழ் மக்களினதோ, தமிழ் தேசியத்தினதோ நலன்களுக்காக அல்ல. ஆனால் அதற்காக தமிழ் தேசியவாதம் பற்றி உரக்கக்கூவி மக்களை ஏமாற்றுகிறார்.
இந்த நிலைமையில், தமிழ் மக்களின் அரசியல் போக்கில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. இதை வரப்போகும் மாகாண சபைத் தேர்தலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அதற்கான ஒரு நல்ல சூழல் தோன்றியுள்ளது. அதிகாரப் போட்டி காரணமாக சம்பந்தன் – விக்னேஸ்வரன் குழுவினரிடையே தோன்றியுள்ள முரண்பாடு அதற்கான வாய்ப்பைத் திறந்துவிட்டுள்ளது. அதைப் பயன்படுத்த வேண்டியது தமிழ் மக்கள் மத்தியிலுள்ள உண்மையான மாற்று சக்திகளின் கடமையாகும்.
இதற்கு முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று விக்னேஸ்வரன் அணிதான் என்ற மாயையை மக்கள் மத்தியில் உடைத்தெறிய வேண்டும். அவர்கள் இருவரும் ஒருவரேதான். உண்மையான மாற்று, தமிழ் மக்கள் மத்தியிலுள்ள ஜனநாயக – முற்போக்கு சக்திகள்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். நிரூபிப்பதன் மூலமே மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். (இதற்கு ஒரு உதாரணம் – சிங்கள மக்களிடையே ஐ.தே.கவின் பாரம்பரிய எதிரி சிறீ.ல.சு.க. தான் என்ற நிலை இருந்தது. ஆனால் சிங்கள ஜனநாயக – முற்போக்கு சக்திகள் சரியான முறையில் வேலை செய்ததின் மூலம், ஐ.தே.கவுக்கு மாற்று சிறீலங்கா பொதுஜன பெரமுன தான் என்ற இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்)
அதற்கான முதல் பணியாக, கடந்த காலத்தில் ஏற்பட்ட வேண்டத்தகாத, கசப்பான சிறுசிறு முரண்பாடுகளை ஒருபக்கம் தூக்கி வீசிவிட்டு, தமிழ் மக்கள் மத்தியிலுள்ள உண்மையான ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் (கட்சிகள்) ஒன்றிணைந்து ஒரு பரந்துபட்ட முனினணியைத் தோற்றுவிக்க வேண்டும். இதை வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் உலகம் மாறினாலும், தமிழ் மக்களின் பிற்போக்குத் தலைமை ஒருபோதும் மாறாது என்ற சூத்திரத்தைப் பொய்யாக்க வேண்டும்.
இது சாதிக்க முடியாதது அல்ல. எல்லா ஜனநாயக – முற்போக்கு சக்திகளும் மனது வைத்தால் இந்த அற்புதத்தை நிகழ்த்த முடியும். இதற்கான பொன்னான வாய்ப்பு – குறிப்பாக வட மாகாணத்தில் இப்பொழுது உருவாகியுள்ளது. அதைப் பற்றிப் பிடிப்பது நம் எல்லோரினதும் கடமை.
வானவில் இதழ் 92
0 comments :
Post a Comment